இலங்கை வெள்ளை வேன் கடத்தல் விவகாரம் - தகவல் வெளியிட்ட முன்னாள் அமைச்சர் கைது

கோப்புப்படம் படத்தின் காப்புரிமை Fairfax Media via Getty Images
Image caption கோப்புப்படம்

கடந்த அரசாங்கத்தின் முக்கிய அமைச்சு பதவியை வகித்த முன்னாள் இலங்கை சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்ன கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், முன்னாள் அமைச்சர் ராஜித்த சேனாரத்ன கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

ஜனாதிபதித் தேர்தல் காலப் பகுதியில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை ஏற்பாடு செய்து, மஹிந்த ராஜபக்ஷ ஆட்சி காலத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் வெள்ளை வேன் கடத்தல் தொடர்பில் தகவல்களை வெளியிட உதவி புரிந்த குற்றச்சாட்டின் கீழ் இவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

முன்னாள் அமைச்சர் ராஜித்த சேனாரத்னவை கைது செய்யுமாறு கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றம் கடந்த 24ஆம் தேதி குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு பிடியாணை உத்தரவு பிறப்பித்திருந்தது.

தன்னை கைது செய்வதை தடுக்கும் வகையில் உத்தரவொன்றை பிறப்பிக்குமாறு ராஜித்த சேனாரத்ன மூன்று தடவைகள் நீதிமன்றத்தில் முன்பிணை கோரிய போதிலும், நீதிமன்றம் அதற்கு மறுப்பு தெரிவித்திருந்தது.

இந்நிலையில், ராஜித்த சேனாரத்ன சுகயீனம் காரணமாக கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

எவ்வாறாயினும், ராஜித்த சேனாரத்னவிற்கு சொந்தமான வீடுகள் நேற்று மற்றும் நேற்று முன்தினங்களில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.

ஏன் கைது செய்யப்பட்டார்?

ஜனாதிபதித் தேர்தல் காலப் பகுதியில் முன்னாள் அமைச்சர் ராஜித்த சேனாரத்ன கடந்த நவம்பர் மாதம் 10ஆம் தேதி ஊடக சந்திப்பொன்றை நடத்தியிருந்தார்.

படத்தின் காப்புரிமை RAJITH SENARATHNA

இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் வெள்ளை வேன் கடத்தியதாக கூறப்படும் விவகாரம் மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகளின் தங்கங்களை கடத்தியதாக கூறப்படும் விவகாரம் ஆகியவற்றில் பணியாற்றியதாக கூறப்படும் இரண்டு பேரே வருகைத் தந்திருந்தனர்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் காலப் பகுதியில் இடம்பெற்றதாக கூறப்படும் வெள்ளை வேன் கடத்தல் மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு சொந்தமான தங்கங்கள் மற்றும் வெளிநாட்டு நாணயங்களை கடத்தியதாக கூறப்படும் விவகாரம் ஆகியன, ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கிய கோட்டாபய ராஜபக்ஷவின் தலைமையிலேயே முன்னெடுக்கப்பட்டதாக அந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துகள் வெளியிடப்பட்டன.

வெள்ளை வேனில் கடத்தப்பட்டவர்கள் பல்வேறு அச்சுறுத்தல்கள் மற்றும் துன்புறுத்தல்களுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டதாகவும் அந்த ஊடக சந்திப்பில் கருத்து வெளியிடப்பட்டது.

இவ்வாறு கொலை செய்யப்பட்டவர்களின் உடல்கள் வெட்டப்பட்டு, முதலைகளுக்கு உணவாக வீசப்பட்டதாகவும் ஊடக சந்திப்பில் கலந்துக்கொண்டவர்கள் தகவல்களை வெளியிட்டிருந்தனர்.

ஜனாதிபதி தேர்தலின் பின்னர் விசாரணைகள் ஆரம்பம்

முன்னாள் அமைச்சர் ராஜித்த சேனாரத்னவின் தலைமையில் நடத்தப்பட்ட ஊடக சந்திப்பில் வெளியிடப்பட்ட தகவல்கள் தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டதாக குற்றப் புலனாய்வு திணைக்களம் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் அறிவித்திருந்தது.

அதன்பின்னர் மேலதிக விசாரணைகளுக்காக நீதிமன்ற உத்தரவிற்கு அமைய ஊடக சந்திப்பில் கலந்துக்கொண்டு தகவல்களை வெளியிட்ட இரண்டு சந்தேகநபர்களும் கடந்த 13ஆம் தேதி குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

படத்தின் காப்புரிமை RAJITH SENARATHNA

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடம் குற்றப் புலனாய்வு திணைக்களம் விசாரணைகளை நடத்திய நிலையில், சந்தேகநபர்களை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியிருந்தனர்.

நீதிமன்ற உத்தரவின் பேரில் இரண்டு சந்தேகநபர்களும் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்ற நிலையிலேயே ஊடக சந்திப்பை ஏற்பாடு செய்த முன்னாள் அமைச்சர் ராஜித்த சேனாரத்ன இன்று கைது செய்யப்பட்டார்.

ராஜித்த சேனாரத்னவின் ஊடக செயலாளர் தலைமறைவு

கொழும்பில் கடந்த நவம்பர் மாதம் 10ஆம் தேதி நடத்தப்பட்ட ஊடக சந்திப்பை ஏற்பாடு செய்ததாக கூறப்படும் முன்னாள் அமைச்சர் ராஜித்த சேனாரத்னவின் ஊடக செயலாளர் எம்.ஐ.ஜே. விஜேநாயக்க (மலித்) தலைமறைவாகியுள்ளார்.

ராஜித்த சேனாரத்னவின் முன்பிணை மனு நீதிமன்றத்தினால் நிராகரிக்கப்பட்ட நிலையில், அவரது ஊடக செயலாளர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளார்.

இந்நிலையில், ராஜித்த சேனாரத்னவின் ஊடக செயலாளர் எம்.ஐ.ஜே. விஜேநாயக்கவின் வீடும் பாதுகாப்பு பிரிவினரால் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: