இலங்கை நாடாளுமன்ற தேர்தல் 2020:“பெரியளவில் வன்முறை சம்பவங்கள் எதுவும் பதிவாகவில்லை” - இதுதான் கள நிலவரம்

இலங்கை நாடாளுமன்ற தேர்தல் 2020

இலங்கை வரலாற்றில் பெரியளவில் வன்முறை சம்பவங்கள் எதுவும் பதிவாகாத தேர்தலாக இந்த தேர்தல் பதிவாகியுள்ளதாக இலங்கை போலீஸார் தெரிவிக்கின்றனர்.

தேர்தல் விடயங்களுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதி போலீஸ் மாஅதிபர் பிரியந்த வீரசூரிய இதனைத் தெரிவித்துள்ளார்.

இலங்கை நாடாளுமன்ற தேர்தல் நாளை (ஆகஸ்ட் 5) நடைபெற உள்ளது.

வன்முறை சம்பவங்கள் பதிவாகவில்லை

மனித படுகொலைகள், தீவைப்பு சம்பவங்கள், பாரதூரமான தாக்குதல்கள் உள்ளிட்ட எந்தவித பாரதூரமான வன்முறை சம்பவங்களும் இதுவரை பதிவாகவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தேர்தல் பிரசார நடவடிக்கைகள் கடந்த 2ஆம் தேதியுடன் நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது பிரசாரங்கள் அற்ற அமைதி காலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அமைதி காலத்திலும் பாரதூரமான வன்முறை சம்பவங்கள் எதுவும் பதிவாகவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், தேர்தல் பிரசார நடவடிக்கைகள் நிறைவடைந்துள்ள இந்த தருணத்தில் கூட சுமார் 69,000திற்கும் அதிகமான போலீஸார் கடமைகளுக்காக ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

அத்துடன், தேர்தல் நடைபெறும் நாளான நாளைய தினம் காவல்துறைக்கு மேலதிகமாக விசேட அதிரடி படையினரும் கடமைகளுக்காக ஈடுபடுத்தப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

தேர்தல் கடமைகளுக்கு இராணுவம் அழைக்கப்படவில்லை என அவர் குறிப்பிடுகின்றார்.

தேர்தல் வன்முறைகள்

கிழக்கு மாகாணத்திலேயே இந்த முறை அதிகளவிலான தேர்தல் வன்முறை சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசபிரிய தெரிவிக்கின்றார்.

அக்கரைப்பற்று, சாய்ந்தமருது, ஓட்டமாவடி, ஏறாவூர் ஆகிய பகுதிகளுக்கு போலீஸாருக்கு மேலதிகமாக விசேட அதிரடிபடையினரை கடமைகளுக்காக ஈடுபடுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

வன்முறை சம்பவங்கள் அதிகளவில் பதிவாகலாம் என எதிர்பார்க்கப்படுகின்ற சில பகுதிகளுக்கு கலகத் தடுப்பு போலீஸாரை ஈடுபடுத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

ஏதேனும், தேர்தல் வாக்களிப்பு நிலையமொன்றில் வன்முறை சம்பவம் பதிவாகும் என்றால், அந்த வாக்களிப்பு நிலையத்திற்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் நிறுத்தப்படும் என அவர் குறிப்பிட்டார்.

அவ்வாறு நிறுத்தப்படும் வாக்களிப்பு நிலையத்தின் வாக்களிப்பை மற்றுமொரு தினத்தில் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் கூறினார்.

சர்வதேச அளவில் கோவிட்-19 பாதிப்பு எண்ணிக்கைகளை வரைபட வடிவில் நீங்கள் இங்கே தெரிந்து கொள்ளலாம்.

வரைபடம்

உலகம் முழுவதும் உறுதி செய்யப்பட்ட தொற்றுகள்

Group 4

முழுமையாக பார்க்க பிரௌசரை அப்டேட் செய்யுங்கள்

ஆதாரம்: ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம், தேசிய பொது சுகாதார முகமைகள்

கடைசியாக பதிவு செய்யப்பட்டது 22 செப்டம்பர், 2020, பிற்பகல் 3:42 IST