இலங்கை நாடாளுமன்ற தேர்தல்: கொரோனா சூழலுக்கு மத்தியில் வெற்றிகரமாக தேர்தலை நடத்திய முதல் தெற்காசிய நாடு

இலங்கை தேர்தல்

கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் தேர்தலொன்றை வெற்றிகரமாக நடத்திய தெற்காசியாவின் முதலாவது நாடாக இலங்கை வரலாற்றில் பதிவாகியுள்ளது.

கொரோனா வைரஸ் உலகத்தையே அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கி வருகின்ற பின்னணியில், இலங்கையின் 8ஆவது நாடாளுமன்றம், கடந்த மார்ச் மாதம் 2ஆம் தேதி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் கலைக்கப்பட்டிருந்தது.

நாடாளுமன்றத்தின் கால வரம்புக்கு முன்னர், ஜனாதிபதி தனது அதிகாரத்தை பயன்படுத்தி, நாடாளுமன்றத்தை கலைத்திருந்தார்.

இதன்படி, நாடாளுமன்ற தேர்தலுக்காக வேட்பு மனு தாக்கல் இடம்பெற்ற தருணத்திலேயே இலங்கையில் முதலாவது கொரோனா தொற்றாளர் அடையாளம் காணப்பட்டார்.

இந்த நிலையில், வேட்பு மனு தாக்கல் நிறைவடைந்த பின்னணியில், மார்ச் மாதம் 20ஆம் தேதி நாடு முழுமையாக முடக்கப்பட்டது.

இதையடுத்து, ஏப்ரல் மாதம் 25ஆம் தேதிக்கு அறிவிக்கப்பட்டிருந்த நாடாளுமன்றத் தேர்தலுக்கான அறிவிப்பை, தேர்தல்கள் ஆணைக்குழு தள்ளிவைத்திருந்தது.

சுமார் ஒரு மாத காலம் முழுமையாக நாடு முடக்கப்பட்ட நிலையில், ஏப்ரல் மாதம் 20ஆம் தேதி முதல் நாட்டை படிப்படியாக வழமைக்கு கொண்டு வர அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருந்தது.

இவ்வாறான பின்னணியில், நாடாளுமன்ற தேர்தலை முழுமையாக சுகாதார வழிகாட்டலின் கீழ் ஜுன் மாதம் 20ஆம் தேதி நடத்த தேர்தல்கள் ஆணைக்குழு ஏப்ரல் மாதம் தீர்மானித்திருந்தது.

எனினும், கொரோனா அச்சுறுத்தல் அதிகரித்த நிலையில், தேர்தலை இரண்;டாவது தடவையாகவும் பிற்போடுவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்திருந்தது.

இலங்கை வரலாற்றில் தீர்மானிக்கப்பட்ட தேதிக்கு தேர்தலொன்றை நடத்த முடியாது போன முதலாவது சந்தர்ப்பமாக இதுவாகும்.

இவ்வாறான பின்னணியில், இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கம் சமூகத்திற்குள் இருந்து பரவுவது முழுமையாக தடுக்கப்பட்ட நிலையில், ஆகஸ்ட் மாதம் 5ஆம் தேதி தேர்தலை நடத்த தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்திருந்தது.

சுகாதார அமைச்சின் முழுமையாக வழிகாட்டல் மற்றும் கண்காணிப்பின் கீழ் இலங்கையின் 9ஆவது நாடாளுமன்றத்திற்கான உறுப்பினர்களை தெரிவு செய்யும் தேர்தல் நேற்றைய தினம் நடத்தப்பட்டது.

இதற்கமைய, கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் சுமார் 70 வீதத்திற்கு அதிகமானோர் தமது வாக்குகளை நேற்றைய தினம் பதிவு செய்திருந்தனர்.

இலங்கையில் இதற்கு முன்னர் நடத்தப்பட்ட தேர்தல்களின் போது, வாக்கெண்ணும் நடவடிக்கைகள் வாக்களிப்பு நிறைவடைந்த தினத்திலேயே நடத்தப்படுவது வழக்கமாக இருந்த போதிலும், இந்த முறை அடுத்த நாளான இன்று வாக்கெண்ணும் பணிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாகவே இன்றைய தினம் வாக்கெண்ணும் நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன.

கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் நாடாளுமன்றத்திற்கான பாரிய தேர்தலொன்றை தெற்காசியாவில் நடத்தி நிறைவு செய்த முதலாவது நாடாக இலங்கை வரலாற்றில் பதிவாகியுள்ளது.

தேர்தல் காரணமாக எந்தவொரு சந்தர்ப்பத்திலும் கொரோனா வைரஸ் பரவுவதற்கான சாத்தியம் கிடையாது என சுகாதார அதிகாரிகள் மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழு அதிகாரிகள் நம்பிக்கை வெளியிடுகின்றனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: