முள் தேங்காய் பயிரிடுவதற்கு இலங்கையில் தடை - நிறுவனங்கள் கூறுவது என்ன?

இலங்கை

பட மூலாதாரம், PMD

இலங்கையில் முள் தேங்காய் (கட்டுப்பொல்) பயிரிடுவதை உடனடியாக நிறுத்துமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உத்தரவு அண்மையில் பிறப்பித்தார்

காலி - உடுகம பகுதியில் இன்று (27) மக்களின் பிரச்சினைகளை கேட்டறிந்துக் கொள்ளும் விதமாக ஏற்பாடு செய்யப்பட்ட மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக்கூட்டத்தில் கலந்துக்கொண்டு மக்களின் பிரச்சினைகளை ஜனாதிபதி கேட்டறிந்துக் கொண்டார்.

முள் தேங்காய் பயிரிடுவதனால் ஏற்படும் பாதிப்புக்கள் தொடர்பிலும், முள் தேங்காய் பயிர் செய்கையினால் தமது பிரதேசத்திற்கு நீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகவும் பிரதேச மக்கள் ஜனாதிபதியிடம் இதன்போது முறைப்பாடு செய்துள்ளனர்.

இந்த விடயம் தொடர்பில் உடனடியாக ஜனாதிபதி அதிகாரிகளுடன் கலந்துரையாடல்களை நடத்தியதுடன், முள் தேங்காய் பயிர் செய்வதை நிறுத்துமாறும் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

முள் தேங்காய் பயிரிடுகின்றமை தொடர்பில் முறையான சுற்றாடல் ஆய்வொன்றை மேற்கொள்ளுமாறும் ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.

இந்த பயிர் செய்கையின் ஊடாக அதிக வருமானம் ஈட்டிக் கொள்ள முடியும் என ஜனாதிபதி கூறியதுடன், இந்த பயிர் செய்கையினால் சூழலுக்கு பாதிப்பு ஏற்படும் எனவும் சுட்டிக்காட்டினார்.

சூழலுக்கு பாதிப்பு ஏற்படும் பயிர் செய்கையின் ஊடாக எவ்வளவு இலாபம் கிடைத்தும் பயன் கிடையாது என ஜனாதிபதி கூறியுள்ளார்.

தேங்காய் எண்ணெய் பயன்பாட்டை மக்கள் மத்தியில் ஊக்குவிக்க வேண்டும் எனவும், தென்னை பயிர் செய்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

பட மூலாதாரம், PMD

அத்துடன், இலங்கையில் இறப்பர் தொழிற்சாலைகள் காணப்படுகின்ற போதிலும், அந்த தொழிற்சாலைகளுக்கு உரிய இறப்பர் கிடைப்பதில்லை என அவர் கூறியுள்ளார்.

இறப்பர் பயிர் செய்கையை அதிகரித்து, இறப்பர் தொழிற்துறையை கட்டியெழுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறு இலங்கையில் இறப்பர் செய்கை அதிகரிக்கப்படுமாக இருந்தால், இறப்பர் இறக்குமதியை நிறுத்த முடியும் என ஜனாதிபதி நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

முள் தேங்காய் பயிரிடுவதை நிறுத்துமாறு போராட்டம்

முள் தேங்காய் பயிர் செய்கையை உடனடியாக நிறுத்துமாறு வலியுறுத்தி பல வருடங்களாக இலங்கையில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

தமது பாரம்பரிய தொழிலான இறப்பர், தேயிலை போன்ற உற்பத்திகளை இல்லாது செய்து, அதிக இலாபம் ஈட்டுவதற்காக முள் தேங்காய் உற்பத்தியை நிறுவனங்கள் ஊக்குவித்து வருவதாக தெரிவித்தே கடந்த காலங்களில் இந்த போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

முள் தேங்காய் பயிர் செய்கை காரணமாக அதிகளவில் தமிழ் மக்களே பாதிக்கப்படுவதாக கடந்த காலங்களில் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன.

தேயிலை மற்றும் ரப்பர் போன்ற தொழில்துறைகளில் அதிகளவிலான தமிழர்களே ஈடுபட்டு வருவதாகவும், மாற்று தொழிலான முள் தேங்காய் பயிர் செய்கை மேற்கொள்ளும் போது தொழில் வாய்ப்புக்கள் குறையும் சாத்தியம் காணப்பட்டதாகவும் மக்கள் சுட்டிக்காட்டியிருந்தனர்.

முள் தேங்காய் பயிர் செய்கையினால் பாதிப்பு என்ன?

முள் தேங்காய் பயிர் செய்கை மேற்கொள்ளும் பகுதிகளில் அதிகளவிலான நீர் தட்டுப்பாடு ஏற்படும் என ஈர வலய வனப் பகுதிகளை பாதுகாக்கும் அமைப்பின் ஏற்பாட்டாளர் ஜயந்த விஜேசிங்க பிபிசிக்கு தெரிவித்தார்.

முள் தேங்காய் மரம் அதிகளவிலான நீரை பெற்றுக் கொள்ளும் எனவும், அதனால் பிரதேசத்திற்கு பாரிய நீர் தட்டுப்பாடு ஏற்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

அத்துடன், இலங்கையில் 1990ஆம் ஆண்டு காலப் பகுதியில் முள் தேங்காய் செய்கை ஆரம்பிக்கப்பட்டதை தொடர்ந்து, இலங்கையின் தென்னை தொழில்துறை பெருமளவு வீழ்;ச்சியை கண்டதாக அவர் குறிப்பிடுகின்றார்.

அத்துடன், ஈர வலய பகுதிகளில் செய்கை செய்யப்படும் இறப்பர் செய்கை அழிக்கப்பட்டு, அந்த பகுதிகளில் முள் தேங்காய் செய்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதனால் இறப்பர் மற்றும் தென்னை ஆகிய இரண்டு தொழில்துறைகளும் இலங்கையில் வீழ்ச்சியை நோக்கி நகர்ந்ததாக ஜயந்த விஜேசிங்க கூறினார்.

முள் தேங்காய் செய்கைக்கு பெருமளவு ஊழியர்கள் தேவையில்லை என கூறிய அவர், அதனால் நிறுவனங்கள் பெருமளவு இலாபத்தை ஈட்டிக் கொள்ளும் எனவும் சுட்டிக்காட்டினார்.

இந்த நிலையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் இந்த தீர்மானத்தை தான் வரவேற்பதாகவும், ஜனாதிபதியின் இந்த அறிவிப்பு மகிழ்ச்சி அளிக்கின்றது எனவும் அவர் கூறினார்.

கடந்த ஆட்சி காலத்தில் அமைச்சரவை பத்திரமொன்றின் ஊடாக முள் தேங்காய் செய்கைக்கு தடை விதிக்கப்பட்ட போதிலும், நிறுவனங்கள் ரகசியமாக அந்த நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக அவர் கவலை வெளியிட்டார்.

எதிர்வரும் காலங்களில் அவ்வாறான நடவடிக்கைகளை நிறுவனங்கள் மேற்கொள்ளாதிருப்பதற்கு புதிய சட்டங்கள் வகுக்கப்படுவது மாத்திரமன்றி, தண்டனைகளையும் அறிவிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஈர வலய வனப் பகுதிகளை பாதுகாக்கும் அமைப்பின் ஏற்பாட்டாளர் ஜயந்த விஜேசிங்க கேட்டுக்கொண்டுள்ளனர்.

ஜனாதிபதியின் இந்த அறிவிப்பு தொடர்பில் நிறுவனங்களின் பதில்

முள் தேங்காய் செய்கையை உடனடியாக நிறுத்துமாறு ஜனாதிபதி விடுத்த உத்தரவு குறித்து பிபிசி தமி;ழ், முள் தேங்காய் செய்கையில் ஈடுபடும் பிரதான நிறுவனங்களில் ஒன்றான லலான் இறப்பர் நிறுவனத்தின் பிரதி பொது முகாமையாளர் நிஷாந்த செனவிரத்னவை தொடர்புக் கொண்டு வினவியது.

இந்த விடயம் தொடர்பில் எதிர்வரும் காலங்களில் ஜனாதிபதியை சந்தித்து விஞ்ஞான ரீதியிலான விடயங்களை தெளிவூட்ட தீர்மானித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

விஞ்ஞான ரீதியில் முன்னெடுக்கப்பட்ட பல ஆய்வுகளின் ஊடாக முள் தேங்காய் செய்கையினால் சூழலுக்கு எந்தவித பாதிப்பும் கிடையாது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

விஞ்ஞான ரீதியில் முன்னெடுக்கப்பட்ட ஆய்வுகளை ஜனாதிபதியிடம் சமர்;பித்து, அது தொடர்பில் மீளாய்வுகளை மேற்கொள்ளுமாறு தாம் கோரிக்கை விடுக்க எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

முள் தேங்காய் செய்கை முன்னெடுக்கப்படும் பட்சத்தில் மலையக தமிழ் மக்களுக்கான வருமானத்தை அதிகரித்துக்கொள்வதற்கான வாய்ப்பு உள்ளதாகவும், அதனால் இந்த செய்கையை முன்னெடுப்பது தொடர்பில் ஜனாதிபதிக்கு விளக்கமளிக்க எதிர்பார்த்துள்ளதாகவும் லலான் இறப்பர் நிறுவனத்தின் பிரதி பொது முகாமையாளர் நிஷாந்த செனவிரத்ன தெரிவித்தார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: