இலங்கை ஓமந்தை விபத்து - தீக்கிரையான பேருந்து - ஐவர் உயிரிழப்பு

தீக்கிரையான பேருந்து

பட மூலாதாரம், KOGULAN VAVUNIYA

இலங்கை வவுனியா ஓமந்தை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5ஆக உயர்வடைந்துள்ளது.

இந்த விபத்து நேற்றிரவு (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த அரசுப் பேருந்து ஒன்றும், யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த வேன் ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின.

விபத்தில் மேலும் 21 பேர் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவத்தை அடுத்து, பிரதேசவாசிகள் பேருந்தை தீவைத்து கொளுத்தினர்.

பேருந்து தீ வைக்கப்பட்ட நிலையில், தீ பரவி வேனும் தீக்கிரையாகியுள்ளதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.

பட மூலாதாரம், KOGULAN VAVUNIYA

குறித்த வேனின் சாரதி விபத்துக்குள்ளான சந்தர்ப்பத்தில் வேனுக்குள் மீட்கப்படாத நிலையிலேயே தீ வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையில், வேனின் சாரதியும் தீக்கிரையாகியுள்ளதாக போலீசார் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த சம்பவத்தில் 62 வயதான ஆறுமுகன் தேவராஜா, 51 வயதான தேவராஜா சுகந்தினி, 30 வயதான தேவராஜா சுதர்ஷன், 83 வயதான ராமலிங்கம், சோமசுந்தரம் ஆகியோரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளனர்.

அத்துடன், வேனின் சாரதியான 24 வயதுடைய விஜயகுமார் ரொஷாந்தனும் உயிரிழந்துள்ளதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.

இந்த விபத்தில் காயமடைந்தவர்களில் சிலர் அதிதீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

விபத்துக்குள்ளான பேருந்து தீக்கிரையாக்கப்பட்ட நிலையில், குறித்த பேருந்தில் பயணித்த பயணிகளின் உடமைகளும் தீக்கிரையாகியுள்ளதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.

இந்த விபத்தையடுத்து, பேருந்தை தீக்கிரையாக்கிய சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை ஓமந்தை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :