கொரோனா வைரஸ்: 48 மணி நேரத்துக்கு பின் இலங்கையில் மீண்டும் தொற்று - நடப்பது என்ன?

கொரோனா வைரஸ்: இலங்கையில் தனிமைப்படுத்தப்பட்ட 11842 பேர் - விரிவான தகவல்கள் Corona Sri Lanka Updates

பட மூலாதாரம், Getty Images

இலங்கையில் கடந்த 24ஆம் தேதி முதல் தொடர்ச்சியாக 48 மணித்தியாலங்களுக்குள் புதிதாக எந்தவொரு கொரோனா நோயாளர்களும் அடையாளம் காணப்படாத நிலையில், இன்று மாலை புதிதாக இரண்டு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இலங்கையில் கடந்த 11ஆம் தேதி முதல் தொடர்ச்சியாக கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டு வந்தனர்.

இந்த நிலையில், இன்று மாலை 7 மணிக்கு 48 மணித்தியாலங்களின் பின்னர் புதிதாக இரண்டு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார மேம்பாட்டுப் பணியகம் தெரிவிக்கின்றது.

ஜனவரி மாதம் 27ஆம் தேதி இலங்கையில் முதலாவது கொரோனா தொற்றுக்கு உள்ளானவர் அடையாளம் காணப்பட்டிருந்தார்.

சீன நாட்டிலிருந்து இலங்கைக்கு வருகைத் தந்த பெண்ணொருவருக்கு இந்த தொற்று ஏற்பட்டிருந்ததுடன், அவர் பெப்ரவரி மாதம் 19ஆம் தேதி பூரண குணமடைந்து தனது நாடு நோக்கி பயணித்தார்.

இந்த நிலையில், மார்ச் மாதம் 11ஆம் தேதி கொரோனா தொற்றுக்குள்ளான முதலாவது இலங்கையர், உள்நாட்டில் அடையாளம் காணப்பட்ட நிலையில், அன்றைய தினம் முதல் படிப்படியாக நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்திருந்தது.

இதன்படி, கடந்த 24ஆம் தேதி வரையான காலப் பகுதி வரை இலங்கையில் 102 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டிருந்தனர்.

24ஆம் தேதிக்கு பின்னர் இன்று மாலையே புதிதாக இருவர் அடையாளம் காணப்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டதாக சுகாதார பிரிவினர் குறிப்பிடுகின்றனர்.

இவ்வாறு அடையாளம் காணப்பட்ட நோயாளர்கள் அங்கொடை ஐ.டி.எச் தொற்று நோய் மருத்துவமனை, முல்லேரியா மருத்துவமனை மற்றும் வெலிகந்த மருத்துவமனை ஆகியவற்றில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இலங்கையில் இதுவரை கொரோனா நோயினால் பாதிக்கப்பட்டவர்களில் 6 பேர் பூரண குணமடைந்து வீடுகளுக்கு சென்றுள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிடுகின்றது.

இந்த நிலையில், 98 நோயாளர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

எனினும், இன்றைய தினம் வரை மொத்தமாக இலங்கையில் 104 கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானோர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அத்துடன், கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் 237 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்தும் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

இலங்கையில் பாதிக்கப்பட்ட வெளிநாட்டவர்களின் விபரங்கள்

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான 104 பேரில் வெளிநாட்டவர்களும் அடங்குவதாக சுகாதார அமைச்சு தெரிவிக்கின்றது.

இதன்படி, இதுவரை அடையாளம் காணப்பட்ட நோயாளர்களில் மூன்று வெளிநாட்டவர்கள் உள்ளடங்குவதாக அமைச்சின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சீனா, பிரான்ஸ் மற்றும் இந்தியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த மூவரே இலங்கைக்குள் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

சீனா நாட்டு பிரஜை மாத்திரம் குணமடைந்துள்ளதுடன், பிரான்ஸ் மற்றும் இந்திய நாட்டவர்கள் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

வீட்டிலிருந்து வேலை செய்வதற்கான காலம் அறிவிப்பு

மார்ச் மாதம் 30ஆம் தேதி முதல் ஏப்ரல் மாதம் 3ஆம் தேதி வரையான காலம் வீட்டிலிருந்து வேலை செய்யும் காலமாக இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் நாட்டிற்குள் பரவுவதை தவிர்க்கும் வகையில் அரசாங்கம் முன்னெடுத்துள்ள வேலைத்திட்டத்திற்கு வலுவூட்டும் நோக்குடன் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது.

இந்த காலப் பகுதியானது, அரசாங்க விடுமுறை காலமாக அறிவிக்கப்படாது என ஜனாதிபதி ஊடகப் பிரிவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பொதுமக்கள் சேவையை தொடர்ச்சியாக முன்னெடுப்பது அரசாங்கத்தின் பொறுப்பு என்பதுடன், மக்களை ஒன்று திரட்டாது சுயமாக தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பதற்கான சந்தர்ப்பம் இதுவெனவும் குறிப்பிடப்படுகின்றது.

மார்ச் மாதம் 20ஆம் தேதி முதல் 27ஆம் தேதி வரையான காலத்தையும் வீட்டிலிருந்து வேலை செய்யும் காலமாக அரசாங்கம் பிரகடனப்படுத்தியிருந்தது.

இந்த நடவடிக்கையை அரசாங்கம் முன்னோக்கி கொண்டு செல்லும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிடுகின்றது.

மத்திய வங்கி, வணிக வங்கி மற்றும் காப்புறுதி நிறுவனங்கள் அத்தியாவசிய சேவையாக பிரகடனம்.

இலங்கை மத்திய வங்கி, வணிக வங்கிகள், காப்புறுதி நிறுவனங்கள் மற்றும் திரைசேறி ஆகியவற்றை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தியுள்ளார்.

சுகாதாரம், பாதுகாப்பு, போலீஸ், பொருட்களை விநியோகித்தல், சுங்க நடவடிக்கைகள், மின்சாரம், நீர், எரிபொருள் ஆகியன ஏனைய அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக ஜனாபதி ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது.

நாட்டில் ஊரடங்கு சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ள காலப் பகுதியில் மக்களுக்கு நிதி தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதற்காக இலங்கை மத்திய வங்கி, அனைத்து வணிக வங்கிகளும் அதன் கிளைகளையும், காப்புறுதி நிறுவனங்களும் அதன் கிளைகளையும் திறந்து வைக்குமாறும், திரைசேறியை திறந்து வைக்குமாறும் இலங்கை மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி டப்ளியூ.டி.லக்ஷ்மனுக்கு ஜனாதிபதி செயலாளர் பி.பீ.ஜயசுந்தரவினால் கடிதமொனறின் மூலம் அறிவித்துள்ளார்.

தொழிற்சாலைகளை மூடுமாறு அறிவுறுத்தல்

முதலீட்டு வலயத்திற்கு கீழுள்ள அனைத்து தொழிற்சாலைகளையும் தற்காலிகமாக மூடுமாறு விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் பிரசன்ன ரணதுங்க உத்தரவு பிறப்பித்துள்ளார்.

படக்குறிப்பு,

பிரசன்ன ரணதுங்க

கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுள்ள வேலைத்திட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்கும் நோக்குடன் முதலீட்டு சபையின் தலைவருக்கு, விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அத்துடன், குறித்த தொழிற்சாலைகளில் பணியாற்றும் ஊழியர்களை ராணுவ பாதுகாப்புடன் அவர்களின் வீடுகளுக்கு அழைத்து செல்லுமாறும் அவர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

கட்டுநாயக்க, பியகம மற்றும் சீதாவக்க ஆகிய சுதந்திர வலயங்களிலுள்ள தொழிற்சாலைகளில் சுமார் 25000திற்கும் அதிகமானோர் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளமையினால் வீடுகளுக்கு செல்ல முடியாத நிலைமையை எதிர்நோக்கியுள்ளதாக கடந்த காலங்களில் சுதந்தர வர்த்தக வலயம் மற்றும் பொது சேவை சங்கம் குற்றஞ்சுமத்தியிருந்தது.

18,000 வெளிநாட்டவர்கள்

இலங்கைக்குள் தற்போது சுமார் 18,000த்திற்கும் அதிகமான வெளிநாட்டவர்கள் தங்கியிருப்பதாக இலங்கை சுற்றுலா சபை தெரிவிக்கின்றது.

இலங்கைக்குள் வருகைத் தந்து நிர்க்கதிக்குள்ளாகியுள்ள வெளிநாட்டவர்களுக்கு தேவையாக அனைத்து வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுப்பதாக அந்த சபை உறுதியளித்துள்ளது.

குறித்த வெளிநாட்டவர்களுக்கு உதவிகளை வழங்கும் நோக்குடன் தம்முடன் குடிவரவு, குடியகல்வு திணைக்களம் கைக்கோர்ந்துள்ளதாகவும் அந்த சபை சுட்டிக்காட்டுகின்றது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: