இலங்கை தேர்தல்: இந்திய வம்சாவளித் தமிழர்களின் பிரச்சனைகள் தீருமா?

கோப்புப்படம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

கோப்புப்படம்

இந்திய வம்சாவளித் தமிழர்களின் நிலைமை, இலங்கையிலுள்ள ஏனைய சமூகங்களுடன் ஒப்பிடுகையில் இன்றும் பின்னடைவை சந்தித்துள்ளது என்பது ஏற்றுக்கொள்ள வேண்டிய ஒன்றாகும்.

இந்த நிலையில், இலங்கையின் 9ஆவது நாடாளுமன்றத் தேர்தல் கடந்த 5ஆம் தேதி நடைபெற்று, அதன் முடிவுகள் வெளியாகியுள்ளன.

இந்த முடிவுகளின் அடிப்படையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் மாபெரும் வெற்றியை தன்வசப்படுத்தி கொண்டுள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் இந்த மாபெரும் வெற்றியானது, இந்திய வம்சாவளித் தமிழர்களின் முன்னேற்றத்திற்கு எவ்வாறு பங்களிப்பு செய்யப்படும் என்பது தொடர்பில் இன்று மலையக வாழ் தமிழர்கள் சிந்திக்க ஆரம்பித்துள்ளனர்.

இந்த முறை நடைபெற்ற தேர்தலில் இந்திய வம்சாவளித் தமிழர்களை பிரதிநிதித்துவப்படுத்தியவர்களில் ஒரு தரப்பினர் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் கைக்கோர்த்திருந்தனர்.

குறிப்பாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், தமிழ் முற்போக்கு கூட்டணி, ஐக்கிய தேசியக் கட்சி, சுயேட்சை குழுக்கள் என பலரும் இந்திய வம்சாவளித் தமிழர்களை பிரதிநிதித்துவப்படுத்தி இந்த முறை தேர்தலில் களமிறங்கியிருந்தனர்.

நுவரெலியா, கண்டி, மாத்தளை, பதுளை, இரத்தினபுரி, களுத்துறை, கேகாலை, மாத்தறை உள்ளிட்ட பல பகுதிகளில் இந்திய வம்சாவளித் தமிழர்கள் வாழ்ந்து வருகின்ற நிலையிலேயே, இந்த கட்சிகள் அந்த மக்களை பிரதிநிதித்துவப்படுத்தியிருந்தன.

நுவரெலியா, பதுளை, கண்டி போன்ற பகுதிகளுக்கு மாத்திரம் தமிழ் மக்கள் பிரதிநிதிகள் தெரிவாகியுள்ள நிலையில், ஏனைய பகுதிகளுக்கு தமிழ் பிரதிநிதிகள் தெரிவாகவில்லை.

குறிப்பாக இரத்தினபுரி, களுத்துறை, கேகாலை, மாத்தறை போன்ற பகுதிகளில் வாழும் இந்திய வம்சாவளித் தமிழர்களுக்கு பெரும்பாலான சந்தர்ப்பங்களில் மக்கள் பிரதிநிதிகள் தெரிவாகாமையினால், அந்த மக்கள் இன்றும் பாரிய பின்னடைவை சந்தித்து வருவதை காண முடிகின்றது.

குறித்த மாவட்டங்களிலுள்ள மக்களுக்கு வீட்டுத் திட்டங்கள், உரிமை பிரச்சனைகள், அபிவிருத்தி திட்டங்கள் என எதுவும் சரியான முறையில் சென்றடைவதில்லை என்பதே பாரிய பிரச்சனையாகும்.

இவ்வாறான நிலையில், இந்த முறை தேர்தலின் மூலம் நுவரெலியா மாவட்டத்தில் ஐந்து தமிழ் மக்கள் பிரதிநிதிகளும், பதுளை மாவட்டத்தில் இரண்டு மக்கள் பிரதிநிதிகளும் தெரிவாகியுள்ளனர்.

அதிலும், நுவரெலியா மாவட்டத்தில் சுமார் 10 வருடங்களின் பின்னர் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் கைக்கோர்த்திருந்த இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றியுள்ளது.

நாடாளுமன்றத் தேர்தலுக்கான அறிவிப்பு விடுக்கப்பட்டிருந்த பின்னணியிலேயே, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் ஆறுமுகன் தொண்டமான் சுகயீனம் காரணமாக உயிரிழந்திருந்தார்.

வரைபடம்

உலகம் முழுவதும் உறுதி செய்யப்பட்ட தொற்றுகள்

Group 4

முழுமையாக பார்க்க பிரௌசரை அப்டேட் செய்யுங்கள்

ஆதாரம்: ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம், தேசிய பொது சுகாதார முகமைகள்

கடைசியாக பதிவு செய்யப்பட்டது 1 ஜூன், 2022, பிற்பகல் 2:54 IST

ஆறுமுகன் தொண்டமானின் மறைவை அடுத்து, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உடனடியாக அவரது புதல்வரான ஜீவன் தொண்டமானை தேர்தல் களத்தில் இறக்கியது.

தந்தையின் மறைவு, கடந்த ஆட்சியாளர்களின் தவறுகள் என பல்வேறு காரணங்களின் அடிப்படையில் இந்த முறை தேர்தலில் ஜீவன் தொண்டமான் தலைமையிலான இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மாபெரும் வெற்றியை நுவரெலியா மாவட்டத்தில் பெற்றுகொண்டது.

குறிப்பாக இந்த முறை தேர்தலில் போட்டியிட்ட ஜீவன் தொண்டமான் தமிழ் வேட்பாளர்களிலேயே அதிகளவிலான வாக்குகளை பெற்றவர் என்ற பெருமையை பெற்றுகொண்டார்.

பட மூலாதாரம், FACEBOOK

நுவரெலியா மாவட்டத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் போட்டியிட்ட அவருக்கு, இந்த முறை ஒரு லட்சத்து 9 ஆயிரத்து 155 வாக்குகள் கிடைத்திருந்தன.

அத்துடன், அதே கட்சி சார்பில் போட்டியிட்ட மருதபாண்டி ரமேஸ்வரன் 57 ஆயிரத்து 902 வாக்குளை பெற்றுகொண்டார்.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸில் கடந்த நாடாளுமன்றத்தில் ஆறுமுகன் தொண்டமான் மற்றும் முத்துசிவலிங்கம் ஆகியோர் அங்கம் வகித்திருந்ததுடன், இந்த முறை புதிதான இருவர் தெரிவாகியுள்ளனர்.

புதியவர்கள் நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தை பெற்றுகொண்டுள்ளமையினால், அவர்களுக்கு எந்தளவு மக்கள் பிரச்சனைகளை தீர்த்துகொள்ள முடியும் என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்த வண்ணமே உள்ளது.

இந்த நிலையில், எதிரணியாக தமிழ் முற்போக்கு கூட்டணி சார்பில் ஐக்கிய மக்கள் சக்தியில் போட்டியிட்ட பழனி திகாம்பரம், வீ.இராதாகிருஸ்ணன், எம்.உதயகுமார் ஆகியோரும் தெரிவாகியுள்ளனர்.

மறுபுறத்தில் பதுளை மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் போட்டியிட்ட வடிவேல் சுரேஷ், ஏ.அரவிந்தகுமார் ஆகியோரும் இந்த முறை நாடாளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ளதுடன், கண்டி மாவட்டத்திலிருந்து வேலுகுமார் தெரிவாகியுள்ளார்.

எனினும், மலையக மக்கள் வாழும் இரத்தினபுரி, கேகாலை, களுத்துறை போன்ற பகுதிகளுக்கு எந்தவொரு தமிழரும் தெரிவாகவில்லை.

இரத்தினபுரி, மாத்தளை, கேகாலை, களுத்துறை, மாத்தறை போன்ற பகுதிகளுக்கு தமிழ் மக்கள் பிரதிநிதிகள் இல்லாமையினால், அந்த மக்கள் இன்றும் பாரிய பிரச்சனைகளை சந்தித்து வருகின்றனர்.

குறிப்பாக இரத்தினபுரி மாவட்டத்தில் தேசிய பட்டியல் மூலம் ஒரு உறுப்புரிமையை பெற்றுகொடுக்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு கூட தற்போது வலுப் பெற்றுள்ளதை அவதானிக்க முடிகின்றது.

இவ்வாறான பின்னணியில் செய்வதறியாது திகைத்திருக்கும் குறித்த மாவட்டங்களை சேர்ந்த தமக்கு இந்த முறையும் ஏமாற்றம் மாத்திரமே எஞ்சும் என அந்த பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

ஆட்சி பீடம் ஏறியுள்ளவர்கள் நுவரெலியா, பதுளை, கண்டி ஆகிய மாவட்டங்களுக்கு வெளியில் வாழும் தமிழர்களுக்காக இந்த முறையாவது ஏதேனும் திட்டங்களை செய்ய முன்வர வேண்டும் என்பதே அந்த மக்களின் கோரிக்கையாகும்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: