'இலங்கை தமிழர் பிரச்சனைக்கு இந்தியாவிடம் தீர்வை எதிர்பார்க்காதீர்கள்' - மஹிந்த ராஜபக்ஷ

pmoffice sri lanka படத்தின் காப்புரிமை pmoffice sri lanka

இலங்கை தமிழர் பிரச்சனைக்கு இந்தியாவிடமிருந்து தீர்வு கிடைக்கும் என எதிர்பார்ப்பது தவறான விடயம் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கொழும்பில் தமிழ் ஊடக நிறுவனங்களின் பிரதம செய்தி ஆசிரியர்களுடன் இன்று இடம்பெற்ற சந்திப்பின்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

"வடக்கு மாகாணத்தில் உள்ள தமிழ் மக்களின் பிரச்சனைகளுக்கான தீர்வு, இந்தியாவிடமே இருப்பதாக தமிழர்கள் நம்பி வருகின்றனர். இலங்கை தமிழர்களின் பிரச்சனைகளுக்கான தீர்வை உள்நாட்டிலேயே வழங்க முடியும்," என அவர் கூறினார்.

இலங்கை தமிழர்களுக்காக தீர்வுத்திட்டம், தம்மிடமிருந்தே கிடைக்க வேண்டும் எனவும் மஹிந்த ராஜபக்ஷ கூறினார்.

தம்முடன் இணைந்து செயற்படும் பட்சத்தில், அதற்காக திட்டம் விரைவில் கிடைக்கும் என அவர் கூறினார்.

தமிழ் மக்கள் தமக்கு வாக்களித்தாலும், வாக்களிக்காவிட்டாலும் அரசாங்கம் தமிழ் மக்களுடன் என்றும் ஒன்றாகவே செயல்படும் என மஹிந்த ராஜபக்ஷ உறுதியளித்தார்.

தமிழர்களுக்கான தீர்வுத்திட்டம் தொடர்பிலான திட்ட வரைவு, எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலின் பின்னர் தயாரிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

படத்தின் காப்புரிமை MAHINDA RAJAPAKSHA'S MEDIA

மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்த காலப் பகுதியில் தமிழர்களுக்கான தீர்வுத்திட்டம் தொடர்பில் அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தையும் தாண்டிய (13 பிளஸ்) அதிகாரத்தை வழங்குவதாக கூறிய அவரது தற்போதைய நிலைப்பாடு என்ன என ஊடகவியலாளர்கள் இதன்போது கேள்வி எழுப்பினர்.

தான் அதே நிலைப்பாட்டிலேயே இன்றும் உள்ளதாக மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டார்.

இந்திய மீனவர் பிரச்சனை

இந்திய இலங்கை மீனவர் பிரச்சனை குறித்து இந்திய அரசாங்கத்துடன் கலந்துரையாடல்களை நடத்த தீர்மானித்துள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவிக்கின்றார்.

அதன் முதற்கட்டமாக கடல் தொழில் மற்றும் நீரியல்வள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இந்திய அரசாங்கத்துடன் கலந்துரையாடுவார் என அவர் தெரிவித்தார்.

அடுத்த மாதம் இந்தியாவிற்கு பயணம் மேற்கொள்ளும் தான், இந்த விடயம் தொடர்பில் கலந்துரையாடல்களை நடத்தி தீர்வொன்றை பெற்றுக்கொடுக்க எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

Image caption காங்கேசன் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள இலங்கை அரசால் சிறைபிடிக்கப்பட்ட படகுகள் தமிழக மீனவர்களின் படகுகள். (கோப்புப்படம்)

இந்திய - இலங்கை மீனவர் பிரச்சனை காரணமாக வடக்கு பகுதியிலுள்ள தமிழர்களே அதிகளவில் பாதிக்கப்படுவதாகவும், தமிழர்களின் பொருளாதாரமே அதிகளவில் இல்லாது ஒழிக்கப்படுவதாகவும் அவர் கூறினார்.

அரசியல் கைதிகளின் விடுதலை

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் ஆராயப்பட்டு வருவதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ செய்தியாளர் சந்திப்பின்போது தெரிவித்தார்.

தமிழ் அரசியல் கைதிகளின் விவரங்களை தான் கோரியுள்ளதாகவும், அந்த விவரங்கள் கிடைத்தவுடன் அவர்களை விடுதலை செய்வது தொடர்பில் தீர்மானம் எட்டப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இந்த கைதிகளில் பல்வேறு குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடையவர்களும் உள்ளதாக கூறிய அவர், அவ்வாறான குற்றச்சாட்டுக்கள் உறுதிப்படுத்தப் பட்டவர்களை விடுதலை செய்வது கடினம் எனவும் குறிப்பிட்டார்.

அமைச்சரவையில் முஸ்லிம் அமைச்சர்கள் இல்லாமை

தமது அரசாங்கத்தில் முஸ்லிம் மக்கள் பிரதிநிதிகள் இல்லாமை காரணமாகவே முஸ்லிம் அமைச்சர் ஒருவர் நியமிக்கப்படவில்லை என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவிக்கின்றார்.

தமது அரசாங்கத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் பைசர் முஸ்தபா மாத்திரமே முஸ்லிம்களை பிரதிநிதித்துவப்படுத்தி இருந்ததாகவும், அமைச்சு பொறுப்பை ஏற்றுக் கொள்ள அவரும் மறுப்பு தெரிவித்து விட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

முஸ்லிம்கள் அனைத்து கட்சிகளுடனும் இணைந்து செயற்பட வேண்டியது அவசியம் என மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்