கொரோனா வைரஸ்: ஐ.பி.எல் போட்டிகளை நடத்த விருப்பம் தெரிவிக்கும் இலங்கை

ஐபிஎல்

பட மூலாதாரம், Robert Cianflone/Getty Images

கொரோனா தொற்று காரணமாக மறுஅறிவித்தல் விடுக்கப்படும் வரை நிறுத்தப்பட்டுள்ள ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டிகளை இலங்கையில் நடத்துமாறு ஸ்ரீலங்கா கிரிக்கெட் கோரிக்கை விடுத்துள்ளது.

கொவிட் - 19 வைரஸ் தாக்கம் காரணமாக இந்தியா முழுமையாக முடங்கியுள்ள நிலையில், ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டிகளும் மறு அறிவித்தல் விடுக்கப்படும் வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை அறிவித்துள்ளது.

இந்த நிலையில், குறித்த கிரிக்கெட் போட்டிகளை இலங்கையில் நடத்த தாம் விருப்பத்துடன் உள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் தலைவர் ஷமி சில்வா பிபிசி தமிழுக்கு தெரிவித்தார்.

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையிடம் இந்த கோரிக்கையை விடுப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டிகளை இலங்கையில் நடத்துவது தொடர்பிலான கோரிக்கை அடங்கிய கடிதம் தற்போது தயார்ப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

கொவிட் - 19 வைரஸ் தாக்கம் தொடரும் பட்சத்தில், ஐ.எல்.எல் கிரிக்கெட் போட்டிகளை இடைநிறுத்தி வேறொரு தினத்தில் நடத்துதல் அல்லது முழுமையாக நிறுத்துதல் அல்லது வேறொரு நாட்டில் நடத்துவதற்கு என மூன்று தீர்மானங்களை எட்டுவதற்கான சாத்தியம் காணப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.

அவ்வாறு ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டிகளை வேறொரு நாட்டில் வைக்கும் தீர்மானத்திற்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை வரும் பட்சத்தில், அந்த போட்டிகளை இலங்கையில் வைக்குமாறே தாம் கோரிக்கை முன்வைக்கவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இலங்கையில் ஐ.பி.எல் போட்டிகளை நடத்துவதற்கான இணக்கத்தை இந்தியா தெரிவிக்கக்கூடிய சாத்தியம் உள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் தலைவர் ஷமி சில்வா குறிப்பிட்டார்.

ஏப்ரல் 21 தாக்குதலில் நினைவஞ்சலி நிகழ்வுகள் ரத்து

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 21ம் தேதி நடத்தப்பட்ட தாக்குதலுக்கு ஒரு வருடம் பூர்த்தியாகவுள்ள நிலையில், அதன் நினைவஞ்சலி நிகழ்வுகளை ரத்து செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்ஜித் ஆண்டகை இந்த தீர்மானத்தை எட்டியுள்ளார்.

இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், அரசாங்கம் மற்றும் சுகாதார பிரிவினரின் ஆலோசனைகளுக்கு அமைய இந்த தீர்மானத்தை எட்டியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

எந்த வகையிலும் மக்கள் ஒன்று கூடக்கூடாது என்ற அரசாங்கத்தின் உத்தரவிற்கு தலைசாய்த்து இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

கொழும்பு பேராயர் இல்லத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

ஏப்ரல் 21ம் தேதி தமது வீடுகளில் இருந்தவாறே ஈஸ்டர் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்துமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஏப்ரல் 21ம் தேதி காலை 8.40 மணிக்கு அனைத்து தேவாலயங்களிலும் மணிஓசையை எழுப்புமாறும், ஏனைய மதத் தலங்களிலும் அந்த நேரத்தில் முடியுமானால் மணி ஓசையை எழுப்புமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த பயங்கரவாதத் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் அதேவேளை, பாதிக்கப்பட்டவர்கள் பூரண குணமடைய வேண்டும் எனவும் பிரார்த்தனை செய்யும் வகையில் 8.45 மணிக்கு இரண்டு நிமிட மௌன அஞ்சலியை செலுத்துமாறும் அவர் கூறியுள்ளார்.

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக கடந்த ஈஸ்டர் தின நிகழ்வுகளும் ரத்து செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் கொரோனா தாக்கம்

இலங்கையில் கொரோனா தாக்கம் காரணமாக 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

238 பேருக்கு கொரோனா தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அவர்களில் 68 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

163 பேர் மருத்துவமனைகளில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வரும் அதேவேளை, 161 பேர் கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: