இலங்கை தேர்தல்: வடக்கில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பின்னடைவும் ஏனைய கட்சிகளின் எழுச்சியும் - விரிவான பார்வை

  • கிருபா,
  • ஊடகவியலாளர்
இலங்கை தேர்தல்: வடக்கில் தமிழ் தேசிய கூட்டமைப்பு பின்னடைவும் ஏனைய கட்சிகளின் எழுச்சியும்

பட மூலாதாரம், Getty Images

(இந்தக் கட்டுரையில் இருப்பவை கட்டுரையாளரின் சொந்தக் கருத்து. இவை பிபிசியின் கருத்துகள் அல்ல. - ஆசிரியர்)

தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் என்ற அந்தஸ்தை தமிழ் தேசிய கூட்டமைப்பு இம்முறை இழந்திருக்கின்றது.

கடந்த முறை தேசிய பட்டியல் உட்பட 16 ஆசனங்களை வடக்கு கிழக்கில் கைப்பற்றிய தமிழ் தேசிய கூட்டமைப்பு இம்முறை தேசிய பட்டியல் உள்ளடங்கலாக 10 ஆசனங்களை மாத்திரமே கைப்பற்றியுள்ளது.

வட மாகாணத்தின் யாழ் தேர்தல் தொகுதியில் இருந்து கடந்த முறை நாடாளுமன்றத்திற்கு தெரிவாகி்யிருந்த ஐவரில் சிவஞானம் சிறீதரன், எம்.ஏ.சுமந்திரன் மற்றும் தர்மலிங்கம் சித்தார்த்தன் ஆகிய மூவரே இம்முறை வெற்றிபெற்றுள்ளனர்.

கடந்த தடவை ஐக்கிய தேசிய கட்சி சார்பில் நாடாளுமன்றத்திற்கு தெரிவாகியிருந்த விஜயகலா மகேஸ்வரன் மக்களால் நிராகரிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த இடத்தை ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி சார்பில் போட்டியிட்ட அங்கஜன் இராமநாதனுக்கு மக்கள் வழங்கியுள்ளனர்.

குறிப்பாக 36, 365 என்ற அதிகூடிய விருப்பு வாக்குகளுடன் அங்கஜன் இராமநாதன் இம்முறை நாடாளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ளார்.

கடந்த முறை போன்றே இம்முறையும் மக்களின் ஆதரவுடன் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா நாடாளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ளார்.

பட மூலாதாரம், Getty Images

அத்துடன் வன்னி தேர்தல் இருந்து கடந்த முறை நாடாளுமன்றத்திற்கு தெரிவாகியிருந்த சார்ள்ஸ் நிர்மலநாதன் மாத்திரமே இம்முறை மீண்டும் வெற்றிபெற்றுள்ளார்.

கடந்த முறை யாழ் தேர்தல் தொகுதியில் இருந்து நாடாளுமன்றத்திற்கு தெரிவாகியிருந்த தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, ஈ.சரவணபவன் ஆகியோரும் வன்னித் தேர்தல் தொகுதியில் இருந்து நாடாளுமுன்றத்திற்கு தெரிவாகியிருந்த சிவபிரகாசம் சிவமோகன், சாந்தி சிறீஸ்கந்தராஜா, சிவசக்தி ஆனந்தன், ஆகியோரும் இம்முறை தமது ஆசனங்களை இழந்துள்ளனர்.

எனினும் வன்னித் தேர்தல் தொகுதியில் இருந்து இம்முறை செல்வம் அடைக்கலநாதன், வினோநோகராதலிங்கம் ஆகியோர் மீண்டும் நாடாளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ளனர்.

இதேவேளை தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு கடும் சவாலாக காணப்பட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் முதன்மை வேட்பாளர் கே.கே.மஸ்தான் இரண்டாவது முறையாகவும் நாடாளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தி ஊடாக வன்னி தேர்தல் மாவட்டத்தில் போட்டியிட்ட ரிஷாட் பதியூதீன் அதிக விரும்புவாக்குகளைப் பெற்று மீண்டும் நாடாளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ளார்.

ஈழ மக்கள் ஜனநாயக கட்சி சார்பில் முதன்மை வேட்பாளராகப் போட்டியிட்ட கு.தீலீபன் முதல் முறையாக நாடாளுமன்றத்திற்குத் தெரிவாகியுள்ளார்.

கடந்த மாகாண சபைத் தேர்தலில் வவுனியாவில் வைத்திய கலாநிதி ப.சத்தியலிங்கத்துடன் இணைந்து பணியாற்றிய, அவரின் உறவினரான தீலீபன், மனக்கசப்பு காரணமாக அங்கிருந்து வெளியேறி ஈ.பி.டி.பி கட்சியுடன் இணைந்து பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுத்திருந்த நிலையில், மக்களின் ஆதரவு அவருக்கு இம்முறை கிடைத்துள்ளது.

யாழ் தேர்தல் மாவட்ட விருப்பு வாக்கில் குழப்பம்

தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ் தேர்தல் மாவட்டத்தின் விரும்பு வாக்குகள் தொடர்பில் சர்ச்சை நீடிக்கின்றது.

வாக்கு எண்ணும் நாளான ஆகஸ்ட் மாதம் 06 ஆம் திகதி யாழ் தேர்தல் மாவட்டத்தின் கிளிநொச்சி மற்றும் மானிப்பாய் தொகுதிகளுக்கான முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டிருந்தது.

எனினும் 90 வீதமான வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில், விருப்பு வாக்குகளின் பிரகாரம் படுகொலை செய்யப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சசிகலா ரவிராஜ் இரண்டாவது இடத்தில் இருந்தாக கூறப்பட்டது.

எனினும் இறுதி முடிவுகள் வெளியிடப்பட்ட சசிகலா ரவிராஜ் நான்காம் இடத்தைப் பெற்றதாகவும் சி.சிறீதரன், எம்.ஏ.சுமந்திரன், தர்மலிங்கம் சித்தார்த்தன் ஆகியோர் வெற்றிபெற்றதாகவும் அறிவிக்கப்பட்டது.

இதன்போது வாக்கு எண்ணும் மத்திய நிலையமாக இருந்த யாழ் மத்திய கல்லூரியில் குழப்பம் ஏற்பட்டதுடன், சுமந்திரனுக்கு ஆதரவாகவும் எதிராகவும் கோஷங்கள் எழுதப்பட்டிருந்தன.

ஒரு கட்டடத்தில் சுமந்திரன் தேர்தல் வாக்கு எண்ணும் நிலையத்திற்குள் பிரவேசித்த போது அவருக்கு எதிர்ப்பு வெளியிடப்பட்டதுடன், வெளியேறும் போதும் எதிர்ப்பு கோஷங்கள் எழுப்பட்டிருந்தன.

இதன்போது சசிகலா ரவிராஜ்ஜின் புதல்வி மற்றும் மாவை சேனாதிராஜாவின் புதல்வர் ஆகியோரும் பாதுகாப்பு தரப்பினரின் தாக்குதலுக்கு உள்ளாகியிருந்தனர்.

இதன்பின்னர் சகிகலா ரவிராஜ் வாக்கு எண்ணும் நிலையத்தில் இருந்து வெளியேற்றப்பட்டதுடன், அதிகாரத்தைப் பயன்படுத்தி தேர்தல் முடிவுகளில் மாற்றம் இடம்பெற்றுள்ளதாக ரவிராஜ்ஜின் புதல்வி பிரவீனா கண்ணீர் மல்க கூறியிருந்தார்.

இதன்பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட சசிகலா ரவிராஜ், விருப்பு வாக்குகளின் பட்டியலில் நான்காம் இடத்திற்கு தாம் பின்தள்ளப்பட்டமை தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவில் முறையிட உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறான நிலையில் சகிகலாவிற்கு நீதி கோரி சாவகச்சேரியில் உள்ள ரவிராஜ்ஜின் சிலைக்கு முன்பாக இளைஞர்கள் ஒன்றிணைந்து போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.

இதனிடையே தமிழ் மக்கள் தேசிய கூட்டணியில் அங்கம் வகிக்கும் எம்.கே.சிவாஜலிங்கம் மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி சார்பில் தெரிவாகிய அங்கஜன் இராமநாதன் ஆகியோர் சகிகலாவை நேரில் சென்று சந்தித்துள்ளனர்.இதன்போது வாக்கு மோசடி இடம்பெற்றிருந்தால் அதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கான உதவிகளையும் தாம் வழங்குவதற்கு தயாராக உள்ளதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

எனினும் தேர்தலில் வாக்கு மோசடி இடம்பெற்றதாகக் கூறப்படும் விடயத்தை நிராகரித்துள்ள எம்.ஏ.சுமந்திரன், அனைவரும் கூறுவதைப் போல சகிகலாவின் வாக்கை தாம் சூறையாடவில்லை எனக் கூறியுள்ளார்.

த.தே.கூ பின்னடைவும் ஏனைய கட்சிகளின் எழுச்சியும்

இலங்கையில் கடந்த 2015 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் யாழ் தேர்தல் தொகுதியில் 2,07,577 வாக்குகளையும் வன்னித் தேர்தல் தொகுதியில் 89,886 வாக்குகளையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பெற்றிருந்தது.

எனினும் இம்முறை யாழ் தேர்தல் தொகுதியில் 1,12,967 வாக்குகளையும் வன்னித் தேர்தல் தொகுதியில் 69,916 வாக்குகளையும் மாத்திரமே தமிழ் தேசிய கூட்டமைப்பு பெற்றிருந்தது.

குறிப்பாக ஐ.நா தீர்மானத்திற்கான கால நீடிப்புக்கான ஆதரவு, புதிய அரசியலமைப்பு உருவாக்க முயற்சியின் தோல்வி, தமிழீழ விடுதலை புலிகளின் ஆயுதப் போராட்டத்தைக் கேள்விக்கு உள்ளாக்கியமை, திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள், பௌத்த மயமாக்கல், வேலைவாய்ப்பு இன்மை, அபிவிருத்திகளில் காணப்பட்ட குறைபாடுகள், நிலைமாறு கால நீதிப் பொறிமுறைகளின் செயலின்மை போன்ற காரணங்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தோல்விக்கு முக்கிய காரணங்களாக அமைந்துள்ளன.

பட மூலாதாரம், Getty Images

மைத்திரி - ரணில் தலைமையிலான நல்லாட்சி அரசாங்கம் ஆட்சி பீடம் ஏறுவதற்கு பாரிய பங்களிப்பை வழங்கியிருந்த இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ் தேசிய கூட்டமைப்பு தொடர்ந்தும் அரசாங்கத்தின் பங்காளியாகவே செயற்பட்டிருந்தது.

அத்துடன் இடையில் மைத்திரிபால சிறிசேனவினால் பிரதமராக மஹிந்த ராஜபக்ஸ நியமிக்கப்பட்டு, ஏற்படுத்தப்பட்ட ஆட்சி மாற்றத்தின் போதும் ரணில் தலைமையிலான அரசாங்கத்திற்கு ஆதரவை வழங்கிய தமிழ் தேசிய கூட்டமைப்பு இறுதி வரை ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தை காப்பாற்றியிருந்தது.

இவ்வாறு நாட்டின் ஆட்சியை தீர்மானிக்கும் நிலையில் இருந்த தமிழ் தேசிய கூட்டமைப்பு அரசாங்கத்தின் இணை அனுசரணையுடன் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட ஐ.நா தீர்மானத்திலுள்ள விடயங்களை நிறைவேற்றுவதற்கு கால நீடிப்பு வழங்கியமை தமிழ் தேசிய கூட்டமைப்பின் தோல்வியின் ஆரம்பமாக அமைந்தது.

எனினும் இது கால நீடிப்பு அல்ல, சர்வதேச மேற்பார்வையை நீடிப்பது எனவும் அவ்வாறு நீடிப்பு வழங்காவிடின் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் நிகழ்ச்சி நிரலில் இருந்து இலங்கை தொடர்பான விடயங்கள் நீக்கப்பட்டுவிடும் என்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தொடர்ந்தும் வலியுறுத்திவந்தார்.

அத்துடன் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவுடன் நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட புதிய அரசியலமைப்பு வரைபு ஒன்றையாட்சி தன்மை கொண்டது எனவும் மக்களின் அரசியல் உரிமையை இல்லாது செய்யும் எனவும் கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.

இந்தக் கருத்தை கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் தேசிய மக்கள் முன்னணியும் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் தேசிய கூட்டணியும் கடுமையாக விமர்சனம் செய்திருந்தனர்.

குறிப்பாக தமிழ் தேசிய மக்கள் முன்னணி, இலங்கையை ஐ.நா பொதுச் சபை ஊடாக சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தியிருந்தனர்.

அத்துடன் தமிழர்கள் அதிகளவில் வசிக்கும் புலம்பெயர்ந்த நாடுகளில் சுமந்திரன் பங்கேற்ற நிகழ்வுகளில் அவருக்கு நேரடியாகவே எதிர்ப்புகளும் வெளியிடப்பட்டிருந்தன.

எனினும் தமிழ் தேசிய கூட்டமைப்புடன், ரணில் தலைமையிலான அரசாங்கம் உருவாக்கிய அரசியலமைப்புக்கான புதிய இடைக்கால அறிக்கை சமஷ்டி தீர்வை கொண்டது எனவும் நாட்டை பிரிக்கும் ஒன்றெனவும் மஹிந்த ராஜபக்ஸ தலைமையிலான தரப்பினர் தென்னிலங்கையில் தீவிர பிரசாரத்தை மேற்கொண்டு, அதற்கான எதிர்ப்பையும் மிகவும் வலுப்படுத்தியிருந்தனர்

அதனைத் தவிர ஐ.நா தீர்மானத்திற்கு கால நீடிப்பு வழங்கும் முயற்சிகளுக்கு தமிழர் தாயகப் பிரதேசங்களான வடக்கு கிழக்கில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களும் கடும் எதிர்ப்பை வெளியிட்டிருந்தனர்.

அவர்கள் தமது போராட்டங்களின் போது தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் எம்.ஏ.சுமந்திரன் போன்றவர்களின் உருவப் பொம்மைகளை எரித்தும், செருப்பால் அடித்தும் தமது எதிர்ப்பை காட்டியிருந்தனர்.

அத்துடன் நிலைமாறு கால நீதிப் பொறிமுறையின் கீழ் கொண்டுவரப்பட்ட காணாமல் போனவர்கள் தொடர்பாக விசாரணை செய்யும் நிரந்தர அலுவலகம் சட்டத்தை ஐ.நா அமர்வுகளை மையப்படுத்தி இலங்கை பகுதி பகுதியாக நிறைவேற்றியிருந்ததுடன், அந்த அலுவலகம் அமைக்கப்பட்ட பின்னரும் செயலற்ற நிலைமையில் காணப்பட்டிருந்தது.

காணாமல் ஆக்கப்படுவதில் இருந்து அனைவரையும் பாதுகாக்கும் சட்டம் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்கு இழப்பீடு வழங்கும் வகையில் இழப்பீட்டுக்கான அலுவலக சட்டம் ஆகியனவும் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டிருந்தன.

எனினும் இந்த சட்டமியற்றிய விடயங்களால் எந்தவொரு பலனும் தமக்கு கிடைக்கவில்லை என தொடர்ந்தும் குற்றஞ்சாட்டியிருந்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், இம்முறை தேர்தலில் தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கு தமது ஆதரவை வெளியிட்டிருந்தனர்.

அத்துடன் தேர்தல் நெருங்கும் நேரத்தில் சிங்கள சமூக வலைத்தளமொன்றுக்கு வழங்கிய செவ்வியொன்றில் கருத்து வெளியிட்ட எம்.ஏ.சுமந்திரன், தமிழீழ விடுதலை புலிகளின் ஆயுதப் போராட்டத்தை தாம் ஆதரிக்கவில்லை எனவும் வன்முறைகளுக்கு தாம் எதிரானவன் எனவும் கூறியமை அவர் மீதான எதிர்ப்பை மக்கள் மத்தியில் மேலும் வலுப்படுத்தியிருந்தது.

இந்தக் கருத்து மூலம் தமிழ் மக்களின் ஆயுதப் போராட்டத்திற்கான நியாயங்களை அவர் மழுங்கடிக்கச் செய்கின்றார் எனவும் தமிழ் தேசிய நீக்கத்தையும் புலி நீக்கத்தையும் செய்வதற்கு அவர் முயற்சிக்கின்றார் எனவும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன.

எனினும் இந்த விமர்சனங்களை கருத்தில் கொள்ளாது ஆயுதத்திலும் வன்முறையிலும் நம்பிக்கை கொண்டவர்களே நாடாளுமன்றம் செல்ல வேண்டும் என நினைத்தால் தனக்கு வாக்களிக்க வேண்டாம் என வெளிப்படையாக சர்ச்சைக்குரிய சுமந்திரன் கருத்தை வெளியிட்டிருந்தார்.

இந்தக் கருத்துக்கள் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு எதிரான வாக்குகளாக மாறியிருந்ததுடன், குறிப்பாக முன்னாள் பேராளிகள் மத்தியில் கடும் விசனத்தையும் ஏற்படுத்தியிருந்தது.

அத்துடன் வடக்கில் தமிழர்களின் பாரம்பரிய இடங்களில் மேற்கொள்ளப்படும் பௌத்த மயமாக்கல் செயற்பாடுகளுக்கு எதிரான நடவடிக்கைகளை எடுக்க தமிழ் தேசிய கூட்டமைப்பு தவறியிருந்ததாக விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.

குறிப்பாக யாழ்ப்பாணத்தின் சில பகுதிகளில் மேற்கொள்ளப்படும் விகாரை அமைக்கும் பணிகளை நிறுத்த முடியாமல் போனதுடன், தமிழர்கள் தொன்றுதொட்டு வழிபட்டுவந்த இடங்களை பௌத்த புராதான சின்னங்களாக அடையாளப்படுத்த மேற்கொள்ளப்படும் முயற்சிகளுக்கு உரிய முறையில் நடவடிக்கை எடுக்கவும் தமிழ் தேசிய கூட்டமைப்பு தவறியதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

அத்துடன் வன்னி பெரும்நிலப்பரப்பில் வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்ட எல்லைகளில் மேற்கொள்ளப்படும் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள் மற்றும் மகாவலி திட்டத்தின் ஊடாக தமிழர்களின் காணிகள் சிங்களவர்களுக்கு வழங்கப்பட்டமை போன்ற விடயங்களை தடுக்க தவறியதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு மீது அதிருப்தியும் வெளியிடப்பட்டிருந்தது.

இந்த விடயங்களும் இம்முறை தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு எதிராக மக்கள் வாக்களிப்பதற்கு ஏதுவாக அமைந்ததாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அத்துடன் விடுதலை போராட்டத்தில் முக்கிய பங்காளிகளாக இருந்த முன்னாள் போராளிகளின் வாழ்வாதாரம் உள்ளிட்ட அவர்களின் நலன் பேணல் விடயங்களை தமிழ் தேசிய கூட்டமைப்பு தொடர்ந்தும் கவனிக்கவில்லை என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டது.

ரணில் தலைமையிலான அரசாங்கத்தின் மூலம் கம்பெரலிய என்ற திட்டத்தின் ஊடாக கிராமம் சார்ந்த அபிவிருத்திகளுக்கென நிதி பெறப்பட்ட போதிலும் அதன் ஊடாக உரிய முறையில் அபிவிருத்திகளை மேற்கொள்ளவும் தமிழ் தேசிய கூட்டமைப்பு தவறியிருந்ததாக விமர்சனங்கள் வெளியிடப்படுகின்றன.

வடக்கு இளைஞர்கள் மத்தியில் அதிகரித்துள்ள வேலைவாய்ப்பு இன்மை பிரச்சினையும் இம்முறை தேர்தலில் கணிசமான தாக்கத்தை ஏற்படுத்தியிருந்ததுடன், கடந்த நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னர் நியமனம் பெற்று வேலை இழந்த இளைஞர்கள் இம்முறை அரசாங்கத்தின் பக்கம் சாய்ந்துள்ளனர்.

மாற்று அணிகளுக்கு உள்ள சவால்

இம்முறை யாழ் மாவட்டத்தில் அதிகூடிய விரும்பு வாக்குகளைப் பெற்றுள்ள மஹிந்த கோட்டா அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியைச் சேர்ந்த அங்கஜன் இராமநாதன் அதிகூடிய விரும்பு வாக்குகளைப் பெற்று நாடாளுமன்றத்திற்குத் தெரிவாகியுள்ளார்.

தேர்தல் காலத்தில் பல்வேறு உத்திகளைக் கையாண்ட அவர், உரிமை அரசியலை தாண்டி அபிவிருத்தியும் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவை என்ற அடிப்படையில் அவரின் தேர்தல் பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

தேர்தல் மேடைகளில் விடுதலைப் புலிகளின் பாடல்களை ஒலிபரப்பியிருந்ததுடன், கிராம மட்டங்களில் இளைஞர்களைக் குறிவைத்து பல்வேறு வேலைத்திட்டங்களையும் முன்னெடுத்திருந்தார்.

அத்துடன் தேர்தல் சட்டங்களை மீறி வேலைவாய்ப்பு தருவதாக கூறி, நபர்களின் சுயவிபரக் கோவைகளையும் பெற்றதாக அவருக்கு எதிராக குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டிருந்தது.

எனினும் யாழ் மத்திய கல்லூரியில் விரும்பு வாக்கு தொடர்பான பிரச்சினை ஏற்பட்டிருந்த போது ஒரு கட்டத்தில் அங்கஜன் இராமநாதனின் இணைப்பாளரான குலேந்திரன் சிவராம், பிரபாகரனின் மண்ணை வெற்றிகொண்டுள்ளதாக பெருமிதம் வெளியிட்டிருந்தார்.

இதன்மூலம் அங்கஜன் இராமநாதன், விடுதலைப் புலிகள் தொடர்பில் மக்கள் மத்தியில் ஒரு கருத்தையும் தனிப்பட்ட ரீதியில் ஒரு கருத்தையும் கொண்டுள்ளரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

எனினும் அரசாங்கத்துடன் இணைந்து செயற்படவிருக்கும் அங்கஜன் இராமநாதன், தமிழ் மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகள், வேலைவாய்ப்பின்மை போன்ற விடயங்களுக்கு எவ்வாறான தீர்வை வழங்கப் போகின்றார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டியுள்ளது.

தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்று நிலைமை காரணமாக புதிய வேலைவாய்ப்புக்களை உருவாக்குவதும் வழங்குவதும் அரசாங்கத்திற்கு பாரிய நெருக்கடியாக இருக்கும் நிலையில் அவர்களுடன் இணைந்து அங்கஜன் இராமநாதன் தமிழ் மக்களுக்காக எந்தளவு தூரம் செயற்படப் போகின்றார் என்பது கேள்விக்குறியாகியுள்ளது.

இதேபோன்றுதான் இம்முறையுடன் தேர்தல் அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ள டக்ளஸ் தேவானாந்தாவும் அவரது கட்சி சார்பில் வன்னித் தேர்தல் தொகுதியில் முதல் முறையாக தெரிவுசெய்யப்பட்ட தீலீபனும் தமிழ் மக்களின் பிரச்சினையை தீர்ப்பதில் எவ்வளவு தூரம் பங்களிப்பு செய்யப் போகின்றார் என்பதும் கேள்வியாக உருவாகியுள்ளது.

இவர்களைத் தவிர யாழ் தேர்தல் மாவட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் வழங்கிய இரண்டு ஆசனங்களையும் இம்முறை தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கும் தமிழ் மக்கள் தேசிய கூட்டணிக்கும் மக்கள் மாற்றி வழங்கியிருக்கிறார்கள்.

தமிழ் தேசிய கூட்டமைப்பினை குறிப்பாக இரா.சம்பந்தன் மற்றும் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோரின் சர்வதேச அணுகுமுறைகளையும் உள்ளக அணுகுமுறைகளையும் கடுமையாக விமர்சித்த கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் சி.வி.விக்னேஸ்வரன் போன்றவர்கள், அவர்களின் வாக்குறுதிகளை எவ்வாறு நிறைவேற்றப் போகின்றார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது.

மஹிந்த கோட்டா தலைமையிலான அரசாங்கம் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்துள்ள நிலையில், தமிழ் தேசிய மக்கள் முன்னணி தனது கோரிக்கையான இரு தேசம் ஒரு நாடு கொள்கையையும் சி.வி.விக்னேஷ்வரன் சமஷ்டி கொள்கையையும் எவ்வாறு தீர்வாக பெற்றுத் தரப் போகின்றார்கள் என்ற விடயம் பேசுபொருளாக மாறியுள்ளது.

அத்துடன் இலங்கையை ஐக்கிய நாடுகளி்ன பொதுச் சபை ஊடாக சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும் என்ற இவர்களது நிலைப்பாடு எவ்வளவு தூரம் யாதார்த்தமானது என்ற வினாவும் எழுந்துள்ளது.

அதனைத் தவிர வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பிரச்சினைக்கான தீர்வு, தமிழர் தாயகப் பகுதிகளில் மேற்கொள்ளப்படும் பௌத்தமயமாக்கல், சிங்களக் குடியேற்றங்கள், போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் வாழ்வாதாரம், தொழில்வாய்ப்பு போன்ற விடயங்களை இவர்கள் எவ்வாறு கையாளப் போகின்றார்கள் என்பதையும் புதிய நாடாளுமன்றம் தெரிவுசெய்யப்பட்ட பின்னரான அவர்களின் செயற்பாடுகளை பார்த்த தெரிந்துகொள்ள முடியும் என்ற நிலைமை காணப்படுகின்றது.

சர்வதேச அளவில் கோவிட்-19 பாதிப்பு எண்ணிக்கைகளை வரைபட வடிவில் நீங்கள் இங்கே தெரிந்து கொள்ளலாம்.

வரைபடம்

உலகம் முழுவதும் உறுதி செய்யப்பட்ட தொற்றுகள்

Group 4

முழுமையாக பார்க்க பிரௌசரை அப்டேட் செய்யுங்கள்

ஆதாரம்: ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம், தேசிய பொது சுகாதார முகமைகள்

கடைசியாக பதிவு செய்யப்பட்டது 5 ஜூலை, 2022, பிற்பகல் 1:29 IST