இலங்கை அரசியல்: ஐக்கிய தேசிய கட்சி பிளவடைந்துள்ளதா? யானை சின்னம் யாருக்கு?

சஜித் பிரேமதாஸ

பட மூலாதாரம், SAJITH MEDIA

படக்குறிப்பு,

சஜித் பிரேமதாஸ

ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணியை பிரதிநிதித்துவப்படுத்திய பல கட்சிகள், அமைப்புக்கள் மற்றும் தொழிற்சங்கங்கள் இணைந்த புதிய கூட்டணியொன்று நேற்று (திங்கட்கிழமை) உருவாக்கப்பட்டது.

ஐக்கிய மக்கள் சக்தி என்ற பெயரில், ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாஸவின் தலைமையில் இந்த கூட்டணி திங்கட்கிழமை உருவாக்கப்பட்டது.

கொழும்பு தாமரை தடாகம் மஹிந்த ராஜபக்ஷ அரங்கில் இந்த நிகழ்வு நேற்று முற்பகல் இடம்பெற்றது.

ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணியில், ஐக்கிய தேசிய முன்னணியை பிரதிநிதித்துவப்படுத்திய மனோ கணேஷன் தலைமையிலான தமிழ் முற்போக்கு கூட்டணி, ரவூப் ஹக்கீம் தலைமையிலான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ரிஷாட் பதீயூதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், பாட்டலி சம்பிக்க ரணவக்க தலைமையிலான ஜாதிக்க ஹெல உறுமய உள்ளிட்ட பல கட்சிகள் இணைந்துக்கொண்டுள்ளன.

அது மாத்திரமன்றி, ஐக்கிய தேசியக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்திய 20 சிவில் அமைப்புக்கள் மற்றும் 18 தொழிற்சங்கங்கள் இந்த ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணியில் இணைந்துக்கொண்டுள்ளன.

பட மூலாதாரம், TWITTER

ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணியின் தலைவராக சஜித் பிரேமதாஸவும், பொதுச் செயலாளராக ரஞ்ஜித் மத்தும பண்டாரவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதன்படி, சஜித் பிரேமதாஸ மற்றும் ரஞ்ஜித் மத்தும பண்டார ஆகியோரின் முன்னிலையில் ஐக்கிய மக்கள் சக்தியில் இணையும் கட்சிகள் இன்று உடன்படிக்கையில் கைச்சாத்திட்டன.

கட்சிகளின் பொதுச் செயலாளர்கள் இந்த உடன்படிக்கைகளில் கைச்சாத்திட்டிருந்தனர்.

இதன்போது உரை நிகழ்த்திய ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்ஜித் மத்தும பண்டார,

'ஐக்கிய தேசியக் கட்சிக்காக நாம் உயிர் தியாகம் செய்துள்ளோம். சஜித் பிரேமதாஸவின் தந்தை நாட்டு மக்களுக்காகவே உயிர் தியாகம் செய்தார். ஐக்கிய தேசியக் கட்சிக்காகவும், நாட்டிற்காகவும் பலர் உயிர் தியாகம் செய்துள்ளனர்" என ரஞ்ஜித் மத்தும பண்டார தெரிவத்தார்.

ஐக்கிய தேசியக் கட்சி உள்ளிட்ட அனைத்து கட்சிகளையும் தம்முடன் இணைந்துக்கொள்ளுமாறு ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸ அழைப்பு விடுத்தார்.

பட மூலாதாரம், TWITTER

''தேர்தல் ஒன்றை இலக்காக கொண்டு இந்த கூட்டணி ஆரம்பிக்கப்படவில்லை. அனைத்து சந்தர்ப்பங்களிலும் மக்களுக்கு உதவிகளை வழங்குவதற்காகவே நாம் இந்த கூட்டணியை ஆரம்பித்தோம்;. இன, மத, கட்சி பேதமின்றி, அனைவரையும் ஒன்றிணைந்துக் கொண்டு இந்த கூட்டணி முன்னோக்கி பயணிக்கும். நாட்டிடை கட்டியெழுப்பும் வகையில் நாம் இந்த கூட்டணியை முன்னோக்கி கொண்டு செல்வோம். ஐக்கிய தேசியக் கட்சி உள்ளிட்ட நாட்டின் பிரதான அனைத்து கட்சிகளையும் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்துக்கொள்ளுமாறு நாம் அழைப்பு விடுக்கின்றேன்" என சஜித் பிரேமதாஸ குறிப்பிட்டார்.

யானை சின்னம் தொடர்பில் சர்ச்சை.

ஐக்கிய தேசியக் கட்சியின் சின்னமான யானை சின்னத்தை ஐக்கிய மக்கள் சக்தி அமைப்பு கோரிய போதிலும், அந்த கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க மற்றும் பொதுச் செயலாளர் அகில விராஜ் காரியவசம் ஆகியோர் தர மறுப்பு தெரிவித்து விட்டதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்ஜித் மத்தும பண்டார நேற்றைய தினம் தெரிவித்திருந்தார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுக்கூட்டம் கட்சியின் தலைமையகமான ஸ்ரீகொத்தவின் நேற்று முன்தினம் இடம்பெற்றது.

பட மூலாதாரம், TWITTER

இந்த கூட்டத்தின் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

யானை சின்னத்திற்கும், ஐக்கிய தேசியக் கட்சிக்கும் தாம் விருப்பம் என்ற போதிலும், அதன் உரிமையாளர்கள் அதனை தர மறுத்து வருவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் கூறினார்.

எனினும், ஐக்கிய தேசியக் கட்சியின் சின்னமான யானை சின்னத்தை தாம் என்றாவது ஒரு நாள் கைப்பற்றுவதாக அவர் நம்பிக்கை வெளியிட்டார்.

ஐக்கிய தேசியக் கட்சி தலைவர் எதிர்ப்பு?

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க, கட்சியின் சின்னத்தை வழங்க எதிர்ப்பு தெரிவித்து வருவதாக ஐக்கிய மக்கள் சக்தி கூறுகின்றது.

இதனால், ஐக்கிய தேசியக் கட்சியின் மற்றும் கடந்த தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் கூட்டணி அமைத்த அனைத்து கட்சிகளும், ஐக்கிய தேசியக் கட்சியின் உபத் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி அமைப்புடன் இணைந்துக்கொண்டுள்ளனர்.

பட மூலாதாரம், TWITTER

ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணியுடன் தற்போது ஆட்சி பீடத்திலிருந்த நிலையில், ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்த கட்சிகள்

01.தமிழ் முற்போக்கு கூட்டணி (மூன்று கட்சிகள் இணைந்த கூட்டணி)

ஜனநாயக மக்கள் முன்னணி - மனோ கணேஷன் (தலைவர்)

மலையக மக்கள் முன்னணி - இராதாகிருஸ்ணன் (தலைவர்)

தொழிலாளர் தேசிய சங்கம் - திகாம்பரம் (தலைவர்)

02.ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் - ரவூப் ஹக்கீம் (தலைவர்)

03.அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் - ரிஷாட் பதியூதீன் (தலைவர்)

04.ஜாதிக்க ஹெல உறுமய - பாட்டலி சம்பிக்க ரணவக்க (பொதுச் செயலாளர்)

05.ஜனநாயகக் கட்சி - சரத் பொன்சேகா (தலைவர்)

உள்ளிட்ட மேலும் பல கட்சிகள் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்துள்ளன.

ஐக்கிய தேசியக் கட்சி தலைவரின் பதில்

யானை சின்னத்தில் ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவிக்கின்றார்.

கட்சித் தலைமையகத்தில் நேற்றிரவு இடம்பெற்ற செயற்குழுக் கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

செயற்குழு கூட்டத்தில் யானை சின்னத்தில் போட்டியிட இணக்கம் எட்டப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டினார்.

படக்குறிப்பு,

ரணில் விக்ரமசிங்க

''நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பில் கலந்துரையாடல்களை நடத்துவதற்காக ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு கூடியது. அமைக்கப்படவுள்ள கூட்டமைப்பின் யாப்பில் உள்ளடக்க வேண்டிய விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடல்களை நடத்தினோம். யானை சின்னத்தில் போட்டியிட நாம் தீர்மானித்துள்ளோம். எனினும், தேர்தல் ஆணைக்குழுவுடன் கலந்துரையாடல்களை நடத்தி தீர்மானமொன்றை எடுக்கவே தீர்மானிக்கப்பட்டது. யானை, அன்னம் மற்றும் இதயம் ஆகிய சின்னங்கள் தொடர்பில் ஏற்கனவே பேசியுள்ளோம். இதயம் சின்னத்தை தர முடியாது என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஏற்கனவே தெரிவித்து விட்டார்” என ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

ேலும் அவர் “எமது கட்சியின் யாப்பின் பிரகாரம், யானையே எமது சின்னம். வரலாறு ரீதியாக டி.எஸ்.சேனாநாயக்கவின் காலத்திலிருந்து யானை சின்னம் பயன்படுத்தப்பட்டுள்ளது. யாப்பை திருத்தி அமைக்காமல், யானை சின்னத்தை மாற்ற முடியாது. எமது கட்சியின் யாப்பை புதிய கூட்டணி யாப்புடன் இணைந்து, அதனை தேர்தல் ஆணைக்குழுவிற்கு ஒப்படைக்க வேண்டும். அதனை தேர்தல் ஆணைக்குழு ஏற்க வேண்டும். இவ்வாறான சட்ட நடவடிக்கைகள் முடிந்தவுடன் ஐக்கிய மக்கள் சக்தி அமைப்புடன் இணைந்துக்கொண்டு முன்னோக்கி செல்ல முடியும். சட்ட நடவடிக்கைகள் இன்னும் முடியவில்லை" என்று தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க இவ்வாறு தெரிவித்த போதிலும், யானை சின்னத்தை கையளிக்க ரணில் விக்ரமசிங்க இணக்கம் தெரிவிக்கவில்லை என சஜித் பிரேமதாஸ தரப்பினர் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறான பின்னணியில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவின் பங்குப்பற்றுதல் இன்றி, ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணி திங்கட்கிழமை ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

யானை சின்னம்.

பட மூலாதாரம், UNP

ஐக்கிய தேசியக் கட்சி 1946ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 6ஆம் தேதி டி.எஸ்.சேனாநாயக்கவினால் ஆரம்பிக்கப்பட்டது.

அன்று முதல் இன்று வரையான சுமார் 73 வருடங்கள் ஐக்கிய தேசியக் கட்சியின் சின்னமாக யானை சின்னம் இருந்து வருகின்றது.

எனினும், 2010ஆம் ஆண்டு மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியை முடிவுக்கு கொண்டு வரும் நோக்குடன் ஐக்கிய தேசியக் கட்சி தலைமையில் கூட்டணியொன்று ஆரம்பிக்கப்பட்டது.

இந்த கூட்டணியின் சின்னமாக அன்னச் சின்னம் அறிவிக்கப்பட்டது.

அன்று முதல் இன்று வரை ஐக்கிய தேசியக் கட்சி பிரதான தேர்தல்களில் யானை சின்னத்தில் போட்டியிடாது, கூட்டணி என்ற பெயரில் அன்னச் சின்னத்திலேயே தேர்தல்களில் போட்டியிட்டு வந்தது.

இந்த நிலையிலேயே, சின்னம் தொடர்பில் இன்று சர்ச்சை எழுந்துள்ள பின்னணியில் ஐக்கிய மக்கள் சக்தி அமைப்பு தனது சின்னத்தை கூட இன்றைய தினம் அறிவிக்காது, உடன்படிக்கையில் கைச்சாத்திட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: