இலங்கை: திலீபனுக்கு தடையை மீறி அஞ்சலி செலுத்த முற்பட்ட சிவாஜிலிங்கம் கைது

சிவாஜி

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் ஆரம்பகால உறுப்பினரான திலீபனின் 33ஆவது நினைவேந்தலை கடைப்பிடிக்க முயன்ற தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் உறுப்பினரும், வட மாகாண சபை முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் - கோப்பாய் பகுதியில் வைத்து எம்.கே.சிவாஜிலிங்கம் கைது செய்யப்பட்டுள்ளார்.

உயிரிழந்த திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுகளையோ அல்லது ஊர்வலங்களையோ நடத்த கூடாது என யாழ்ப்பாணம் நீதிமன்றம் நேற்றைய தினம் உத்தரவு பிறப்பித்திருந்தது.

இந்த நீதிமன்ற உத்தரவிற்கு அமைய, யாழ்ப்பாணம் பகுதிகளில் திலீபன் நினைவேந்தல் நிகழ்வுகள் எதுவும் நடத்தப்படவில்லை.

இந்த நிலையில், திலீபனின் நினைவேந்தலை நடத்த முயற்சித்த குற்றச்சாட்டின் கீழ் எம்.கே.சிவாஜிலிங்கம் யாழ்ப்பாணம் - கோப்பாய் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

நீதிமன்ற உத்தரவிற்கு அமைய, யாழ்ப்பாணம் - நல்லூர் பகுதியிலுள்ள திலீபனின் நினைவிடத்தில் அமைக்கப்பட்டிருந்த உருவப்படங்கள் மற்றும் நினைவேந்தல் பதாகைகள் அனைத்தும் காவல்துறையினரால் நேற்றிரவு அகற்றப்பட்டன.

யார் இந்த திலீபன்?

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் ஆரம்பகால உறுப்பினரான திலீபன் (பார்த்தீபன் இராசையா) விடுதலை போராட்டத்தில் முக்கிய உறுப்பினராக செயற்பட்ட ஒருவராவார்.

இலங்கையில் இந்திய அமைதி காப்புப் படையினரிடம் ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், உயிரை துறந்தவர் திலீபன்.

1987ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 15ஆம் தேதி இந்த ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து உணவு தவிர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்த திலீபன், அதே ஆண்டு செப்டம்பர் மாதம் 26ஆம் தேதி உயிரிழந்தார்.

வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் மீளக் குடியமர்த்தல் என்ற போர்வையில் திட்டமிட்ட குடியேற்றங்கள் அமைக்கப்படுவது தடுத்து நிறுத்தப்பட வேண்டும், இராணுவம், போலீஸ் தடுப்பு காவலிலுள்ள தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும், அவசரகால சட்டம் முழுமையாக நீக்கப்பட வேண்டும், ஊர்காவல் படையினருக்கு வழங்கப்பட்டுள்ள ஆயுதங்கள் முற்றாக களையப்பட வேண்டும் மற்றும் தமிழர் பிரதேசங்களில் புதிதாக போலீஸ் நிலையங்கள் திறக்கப்படக்கூடாது என்ற ஐந்து கோரிக்கைகளை முன்வைத்தே திலீபன் உணவு தவிர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்திருந்தார்.

இந்த கோரிக்கைகள் தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தாத நிலையில், திலீபன் தனது போராட்டத்தை கைவிடாது முன்னெடுத்தார்.

இவ்வாறான நிலையிலேயே 1987ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 26ஆம் தேதி உயிரிழந்தார்.

அவரது 33ஆவது ஆண்டு நினைவு நாள் எதிர்வரும் 26ஆம் தேதி அனுஷ்டிக்கப்படவுள்ள பின்னணியில், செப்டம்பர் 15ஆம் தேதியான இன்று முதல் அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்த கடந்த ஆட்சியில் சந்தர்ப்பம் வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: