கொரோனா வைரஸ்: இலங்கையில் அதிகரிக்கும் நோயாளர்கள்; விதியை மீறிய 2700 பேர் கைது Corona Sri Lanka News

கொரோனா படத்தின் காப்புரிமை Getty Images

இலங்கையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 102 வரை அதிகரித்துள்ளது.

சுகாதார அமைச்சின் சுகாதார மேம்பாட்டுப் பணியகம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

இலங்கையில் இதுவரை 102 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், அவர்களில் மூவர் சிகிச்சைகளின் பின்னர் மருத்துவமனையிலிருந்து வெளியேறியுள்ளனர்.

இவ்வாறு மருத்துவமனையிலிருந்து வெளியேறியவர்களில் சீன நாட்டு பிரஜையொருவரும் அடங்குவதாக சுகாதார அமைச்சு குறிப்பிடுகின்றது.

இந்த நிலையில், 99 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அத்துடன், கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் 255 பேர் தொடர்ந்தும் மருத்துவமனைகளில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

இத்தாலியில் இலங்கையர் ஒருவர் உயிரிழந்துள்ளாரா?

கொரோனா தொற்றுக்கு இலக்கான ஒருவர் இத்தாலியில் உயிரிழந்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் இன்று அதிகளவில் பதிவுகள் பகிரப்பட்டு வருகின்றன.

இந்த விடயம் தொடர்பில் பிபிசி தமிழ், இத்தாலிக்கான இலங்கை பதில் கொன்சுலர் ஜெனரல் பிரபாஷினி பொன்னம்பெருமவிடம் வினவியது.

இத்தாலியில் இலங்கையர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தமக்கு ஊடக தகவல்களின் மூலம் அறிய கிடைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

படத்தின் காப்புரிமை Army.lk

எனினும், அவர் கொரோனா தொற்று காரணமாகவா உயிரிழந்துள்ளார் என்பது தொடர்பில் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை என அவர் கூறினார்.

குறித்த இலங்கையர் எந்த பகுதியில் உயிரிழந்துள்ளார் மற்றும் அவர் உயிரிழப்பிற்கான காரணம் தொடர்பில் தமது அதிகாரிகள் விடயங்களை ஆராய்ந்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அவ்வாறு இலங்கையர் ஒருவர் உயிரிழந்திருப்பாராயின், மருத்துவ அறிக்கையை அடிப்படையாகக் கொண்டே அதற்கான காரணத்தை உறுதிப்படுத்த முடியும் என இத்தாலிக்கான இலங்கை பதில் கொன்சுலர் ஜெனரல் பிரபாஷினி பொன்னம்பெரும தெரிவித்தார்.

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை

படத்தின் காப்புரிமை Getty Images

பொது சுகாதார அதிகாரிகளின் ஆலோசனைகளை மீறும் பட்சத்தில், எதிர்வரும் இரண்டு வார காலப் பகுதிக்குள் இலங்கையில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரிக்கக்கூடும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அந்த சங்கத்தின் தலைவர் அனுருத்த பாதெனியாவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கவனயீனமாக செயற்படும் பட்சத்தில், இலங்கைக்குள் கொரோனா வைரஸ் பரவும் சந்தர்ப்பம் அதிகளவில் காணப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

2700ற்கும் அதிகமானோர் கைது

போலீஸ் ஊரடங்கு சட்டத்தை மீறிய குற்றச்சாட்டின் கீழ் சுமார் 2700ற்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவிக்கின்றனர்.

கடந்த வெள்ளிகிழமை மாலை 6 மணி முதல் நேற்றிரவு வரை இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸார் கூறுகின்றனர்.

அத்துடன், மோட்டார் சைக்கிள்கள் மற்றும் முச்சக்கரவண்டிகள் உள்ளிட்ட 715 வாகங்களை போலீஸார் தமது பொறுப்பிற்கு எடுத்துள்ளனர்.

படத்தின் காப்புரிமை Army.lk

மேலும், மாவட்டங்களுக்கு இடையில் போக்குவரத்துக்களில் ஈடுபடுகின்றமை முழுமையாக தடை செய்யப்பட்டுள்ளதுடன், அவ்வாறு மாவட்டங்களுக்கு இடையில் செல்வதை தவிர்க்கும் வகையில் நேற்றிரவு முதல் கடும் சட்ட நடவடிக்கைகளை எடுக்க போலீஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இதன்படி, போலீஸ் காவலரண்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொவிட் கண்காணிப்பில் ஈடுபட்டோர் வெளியேறுகின்றனர்.

படத்தின் காப்புரிமை Getty Images

வெளிநாடுகளிலிருந்து வருகை தந்தவர்களை கண்காணிப்பில் ஈடுபடுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்படுவோர் கண்காணிப்பின் பின்னர் வெளியேறி வருகின்றனர்.

இலங்கை ராணுவத்தினால் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இதன்படி, 500ற்கும் அதிகமானோர் நேற்று முதல் கண்காணிப்பிலிருந்து வெளியேறி வருகின்றனர்.

நேற்றைய தினம் முதல் தடவையாக 311 பேரும், இன்றைய தினம் 201 பேரும் கண்காணிப்பிலிருந்து வெளியேறியுள்ளதாக இலங்கை ராணுவம் தெரிவிக்கின்றது.

கந்தகாடு மற்றும் புனானை ஆகிய கண்காணிப்பு நிலையங்களிலிருந்தே இவர்கள் வெளியேறி வருகின்றனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

தொடர்புடைய தலைப்புகள்