கொரோனா வைரஸ்: இத்தாலியில் அச்சத்தில் வாழும் இலங்கையர்கள்

கொரோனா வைரஸ்: இத்தாலியில் அச்சத்தில் வாழும் இலங்கை தமிழர்கள்

பட மூலாதாரம், Getty Images

கொவிட் - 19 எனப்படும் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக ஒரு லட்சத்திற்கும் அதிகமான இலங்கையர்கள் இத்தாலியில் அச்ச நிலைமையை எதிர்நோக்கியுள்ளனர்.

இத்தாலியின் பல்வேறு பகுதிகளில் சுமார் 1,04,000 இலங்கையர்கள் வாழ்ந்து வருவதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இத்தாலியில் வாழ்ந்து வரும் இலங்கையர்கள் தொடர்பில் ரோம் மற்றும் மிலான் ஆகிய நகரங்களிலுள்ள இலங்கை தூதரக அதிகாரிகள் மிகவும் உன்னிப்பாக அவதானித்து வருவதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கை தூதரக தகவல்களின்படி, இத்தாலியிலுள்ள எந்தவொரு இலங்கையர்களுக்கும் இதுவரை கொவிட் - 19 வைரஸ் தாக்கவில்லை என வெளிவிவகார அமைச்சு தெரிவிக்கின்றது.

இத்தாலியின் லோம்பார்டி நகரம் குறித்த வைரஸ் தொற்று காரணமாக அதிக அச்ச நிலைமையை எதிர்நோக்கிய பகுதியாக காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையில், லோம்பார்டி பகுதியில் சுமார் 60 சதவீதமான இலங்கையர்கள் வாழ்ந்து வருவதாக வெளிவிவகார அமைச்சின் தகவல்கள் குறிப்பிடுகின்றன.

இத்தாலியிலுள்ள இலங்கையர்கள், சுகாதார அதிகாரிகள் வழங்கி வரும் அறிவுறுத்தல்களை பின்பற்றுமாறு இலங்கை அரசாங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.

இத்தாலியிலிருந்து வருகை தந்தவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்றா?

பட மூலாதாரம், Getty Images

இத்தாலியிலிருந்து வருகை தந்த இரண்டு இலங்கையர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் அவர்கள் தொற்று நோய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஸ்ரீஜயவர்தனபுர மற்றும் ராகமை ஆகிய வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வந்த இருவரே இவ்வாறு தொற்று நோய் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக சுகாதார பிரிவினர் தெரிவிக்கின்றனர்.

இத்தாலியிலிருந்து வருகை தந்த குறித்த இரண்டு இலங்கையர்களுக்கும் தடிமன் மற்றும் காய்ச்சல் காணப்பட்ட நிலையிலேயே அவர்கள் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

எனினும், மேலதிக பரிசோதனைகளை மேற்கொள்ளும் நோக்குடன் இந்த இரண்டு இலங்கையர்களும் தொற்று நோய் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் குறிப்பிடுகின்றனர்.

குறித்த இருவரின் இரத்தமாதிரிகள் மருத்துவ ஆய்வு நிறுவனத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், அறிக்கை கிடைக்க பெற்றவுடனேயே மேலதிக தகவல்களை அறிந்துக் கொள்ள முடியும் எனவும் தொற்று நோய் வைத்தியசாலையின் பணிப்பாளர் டொக்டர் ஹசித்த அத்தநாயக்க தெரிவிக்கிறார்.

இத்தாலியிலுள்ள இலங்கையர்களின் நிலைமை என்ன?

இத்தாலியிலுள்ள இலங்கையர்கள் பெரும் அச்ச நிலையை எதிர்நோக்கியுள்ளதாக இத்தாலியில் பணிபுரியும் இலங்கையரான இந்துனில் கெலும் ஜயவீர பிபிசி தமிழுக்கு தெரிவித்தார்.

பாதுகாப்பான நடைமுறைகளை பேணி பாதுகாப்பாக இருக்குமாறு அதிகாரிகள் தமக்கு அறிவித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

பட மூலாதாரம், INDUNIL KELUM JAYAWEERA

படக்குறிப்பு,

இந்துனில் கெலும் ஜயவீர

இத்தாலியில் ஏற்பட்டுள்ள அச்ச நிலைமை காரணமாக அங்குள்ள இலங்கையர்கள் பலர் வேலைகளுக்கு செல்வதை தவிர்த்துள்ளதாகவும் அவர் கூறினார்.

அத்துடன், மேலும் பலர் ஐரோப்பாவின் வேறு நாடுகளை நோக்கி சென்றுள்ளதாகவும் இந்துனில் கெலும் ஜயவீர கூறினார்.

இத்தாலியிலிருந்து இலங்கை வந்துள்ள இலங்கையரின் நிலைப்பாடு

இத்தாலியிலுள்ள இலங்கையர்கள் அச்சநிலையை எதிர்நோக்கியுள்ளதாக இத்தாலியில் வாழும் இலங்கையரான பத்மினி செல்லமுத்து தெரிவிக்கிறார்.

இத்தாலியில் இலங்கையைச் சேர்ந்த பெருமளவான சிங்கள மற்றும் தமிழ் மக்கள் வாழ்ந்து வருவதாக அவர் குறிப்பிட்டார்.

இவர்கள் அனைவரும் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக அச்சநிலைமையை எதிர்நோக்கியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

தற்போது தான் இலங்கைக்கு வந்துள்ள நிலையில், மீண்டும் இத்தாலி நோக்கி பயணிக்க அச்சம் ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிடுகிறார்.

தமது உறவினர்கள் இத்தாலி செல்வதை தவிர்க்குமாறு கோரி வருவதாகவும், தான் செய்வதறியாதுள்ளதாகவும் பத்மினி செல்லமுத்து கூறினார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: