கோட்டாபய ராஜபக்ஷ ஆட்சியின்கீழ் இலங்கை ராணுவ மயமாகிறதா - அரசு பதவிகளில் ராணுவத்தினர்

  • ரஞ்ஜன் அருண் பிரசாத்
  • பிபிசி தமிழுக்காக
அதிகாரத்தில் ராணுவத்தினர்: கோட்டாபய ஆட்சியின்கீழ் ராணுவ மயமாகிறதா இலங்கை?

பட மூலாதாரம், PMD

ராஜபக்ஷ சகோதரர்களில் ஒருவர் பிரதமராகவும், ஒருவர் ஜனாதிபதியாகவும் உள்ள இலங்கையின் மிக முக்கிய பதவிகள் தற்போது ராணுவத்தினர் வசமாகியுள்ளதை அவதானிக்க முடிகின்றது.

இது நாட்டை ராணுவமயமாக்கும் முயற்சி என்று அரசியல் கட்சிகள் மற்றும் மனித உரிமை அமைப்புகள் கவலை தெரிவித்தாலும், பொதுமக்களின் நலனை அடிப்படையாக வைத்தே முடிவுகள் எட்டப்பட்டு வருவதாக இந்த நியமனங்கள் குறித்து அரசு தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

இலங்கையின் தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ராணுவ அதிகாரியாக இருந்தவர். அவர் பதவிக்கு வந்தபின் அவருக்கு கீழுள்ள பல பதவிகளுக்கு ராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.

இலங்கையின் பல பதவிகளில் ராணுவத்தினர் பதவி வகிக்கின்ற நிலையில், சுகாதார அமைச்சின் முக்கிய பதவியான செயலாளர் பதவிக்கு ராணுவ அதிகாரியொருவரை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நியமித்துள்ளார்.

சுகாதார மற்றும் சுதேச அமைச்சின் செயலாளராக மேஜர் ஜெனரல் சஞ்ஜீவ முணசிங்க தனது கடமைகளை பொறுப்பேற்றிருக்கிறார் .

அதுமாத்திரமன்றி, ஓய்வூ பெற்ற மேஜர் ஜெனரல் ஏ.கே.எஸ்.பெரேரா, மகாவலி, விவசாயம், நீர்பாசனம் மற்றும் கிராமிய அபிவிருத்தி அமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த நியமனங்களை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வழங்கி வைத்திருந்தார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஏற்கனவே ராணுவ அதிகாரிகளை மிக முக்கிய பதவிகளுக்கு நியமித்துள்ளதாக சர்வதேச உண்மைக்கும் நீதிக்குமான செயற்திட்டம் எனும் அமைப்பு தெரிவிக்கின்றது.

பட மூலாதாரம், PMD

ராணுவ தளபதி, பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானி, பாதுகாப்பு செயலாளர் மற்றும் தேசிய புலனாய்வுத் தலைவர் உள்ளிட்ட பல முக்கிய பதவிகளுக்கு ராணுவ அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளதாக அந்த அமைப்பு குறிப்பிடுகின்றது.

ஜனாதிபதி ராணுவத்தில் இருந்த காலகட்டத்தில் கஜபாகு படையணியில் கடமையாற்றிய ஆறு ஜெனரல்கள் மற்றும் பிரிகேடியர்களை அவர் தனது அணிக்குள் உள்வாங்கியுள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது.

இவ்வாறு நியமிக்கப்பட்டுள்ளவர்களில் பலர் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்கள் உள்ளதாகவும் அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அதுமாத்திரமன்றி, இலங்கையில் உள்நாட்டு யுத்தம் இடம்பெற்ற காலப் பகுதியில் பாதுகாப்பு செயலாளராக கடமையாற்றிய கோட்டாபய ராஜபக்ஷவின் கீழ் பணியாற்றிய 14 ராணுவ மற்றும் போலிஸ் அதிகாரிகள் உத்தியோகப்பூர்வ பதவிகளுக்காக இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளார்கள் என சர்வதேச உண்மைக்கும் நீதிக்குமான செயற்திட்டம் எனும் அமைப்பு தெரிவிக்கின்றது.

இந்த நிலையில், இலங்கையானது, தற்போது ராணுவ அதிகாரிகள் கூட்டத்தால் நிர்வகிக்கப்படுகின்றது என அந்த அமைப்பு குற்றம் சாட்டுகிறது.

இவர்களில் பலர் 1989 மற்றும் 2009ஆம் ஆண்டுகளில் ஆயிரக்கணக்கான அவர்களது பிரஜைகள் கொல்லப்பட்டமை மற்றும் ஊழல் குற்றச்சாட்டுக்கள் ஆகியவற்றில் உடந்தையாக இருந்தமைக்காக நீதிமன்றத்தில் ஒருநாள் பதில் சொல்ல வேண்டியிருக்கும் என சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான செயற்திட்டத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ஜஸ்மின் சூக்கா தெரிவித்துள்ளதாக அந்த அமைப்பின் இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது,

அதிகாரத்தில் ராணுவ ஜெனரல்கள் இருக்கும்போது, இந்த நாடானது அரச அதிகாரிகளை அவர்களுடைய மனித உரிமைகள் பதிவுகளுக்காக மீளாய்வு வடிகட்டல் நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப் போவதில்லை என்பது தெளிவான விடயம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பட மூலாதாரம், FACEBOOK

அவ்வாறு நியமிக்கப்பட்டுள்ள ராணுவ அதிகாரிகளின் பெயர் பட்டிலை அந்த அமைப்பு வெளியிட்டுள்ளது.

01. லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா

02. மேஜர் ஜெனரல் சத்தியபிரிய லியனகே

03. மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன

04. பிரிகேடியர் சந்தன விக்ரமசிங்க

05. பிரிகேடியர் பிரியங்க பெர்ணான்டோ

06. மேஜர் ஜெனரல் கருணாரத்ன பண்டா எகொடவல

07. எட்மிரல் ஜயநாத் கொலம்பகே

08. மேஜர் ஜெனரல் தயா ரத்நாயக்க

09. மேஜர் ஜெனரல் நந்த மல்லவாராட்ச்சி

10. மேஜர் ஜெனரல் சுமேத பெரேரா

11. மேஜர் ஜெனரல் விஜித்த ரவிபிரிய

12. மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராட்ச்சி

13. யாப்பா சேனாதிபதி

14. மேஜர் ஜெனரல் கே.ஜகத் அல்விஸ்

15. பிரிகேடியர் துவான் சுரேஷ் சலே

16. உதவி போலிஸ் அத்தியட்சகர் பிரியந்த டி அல்விஸ்

இவர்களை தவிர மேலும் பலர் அரச நிர்வாக சேவைக்குள் உள்வாங்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன.

இவர்களுக்கு மேலதிகமாகவே ஜனாதிபதியினால் சமீபத்தில் இரண்டு ராணுவ அதிகாரிகள் புதிதாக அமைச்சுக்களின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்ப்பு

பட மூலாதாரம், FACEBOOK

இரண்டு அமைச்சுக்களுக்கு ராணுவ அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளமைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது கண்டனத்தை வெளியிட்டுள்ளது.

இலங்கை படிப்படியாக ராணுவ மயப்படுத்தப்படுகின்றதா என கூட்டமைப்பு கேள்வி எழுப்பியுள்ளது.

நாடாளுமன்றத்தை முடக்கி, ஜனநாயக அரசியல் ஓட்டத்தை தடுத்து இந்த அரசாங்கம் செயற்பட்டு வருவதாகவும் கூட்டமைப்பு தெரிவிக்கின்றது.

பல அரச நிறுவனங்களில் சிவில் அதிகாரிகள் இருக்க வேண்டிய இடங்களில் படை அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலைமை நாட்டில் தொடரக்கூடாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

அரசாங்கம் மறுப்பு

ஜனாதிபதியின் தனிப்பட்ட விருப்பத்திற்கு அமைய அரச நிர்வாக சேவைகளுக்கு ராணுவ அதிகாரிகளை நியமித்து வருவதாக வெளியாகியுள்ள செய்தியை அரசாங்கம் மறுத்துள்ளது.

பொதுமக்களின் நலனை அடிப்படையாக வைத்தே முடிவுகள் எட்டப்பட்டு வருவதாக அரச பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவிக்கின்றார்.

அரச நிர்வாக பதவிகளுக்கு நியமிக்கப்பட்டுள்ள ராணுவ அதிகாரிகள் அந்த பதவிகளுக்கு தகுதியுடையவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ள பின்னணியிலேயே அவர்கள் அந்தந்த பதவிகளுக்கு நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: