இலங்கை: தர்மச்சக்கர ஆடை வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார் மஸாஹிமா

பட மூலாதாரம், Facebook
பௌத்த சின்னமாகக் கருதப்படும் தர்மச் சக்கரம் அச்சிடப்பட்ட துணியிலான ஆடையை அணிந்திருந்தார் எனும் குற்றச்சாட்டில், கண்டி மாவட்டத்தைச் சேர்ந்த பெண்ணொருவருக்கு எதிராக இலங்கை போலீஸார் தொடர்ந்திருந்த வழக்கை மீளப் பெற்றுள்ளனர்.
மஹியங்கண நீதிவான் நீதிமன்றில் இந்த வழக்கு நேற்று திங்கட்கிழமை நீதவான் ஏ.ஏ.பி. லக்ஷ்மன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது, சட்ட மா அதிபரின் அறிவுரைக்கு அமைவாக, இந்த வழக்கை தொடர்ந்து நடத்த முடியாதென்றும், அதனால் வழக்கை மீளப் பெற்றுக் கொள்வதாகவும் போலீஸார் தெரிவித்தனர்.
இதனையடுத்து குறித்த குற்றச்சாட்டுகளில் இருந்தும், வழக்கிலிருந்தும் மேற்படி பெண்ணை விடுவிப்பதாக நீதவான் அறிவித்தார்.
கண்டி மாவட்டம் - கொலங்கொட எனும் பிரதேசத்தைச் சேர்ந்த மஸாஹிமா (தற்போது வயது 48) எனும் பெண், தர்மச் சக்கரம் அச்சிடப்பட்ட ஆடையை அணிந்திருந்தார் என்றும், அதன் மூலம் அவர் பௌத்த மதத்தை அவமதித்து விட்டார் எனவும், அதன் மூலம் அவர் இனமுறுகலை ஏற்படுத்தினார் என்றும் குற்றம்சாட்டி, கடந்த வருடம் மே மாதம் 17ஆம் தேதி - ஹசலக போலீஸாரால் கைது செய்யப்பட்டு, மறுநாள் மஹியங்கண நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டார்.
இதன்போது குற்றம்சாட்டப்பட்ட பெண்ணை விளக்க மறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து அவர் - பதுளை சிறைச்சாலையில் 14 நாட்கள் தடுத்து வைக்கப்பட்டார்.
- கொரோனா சந்தேகங்கள்: முக்கிய கேள்விகளும் அதற்கான பதில்களும்
- கொரோனா வைரஸ்: உங்களை தற்காத்துக் கொள்வது எப்படி?
- கொரோனா வைரஸ் சிகிச்சைக்கு மருந்து எப்போது கிடைக்கும்?
- கொரோனா வைரஸ்: எந்தெந்த பரப்புகளில் எவ்வளவு நேரம் உயிர் வாழும்?
- கொரோனா வைரஸ் : இதுவே கடைசி கொள்ளை நோய் அல்ல
- கொரோனா வைரஸ்: கோவிட் - 19 பற்றி நமக்கு தெரியாத விஷயங்கள் என்ன?
மேற்படி பெண் மீது தொடரப்பட்ட வழக்கில் கொழும்பைச் சேர்ந்த சட்டத்தரணி தம்பதிகள் ஏ.எம்.எம். சறூக் மற்றும் பாத்திமா நுஸ்ரா சறூக் ஆகியோர் ஆஜராகி வந்தனர். கட்டணம் எதனையும் பெறாமல் மேற்படி சட்டத்தரணிகள் இந்த வழக்கில் ஆஜராகிமை குறிப்பிடத்தக்கது.
சரியான வடிவம் அரசிடம் இல்லை
இதேவேளை, குற்றம்சாட்டப்பட்ட பெண் அணிந்திருந்த ஆடையில் உள்ளது, தர்மச் சக்கரம்தானா என்பதை ஒப்பிட்டுப் பார்ப்பதற்காக அதனை புத்த சமய அலுவல்கள் ஆணையாளருக்கும், தர நிர்ணய சபையினருக்கும் தாங்கள் அனுப்பியதாகவும், ஆனால் அதனை ஒப்பிட்டு நோக்குவதற்கு தம்மிடம் தர்மச் சக்கரத்தின் சரியான வடிவம் இல்லை என்று அவர்கள் கூறி விட்டனர் எனவும், கடந்த வருடம் ஜுன் மாதம் நீதிமன்றில் போலீஸார் தெரிவித்திருந்தனர்.
பட மூலாதாரம், FAcebook
இதனையடுத்து தன்னை போலீஸார் கைது செய்து, தடுத்து வைத்திருந்தமைக்கு எதிராக, மேற்படி மஸாஹிமா எனும் பெண், கடந்த வருடம் ஜுன் மாதம் நடுப்பகுதியளவில் அடிப்படை உரிமை மீறல் வழக்கு ஒன்றினை உச்ச நீதிமன்றில் தாக்கல் செய்தார்.
இந்த நிலையில், குறித்த பெண்ணை கைது செய்து விளக்க மறியலில் வைத்திருந்தமையின் மூலம் அவரின் அடிப்படை உரிமை மீளப்பட்டுள்ளதாகவும், அதற்காக அவருக்கு நீதிமன்றின் மூலம் நஷ்டைஈட்டைப் பெற்றுக் கொடுக்கப் போவதாகவும் சட்டத்தரணி சறூக் கூறினார்.
"குறித்த பெண்ணுக்கு நஷ்டஈட்டை வழங்குமாறு நேற்றைய தினம் மஹியங்கண நீதவான் நீதிமன்றில் கோரிக்கை விடுத்தோம். ஆனால், வழக்கை தொடர்ந்து நடத்த முடியாது என்று மட்டுமே சட்ட மா அதிபர் அறிவுறுத்தல் வழங்கியுள்ளதாகவும், நஷ்டஈடு வழங்குவது தொடர்பில் அவர் எதனையும் குறிப்பிடவில்லை என்றும் மன்றில் நீதவான் கூறினார். எனவேதான், உச்ச நீதிமன்றின் மூலம், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நஷ்டஈட்டைப் பெற்றுக் கொடுக்கத் தீர்மானித்துள்ளோம்" எனவும் சட்டத்தரணி சறூக் தெரிவித்தார்.
புத்தரை பச்சை குத்திய நயோமி கோல்மன்
இலங்கையில் இதுபோன்றதொரு 'பௌத்த சமய அவமதிப்பு' குற்றச்சாட்டு ஒன்றினை 2014ஆம் ஆண்டு பிரித்தானியாவைச் சேர்ந்த நயோமி கோல்மன் எனும் பெண் - இலங்கைக்கு சுற்றுலாப் பயணியாக வந்தபோது எதிர்கொண்டார்.
பட மூலாதாரம், facebook
அப்போது அந்தப் பெண்ணின் இடதுகை புஜத்தில் புத்தரின் வடிவம் பச்சை குத்தப்பட்டிருந்ததைக் காரணம் காட்டி, அவரை போலீஸார் கைது செய்து, 04 நாட்கள் தடுத்து வைத்திருந்தனர். பின்னர் அவர் நாடு கடத்தப்பட்டார்.
பிரித்தானியா சென்ற நயோமி கோல்மன், அந்த சம்பவத்துக்கு எதிராக இலங்கையின் உச்ச நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்தார். மூன்று வருடங்கள் நீடித்த அந்த வழக்கின் தீர்ப்பு 2017ஆம் ஆண்டு, நயோமி கோல்மன் எனும் அந்தப் பெண்ணுக்கு சார்பாக வழங்கப்பட்டது.
புத்தரின் உருவத்தை தனது உடலில் பச்சை குத்திக் கொண்டமை, அந்தப் பெண்ணின் அடிப்படை உரிமை என, தனது தீர்ப்பில் நீதிமன்றம் குறிப்பிட்டது. மேலும், அந்தப் பெண்ணை கைது செய்ததன் மூலம் அவரின் அடிப்படை உரிமை மறுக்கப்பட்டதாகவும் நீதிமன்றம் சுட்டிக்காட்டியது.
எனவே, புத்தரின் உருவத்தை பச்சை குத்திக் கொண்டதாகக் கூறி, அந்தப் பெண்ணைத் தடுத்து வைத்தமைக்கு நஷ்டஈடாக 05 லட்சம் ரூபாவை அரசாங்கம் வழக்க வேண்டும் என, நீதிமன்றம் உத்தரவிட்டது.
அத்தோடு பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு வழக்குச் செலவாக 02 லட்சம் ரூபாவை வழங்க வேண்டும் எனவும் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இவற்றுக்கு மேலதிகமாக அந்தப் பெண்ணைக் கைது செய்த கட்டுநாயக்க போலீஸ் நிலையப் பொறுப்பதிகாரி மற்றும் போலீஸ் சார்ஜன்ட் ஆகியோர், தலா 50 ஆயிரம் ரூபாயை அந்தப் பெண்ணுக்கு வழங்க வேண்டுமென்றும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
பிற செய்திகள்:
- டிரம்ப் Vs பைடன்: மிஷெல் ஒபாமா வெளியிட்ட உணர்ச்சிப்பூர்வ காணொளி
- அமித் ஷா மீண்டும் மருத்துவமனையில் அனுமதி; பிரணாப் தொடர்ந்து கவலைக்கிடம்
- ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க கோரிய வேதாந்தா மனுக்கள் தள்ளுபடி
- அம்மை முதல் கொரோனா வரை கைகொடுக்கும் தமிழர் மருத்துவ முறை: கவனிக்கப்படாதது ஏன்?
- பெனோ ஸெஃபைன்: "நீ என்ன பெரிய கலெக்டரா?" ஐஎஃப்எஸ் அதிகாரியாக உதவிய சமூக கோபம்
- சிபிஐ மோதலால் அறியப்பட்ட அதிகாரி எல்லை பாதுகாப்பு படைக்கு நியமனம்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: