கொரோனா வைரஸ்: இலங்கையில் விடுதலையான 2961 கைதிகளில் தமிழர்கள் இருக்கிறார்களா?

இலங்கையில் கொரோனாவால் விடுதலை செய்யப்பட்ட கைதிகள்
படக்குறிப்பு,

இலங்கையில் கொரோனாவால் விடுதலை செய்யப்பட்ட கைதிகள்

கொரோனா வைரஸ் தொற்றினைத் தடுக்கும் நோக்கத்தோடு, இலங்கை சிறைச்சாலைகளில் இருந்து 2961 கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். மார்ச் மாதம் 17 முதல் ஏப்ரல் 4 வரை இவர்கள் பல கட்டங்களில் விடுதலை செய்யப்பட்டனர் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் உத்தரவிற்கு அமைய நியமிக்கப்பட்ட விசேட குழுவின் பரிந்துரைப்படி, நீதிமன்ற உத்தரவின் பேரில் இந்த கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பிப்ரவரி 10ஆம் தேதி வெலிக்கடை சிறைச்சாலைக்கு சென்றிருந்தார். தண்டப் பணம் செலுத்த முடியாமல் சிறையில் அடைக்கப்பட்டவர்கள், பிணை வழக்கப்பட்டிருந்த போதிலும் பிணை நிபந்தனைகளை நிறைவேற்ற முடியாதவர்கள், மிகச் சிறிய குற்றங்களுக்காக சிறையிலடைக்கப்பட்டவர்கள், தண்டனை காலத்தில் பெரும் பகுதியை நிறைவு செய்துள்ள கைதிகள், பாரதூரமான சுகாதார காரணங்களினால் பாதிக்கப்பட்டு நீண்ட காலம் சிறையிலுள்ளவர்கள் மற்றும் பிணை வழங்குதல் அல்லது குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு வழக்கு விசாரணைகள் மேற்கொள்ளப்படாதுள்ள சிறைக் கைதிகள் குறித்தே கருத்தில் கொள்ளப்பட்டுள்ளதாக ஜனாதிபதியின் சட்ட விவகாரங்களுக்கு பொறுப்பான பணிப்பாளர் நாயகம் சட்டத்தரணி ஹரிகுப்த ரோஹணதீர தெரிவித்துள்ளார்.

படக்குறிப்பு,

இலங்கையில் கொரோனாவால் விடுதலை செய்யப்பட்ட கைதிகள்

இந்த கைதிகளை விடுதலை செய்வது தொடர்பில் ஆராய்வதற்காக ஜனாதிபதியின் பணிப்புரைக்கு அமைய இலங்கை சட்டத்தரணிகள் சங்கம், நீதி அமைச்சு, சிறைச்சாலை திணைக்களம் ஆகியவற்றின் பிரதிநிதிகளைக் கொண்ட குழுவொன்று நியமிக்கப்பட்டு, அந்த குழுவின் நிவாரண பரிந்துரைகள் ஜனாதிபதி செயலாளரிடம் கையளிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையிலேயே குறித்த கைதிகளை விடுதலை செய்வதற்கான அனுமதி வழங்கப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிடுகிறது.

சிறைச்சாலைகளில் பத்தாயிரம் கைதிகளை அடைப்பதற்கே இடவசதி இருப்பதாக கூறப்படுகிறது.எனினும், இருபதாயிரத்திற்கும் அதிகமானோர் சிறை வைக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.

இந்த நிலையில், நாடு எதிர்கொண்டுள்ள கொரோனா தொற்று தொடர்பான சுகாதார நிலைமைகள் குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிடுகின்றது.

10,000 கைதிகளை மாத்திரமே சிறைச்சாலைகளில் தங்க வைக்கக்கூடிய வசதிகள் உள்ள போதிலும், 20,000திற்கும் அதிகமான கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதை ஜனாதிபதி செயலகமே ஏற்றுக் கொண்டுள்ளதாக இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளரும், மனித உரிமை செயற்பாட்டாளருமான அம்பிகா சற்குணநாதன் தெரிவிக்கிறார். பிபிசி தமிழுக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார். அத்துடன், நாட்டில் தற்போது காணப்படுகின்ற சுகாதார பிரச்சினையை கருத்திற் கொண்டு சிறைச்சாலைகளில் விடுதலை செய்யக்கூடிய நிலையிலுள்ள சிறைக்கைதிகளை விடுதலை செய்ய தொடர்ந்தும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

அதுமாத்திரமின்றி, இனத்துவக் கற்கைகளுக்கான சர்வதேச நிலையம் மற்றும் சிறைக் கைதிகளின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான குழு ஆகியன ஒன்றாக இணைந்து ஜனாதிபதிக்கு கோரிக்கை கடிதமொன்றை கடந்த சில தினங்களுக்கு முன்னர் அனுப்பியிருந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

ஜனாதிபதிக்கு அனுப்பி கடிதத்தில் கூறப்பட்டுள்ள விடயங்கள்

போலீஸ் நிலையங்களில் தடுத்து வைத்தல்

1. கட்டாயமான தேவையின்றி ஆட்களைப் போலீஸ் நிலையங்களில் தடுத்துவைப்பதைத் தவிர்க்கவேண்டும்.

2. இயலுமான அளவு நபர்களைப் போலீஸ் பிணையில் விடுதலை செய்யவேண்டும்.

3. தடுப்பு மையங்களில் வைக்கப்பட்டிருக்கும் சிறார் குற்றவாளிகளையும் கங்கொடவில 'மெத்செவனவில்' உள்ள தாய்மார்களையும் அவர்களின் பிள்ளைகளையும் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை மற்றும் நன்னடத்தை மற்றும் சிறுவர் பாதுகாப்புச் சேவைகள் திணைக்களத்தின் கலந்துரையாடலின் பேரில் மீளாய்வு செய்து விடுவிக்கவேண்டும்.

4. 5 வயதிற்குக் குறைவான பிள்ளைகளுடன் சிறையில் ,இருக்கும் பெண்களை விடுதலை செய்யவேண்டும்.

5. 2 வருடங்களிற்குக் குறைவான தண்டனையினைப் பெற்றுள்ளவர்களை சமுதாய மட்ட நல்வழிப்படுத்தல் மையங்கள் கட்டளைகள் மூலம் விடுவிக்கவேண்டும்.

6. பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்களுக்குப் பிணை வழங்கும் தீர்மானத்தினைச் சட்டமா அதிபர் துரிதப்படுத்த வேண்டும். விளக்கமறியல் கைதிகளை விடுதலை செய்யவேண்டும்.

7. பிணை நிபந்தனைகளை மீளாய்வு செய்து மாற்றி, பிணை நிபந்தனைகளை நிறைவேற்ற முடியாத காரணத்தினால் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருப்பவர்களை விடுதலை செய்யவேண்டும்.

.8. சிறிய மற்றும் பிணை வழங்கப்படக்கூடிய மற்றும் வன்முறையற்ற குற்றச் செயல்களுக்காக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருப்பவர்களுக்குப் பிணைவழங்கவேண்டும், குறிப்பாகப் போதிய அளவு சட்டரீதியான பிரதிநிதித்துவம் இல்லாமல் இருக்கக்கூடியவர்களுக்கு பிணை வழங்கவேண்டும்.

9. கடந்த வாரத்திலிருந்து நீதிமன்றப் பணிகளில் ஏற்பட்டுள்ள தடை காரணமாகத் தமது வழக்குகள் ஒத்திப்போடப்பட்டுள்ளமையினால் பிணை கோரமுடியாதவர்களையும் தாம் இழைத்த குற்றத்தினை ஒப்புக்கொண்டு அபராதத் தொகையினை செலுத்த முடியாதவர்களையும் பிணையில் விடுதலை செய்யவேண்டும்.

10. அபராதத் தொகையினை செலுத்த முடியாத காரணத்தினால் குற்றத் தீர்ப்பளிக்கப்பட்டவர்களை மன்னித்து விடுதலை செய்யவேண்டும்.

11. ஆறு மாதங்களுக்குக் குறைவான தண்டனை வழங்கப்பட்டுள்ளவர்களை நேரகாலத்துடன் நிபந்தனையின்றி விடுதலை செய்யவேண்டும்.

12. தமது தண்டனைக் காலத்தில் ஆறு மாதங்களே எஞ்சியிருப்பவர்களை நேரகாலத்துடன் நிபந்தனையின்றி விடுதலை செய்யவேண்டும்.

13. தகைமையானவர்களை வீட்டு விடுப்பிலும் உரிமத்திலும் விடுதலை செய்யவேண்டும்.

14. ஐ.நா.அகதிகள் பேரவையில் தமது விண்ணப்பங்கள் அல்லது மேல் முறையீடுகள் நிலுவையாகவுள்ள அகதிகள் மற்றும் புகலிடக்கோரிக்கையாளர்கள் மற்றும் தங்களின் புலம்பெயர்வு விண்ணப்பங்கள் கனேடிய உயர் ஸ்தானிகராலயத்தின் முன் நிலுவையாக இருப்பவர்கள் ஆகியோர் விடுவிக்கப்படலாம்.

15. மிக நீண்டகாலமாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள். இந்த நபர்களுக்குச் சமுதாயத்தில் தங்குமிட வசதிகளைப் பெற்றுக்கொள்ள வழிகள் இல்லாதிருக்கையில் அவர்களுக்குப் பொருத்தமான தங்குமிட வசதிகளை வழங்கல் வேண்டும்.

16. குற்றச்செயலின் தன்மை மற்றும் அதன் பாரதூரம் ஆகியவற்றினைப் பரிசீலித்து பின்வருவோரைப் பிணையில் விடுதலை செய்வதை நீதிச்சேவை மீளாய்வு செய்து பரிசீலிக்கவேண்டும்:

அ. குற்றத்தீர்ப்பளிக்கப்படாமல் பல வருடங்களாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருக்கும் நபர்கள் மற்றும் பல வருடங்களாக வழக்குவிசாரணை நடைபெறும் நபர்கள்

ஆ. மேன்முறையீடு நிலுவையில் இருப்பவர்கள்.

குடும்பங்களும் ஏனையோரும் சிறைச்சாலைக்கு விஜயம் செய்வது நிறுத்தப்பட்டுள்ளமை தொடர்பில் நாம் பின்வருவனவற்றினை முன்மொழிகின்றோம்.

சிறைக்கைதிகள் தமது குடும்பங்களுடன் தொடர்பாடுவதை வசதிப்படுத்துவதற்காக மேற்பார்வையுடன் கூடிய தொடர்பாடல் முறைமைகள் (தொலைபேசி) அவர்களுக்கு வழங்கப்பட வேண்டும். இதன் மூலம் கைதிகளினதும் அவர்களின் குடும்பங்களினதும் சிறைச்சாலைப் பணியாளர்களினதும் மன அழுத்தமும் மன அதிர்ச்சிவடுவும் அச்சங்களும் அகற்றப்படும்.

படக்குறிப்பு,

இலங்கையில் கொரோனாவால் விடுதலை செய்யப்பட்ட கைதிகள்

சில நடவடிக்கைகள் ஏற்கனவே ஆலோசனையாக முன்வைக்கப்பட்டுள்ளதுடன் அவை பொதுப் பரப்பில் உள்ளன.

மேலும், சிறைச்சாலைக்கு உறவினர்கள் வருகை தருவது நிறுத்தப்பட்டுள்ளதால் சிறைக்கைதிகளுக்கு சவர்க்காரம், பற்பசை மற்றும் மாதவிடாய்த் துவாலைகள் போன்ற தனிநபர் துப்பரவுக்கான பொருட்களைப் பெற்றுக்கொள்ள முடியாமல் இருக்கின்ற காரணத்தினால் இவற்றினைக் கொள்வனவுசெய்து கைதிகளுக்கு வழங்குவதற்கான நிதி வளத்தினை வழங்குமாறு சிறைச்சாலை திணைக்களத்திடம் அந்த அமைப்புக்கள் கோரிக்கை விடுத்துள்ளன.

விடுதலை செய்யப்பட்டவர்களில் யுத்தக் காலத்தில் தடுத்து வைக்கப்பட்ட தமிழர்கள் இருக்கின்றார்களா?

இலங்கையில் கொரோனா அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ள பின்னணியில் விடுதலை செய்யப்பட்டுள்ள கைதிகளில், யுத்தக் காலத்தில் கைது செய்யப்பட்ட தமிழர்கள் எவரும் உள்ளடங்கவில்லை என சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவிக்கிறது.

சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் ஜயசிறி தென்னக்கோன் இந்த தகவலை பிபிசி தமிழுக்கு தெரிவித்தார். யுத்தம் நிறைவடைந்து 10 வருடங்கள் கடந்துள்ள போதிலும், யுத்தத்தின் போது பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் பலர் கைது செய்யப்பட்டு இன்றும் வழக்குகள் தொடரப்படாத நிலையில் சிறைச்சாலைகளில் சிறை வைக்கப்பட்டுள்ளனர்.

யுத்தக் காலத்தில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு வழக்கு தொடரப்பட்ட மற்றும் வழக்கு தொடரப்படாத சுமார் 64 பேர் வரை சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இவர்கள் மீதான குற்றச்சாட்டுக்கள் பாரதூரமானவை என்பதனை கருத்திற் கொண்டே இந்த விடுதலை செய்யப்பட்டவர்களின் பட்டியலில் அவர்களின் பெயர் உள்ளடக்கப்படவில்லை என அவர் கூறினார்.

எவ்வாறாயினும், பயங்கரவாதத் தடுப்பு சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு வழக்கு தொடரப்படாதவர்கள் குறித்து தீர்மானமொன்றை எட்டுவதற்காக தாம் ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளதாகவும், இன்று வரை அது தொடர்பில் தீர்மானமொன்றை அவர்; தமக்கு வழங்கவில்லை எனவும் அவர் கூறுகின்றார்.

இலங்கை மத்திய வங்கி, கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் ஆகியவற்றின் மீது பயங்கரவாதத் தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டவர்களும் இவர்களில் அடங்குவதாக தெரிவித்த அவர், அவ்வாறானவர்களை விடுதலை செய்ய சட்ட சிக்கல்கள் காணப்படுவதாகவும் கூறினார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: