கொரோனா வைரஸ்: கால வரையறையின்றி முடக்கப்பட்ட இலங்கை மாவட்டங்கள்

coronavirus sri lanka படத்தின் காப்புரிமை ISHARA S. KODIKARA / getty images
Image caption ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள கொழும்பில் காவல் பணியில் இருக்கும் காவலர்.

இலங்கையில் கொரோனா அச்சுறுத்தல் மிகுந்த பகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ள கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்கள் மறுஅறிவித்தல் விடுக்கப்படும் வரை முடக்கப்பட்டுள்ளன.

ஏனைய மாவட்டங்களுக்கு அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் அவ்வப்போது தளர்த்தப்பட்டு, மீண்டும் அமல்படுத்தப்பட்டு வரும் நிலையில், குறித்த மாவட்டங்களுக்கு மாத்திரம் மறு அறிவித்தல் வரை அந்த ஊரடங்கு சட்டத்தை அமுல்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது.

கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்கள் ஏற்கனவே மறு அறிவித்தல் வரை முடக்கப்பட்ட பின்னணியில், யாழ்ப்பாணத்தை மறு அறிவித்தல் வரை முடக்க அரசாங்கம் இன்று தீர்மானித்துள்ளது.

கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், வவுனியா, யாழ்ப்பாணம், மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களை தவிர்த்த ஏனைய மாவட்டங்களுக்கான ஊரடங்கு சட்டம் இன்று தற்காலிகமாக தளர்த்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இன்று மாலை முதல் மீண்டும் குறித்த மாவட்டங்களுக்கான ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.

இன்றைய தினம் ஊரடங்கு சட்டம் அமல்படுத்தப்படும் மாவட்டங்களுக்கு மீண்டும் 30ஆம் தேதி அதிகாலை 6 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை தளர்த்தப்படவுள்ளது.

வடக்கு மாகாணத்தில் யாழ்ப்பாணம் தவிர்ந்த, ஏனைய மாவட்டங்களான வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் மன்னார் ஆகிய மாவட்டங்களுக்கான ஊரடங்கு சட்டம் நாளை அதிகாலை 6 மணி முதல் 2 மணி வரை (மார்ச் 27) தற்காலிகமாக தளர்த்தப்படவுள்ளது.

படத்தின் காப்புரிமை NurPhoto / getty images

மூவாயிரத்தை தாண்டிய கைதுகள்

நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், சட்ட விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டின் கீழ் 3,076 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவிக்கின்றனர்.

கடந்த 20ஆம் தேதி மாலை 6 மணி முதல் இன்று அதிகாலை 6 மணி வரையான காலப் பகுதிக்குள் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த காலப் பகுதிக்குள் சட்ட விதிமுறைகளை மீறிய குற்றத்திற்காக 771 வாகனங்களை போலீஸார் தமது பொறுப்பிற்கு எடுத்துள்ளனர். கடந்த 24 மணித்தியாலங்களில் மாத்திரம் 394 பேரை போலீஸார் கைது செய்துள்ளதாக போலீஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவிக்கின்றது.

கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை குறைவு

இலங்கையில் கடந்த 24 மணித்தியாலங்களில் ஒரு கொரோனா நோயாளரும் பதிவாகவில்லை என இலங்கை சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இலங்கையில் இதுவரை 102 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில், அவர்களில் மூவர் பூரண குணமடைந்து தமது வீடுகளுக்கு திரும்பியுள்ளனர்.

அத்துடன், 99 பேர் மருத்துவமனைகளில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதுடன், அவர்களில் இருவர் மாத்திரம் அதிதீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார தரப்பின் தகவல்கள் குறிப்பிடுகின்றன.

மேலும், கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் 255 பேர் மருத்துவமனைகளில் தொடர்ந்தும் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

தொடர்புடைய தலைப்புகள்