இலங்கை நாடாளுமன்றத்தில் திடீரென உறுப்பினர்கள் அணியும் ஆடை குறித்து சர்ச்சை எழுந்தது ஏன்?

டிரஸ் கோட் சித்தரிப்புப் படம்

பட மூலாதாரம், Getty Images

இலங்கை நாடாளுமன்றத்தில் கடந்த 22ஆம் தேதி, ஆடை தொடர்பான சர்ச்சை ஒன்று ஏற்பட்ட நிலையில், தற்போது அது ஒரு பேசு பொருளாக மாறியுள்ளது.

தேசிய காங்கிரஸின் தலைவர் ஏ.எல்.எம்.அதாவுல்லா நாடாளுமன்றத்திற்கு அணிந்து வந்த ஆடை அன்றைய தினம் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

நாடாளுமன்ற விதிகளை மீறி, அதாவுல்லா ஆடை அணிந்திருந்ததாக பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி சபையில் தெரிவித்திருந்தது.

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார், ஏ.எல்.எம்.அதாவுல்லா அணிந்த ஆடைக்கு கடும் எதிர்ப்பை வெளியிட்டார்.

நாடாளுமன்ற விதிகளை மீறி ஆடை அணிய அனுமதி வழங்கப்படும் பட்சத்தில், நாடாளுமன்ற அமர்வுகளுக்கு தான் மேலாடையின்றி வருகைத் தருவதாக சபாநாயகரிடம் எஸ்.எம்.மரிக்கார் கூறியிருந்தார்.

ஏ.எல்.எம்.அதாவுல்லா, பாகிஸ்தான் அல்லது ஆப்கானிஸ்தான் நாடாளுமன்றத்திற்கு செல்வதை போன்றதொரு ஆடையை அணிந்து நாடாளுமன்றத்திற்கு வருகைத் தந்துள்ளதாகவும் எஸ்.எம்.மரிக்கார் அன்று குற்றம் சுமத்தியிருந்தார்.

பக்கச்சார்பின்றி, நேர்மையாக நாடாளுமன்றத்தில் கடமையாற்றுமாறு சபாநாயகரை பார்த்து, எஸ்.எம்.மரிக்கார் கோரியிருந்தார்.

எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புக்கு பிறகு ஏ.எல்.எம்.அதாவுல்லா சபையிலிருந்து வெளியேற்றப்பட்டார்.

ஏ.எல்.எம்.அதாவுல்லா அணிந்திருந்த ஆடை

பட மூலாதாரம், NIROSH

படக்குறிப்பு,

அதாவுல்லா நாடாளுமன்றத்தில் அணிந்திருந்த ஆடை

தேசிய காங்கிரஸின் தலைவர் ஏ.எல்.எம்.அதாவுல்லா வெள்ளை நிற ஆடையொன்றின் மீது கறுப்பு நிறத்திலான மேலாடையொன்றை அணிந்து நாடாளுமன்ற அமர்வுகளுக்கு வருகைத் தந்திருந்தார்.

நாடாளுமன்ற சபைக்குள் அதிக குளிர் காரணமாகவே தான் இவ்வாறான ஆடையொன்றை அணிந்திருந்ததாக அவர் அன்றைய தினம் சபையில் அறிவித்திருந்தார்.

பின்னர் அன்றைய தினத்திற்கு மாத்திரம் அவருக்கு சபைக்குள் பிரவேசிக்க சபாநாயகர் அனுமதி வழங்கியிருந்தார்.

இலங்கை நாடாளுமன்றத்திற்கு அணிய கூடிய ஆடைகள் எவை?

இலங்கை நாடாளுமன்ற அமர்வுகளுக்கு எவ்வாறான ஆடைகளை நாடாளுமன்ற உறுப்பினர்கள் அணிய வேண்டும் என்று சில விதிகள் இருப்பதாக நாடாளுமன்ற பிரதி செயலாளர் நாயகம் நீல் இட்டவல பிபிசி தமிழுக்கு தெரிவித்தார்.

நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆடை தொடர்பில் இலங்கை அரசியலமைப்பில் கூறப்படாத போதிலும், நாடாளுமன்ற விதிகளாக அது பின்பற்றப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

நாடாளுமன்ற விதிகளுக்கு அப்பாற்பட்டு வேறு ஆடைகளை உறுப்பினர்கள் அணிய வேண்டுமென்றால், விசேட அனுமதியை பெற்றுக்கொள்ள வேண்டியது அத்தியாவசியம் என அவர் குறிப்பிட்டிருந்தார்.

பட மூலாதாரம், Getty Images

நாடாளுமன்ற பெண் உறுப்பினர்கள் அணியும் ஆடைகள்

இலங்கை கலாசாரத்திற்கு அமைய, நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அணிவதற்கான சம்பிரதாய ரீதியிலான ஆடைகள் காணப்படுகின்றன.

இதன்படி, புடவை மற்றும் சிங்கள கலாசாரத்திலான ஒசரி (புடவை கட்டும் மற்றுமொரு விதம்) ஆகியவற்றை பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அணிவது சம்பிரதாயம் என நாடாளுமன்ற பிரதி செயலாளர் நீல் இட்டவல தெரிவிக்கின்றார்.

பெண் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு சுகயீனம் ஏற்படும் பட்சத்தில், நாடாளுமன்ற விசேட அனுமதியின் பிரகாரம், கலாசார ரீதியிலான வேறு ஏதேனும் ஒரு ஆடையை அணிய முடியும் என அவர் குறிப்பிடுகின்றார்.

நாடாளுமன்ற ஆண் உறுப்பினர்கள் அணியும் ஆடைகள்

பட மூலாதாரம், Getty Images

ஆண் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மேலத்தேய கலாசார ஆடையை அணிய வேண்டும் என நீல் இட்டவல தெரிவிக்கின்றார்.

அத்துடன், இலங்கை கலாசாரத்திற்கு அமைவான ஆடைகளை அணிய, அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

மேலும், தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வேட்டி மற்றும் முழு கையை கொண்ட சட்டை ஆகியவற்றை அணி முடியும் என அவர் குறிப்பிட்டார்.

அதைத்தவிர, கால் சட்டை மற்றும் முழு கையை கொண்ட சட்டை அணிந்தும் நாடாளுமன்ற அமர்வுகளில் கலந்துக்கொள்ள சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக அவர் கூறுகின்றார்.

இதைத் தவிர, வேறு விதமான ஆடைகளை ஆண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அணிய வேண்டும் என்றால், அதற்காக விசேட அனுமதியை நாடாளுமன்றத்தில் பெற்றுக்கொள்ள வேண்டும் என நாடாளுமன்ற பிரதி செயலாளர் நாயகம் நீல் இட்டவல பிபிசி தமிழுக்கு தெரிவித்தார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :