தென் கொரிய போர் கைதிகளை சுரங்கங்களில் அடிமையாக வைத்திருக்கும் வடகொரியா

  • லாரா பிக்கர்
  • பிபிசி நியூஸ் சியோல்
வடகொரியா

பட மூலாதாரம், KIM HYE-SOOK

படக்குறிப்பு,

வடகொரியா நிலக்கரி சுரங்கத்தில் தனது அனுபவங்களை சித்திரித்து கிம் தீட்டிய ஓவியம்

``தொலைக்காட்சியில் அடிமைகள் கட்டி வைக்கப்பட்டிருப்பது மற்றும் இழுத்துச் செல்லப்படுவதைப் பார்க்கும் போது, எனக்கே நடப்பது போல உணர்கிறேன்'' என்று சோய் கி-சுன் என்னிடம் தெரிவித்தார். 1953-ல் கொரிய போர் முடிந்தபோது வட கொரியா பிடித்து வைத்திருந்த சுமார் 50 ஆயிரம் தென்கொரிய போர்க் கைதிகளில் ஒருவர் இவர்.

``வேலை செய்யும் முகாம்களுக்கு நாங்கள் இழுத்துச் செல்லப்பட்டபோது, துப்பாக்கிமுனையில், எங்களை வரிசையாக அழைத்துச் சென்றார்கள். சுற்றிலும் ஆயுதம் ஏந்திய வீரர்கள் இருந்தனர். அடிமைத்தனமான வேலை என்பதைவிட இது வேறு என்னவாக இருக்க முடியும்'' என்று அவர் கேட்டார்.

சுமார் 670 போர்க் கைதிகளுடன் வடக்கு ஹாம்ஜியோங் மாகாணத்தில் ஒரு சுரங்கத்தில் தாம் வேலை பார்த்ததாக சோய் (உண்மையான பெயர் அல்ல) தெரவித்தார். 40 ஆண்டுகள் கழித்து தப்பிச் செல்லும் வரை அங்கு தான் அவர் வேலை பார்த்துள்ளார்.

சுரங்கங்களில் நடப்பவை குறித்த தகவல்களைப் பெறுவது அவ்வளவு எளிதானதல்ல. அங்கு நடந்த உயிரைப் பலி வாங்கும் வகையிலான வெடி சம்பவங்கள், கூட்டமாக கொலை செய்தல் போன்றவை குறித்து சோய் போல உயிருடன் இருப்பவர்கள் கூறுகின்றனர். அடிமைகளாக இருந்த காலத்தில் திருமணம் செய்து, குழந்தைகள் பெற்றுக் கொள்ள ஊக்குவிக்கப்பட்டதாகவும், குறைவான உணவுப் பொருட்களே தந்ததாகவும் அதில் தான் வாழ்க்கையை நடத்தியதாகவும் சோய் தெரிவித்தார். அந்தப் பிள்ளைகளையும் சுரங்கத்திற்கே அழைத்துச் செல்வதைத் தவிர தங்களுக்கு வேறு வழி தெரியவில்லை என்று அவர் கூறினார்.

``நிலக்கரி சுரங்கம் உள்ள பகுதிகளில் பல தலைமுறைகளாக மக்கள் பிறக்கிறார்கள், வாழ்கிறார்கள், இறக்கிறார்கள். தங்கள் வாழ்நாள் முழுக்க இன அடிப்படையில் பாரபட்சமான கொடுமைகளுக்கு ஆளாகின்றனர்'' என்று புதிய ஓர் அறிக்கை தயாரித்துள்ள ஜோயன்னா ஹோசனியக் கூறியுள்ளார். வட கொரிய மனித உரிமைகளுக்கான குடிமக்கள் கூட்டமைப்பு சார்பில் வட கொரியாவில் இருந்து ரத்த நிலக்கரி ஏற்றுமதி என்ற தலைப்பில் அந்தக் கட்டுரை வெளியாகியுள்ளது. அரசின் நிலக்கரி சுரங்கங்களில் உள்ளே நடக்கும் விஷயங்களை கோடிட்டுக் காட்டுவதாக இந்த அறிக்கை உள்ளது. வட கொரியாவில் இருந்து சில பொருட்களை வெளிநாடுகளுக்குக் கடத்திச் சென்று விற்பதன் மூலம் வெளியில் சொல்ல முடியாத அளவுக்கான தொகையை வருமானமாகப் பெறுவதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு கிடைக்கும் பல நூறு மில்லியன் டாலர் பணம், அரசின் ரகசிய ஆயுதத் தயாரிப்புத் திட்டங்களுக்கு செலவிடப் படுகிறது என்றும், இந்த கடத்தலில் ஜப்பானிய யக்குஜா உள்ளிட்ட கிரிமினல் கோஷ்டிகள் துணை செய்வதாகவும் அறிக்கை கூறுகிறது.

பட மூலாதாரம், KIM HYE-SOOK

வட கொரிய நிலக்கரி சுரங்கங்களில் வேலை பார்த்த 15 பேரின் நேரடி அனுபவங்களின் அடிப்படையில் இந்த அறிக்கை தயாரிக்கப் பட்டுள்ளது. அதில் ஒருவரை பிபிசி சந்தித்து பேட்டி எடுத்தது. வட கொரிய நிலக்கரி சுரங்கங்களில் துன்பங்களை அனுபவித்து, தப்பி வந்ததாகக் கூறும் வேறு 4 பேரிடம் தனித்தனியாக அவர்களின் அனுபவங்களை பிபிசி கேட்டறிந்தது. வட கொரியாவில் உள்ள தங்கள் குடும்பத்தினரின் பாதுகாப்பு கருதி, தங்களைப் பற்றிய அடையாளங்களை வெளியிட வேண்டாம் என 4 பேர் கேட்டுக் கொண்டனர்.

மனித உரிமை மீறல் புகார்களை வட கொரியா தொடர்ந்து மறுத்து வருகிறது. அதுபற்றிய புகார்களுக்குக் கருத்து கூற மறுத்து வருகிறது. தற்காலிகப் போர் நிறுத்த ஒப்பந்த விதிகளின்படி, போர்க் கைதிகள் அனைவரும் திருப்பி அனுப்பப்பட்டு விட்டனர் என்று வட கொரியா கூறுகிறது. தென் கொரியாவுக்கு செல்லாமல் வட கொரியாவில் மீதியுள்ளவர்கள் ``இந்தக் குடியரசின் மீது பற்றுதல் கொண்டதால்'' தங்கிவிட்டனர் என்று அரசு அதிகாரிகள் கூறுகின்றனர்.

ஆனால் இது உண்மை கிடையாது என்று சோய் கூறுகிறார். ஆயுதம் தாங்கிய வீரர்களின் பாதுகாவலுடன் உள்ள, வேலிகள் போட்ட முகாமின் உள்ளே தாம் வாழ்ந்ததாக அவர் தெரிவித்தார். போதிய அளவுக்குக் கடுமையாக உழைத்தால் தாயகம் செல்ல அனுமதி கிடைக்கும் என்று முதலில் அவரிடம் கூறியிருக்கிறார்கள். ஆனால் தென் கொரியாவுக்குத் திரும்பும் நம்பிக்கை படிப்படியாகக் குறைந்துவிட்டது.

ஏழு வயதிலேயே தொழிலாளி

வட கொரிய நிலக்கரி சுரங்கங்களில் இப்போதுள்ள, கட்டாயப்படுத்தப்பட்ட உழைப்பு சூழல், கொரியா போருக்குப் பிறகு உருவாக்கப்பட்டதாகத் தெரிகிறது. ``பரம்பரை அடிமைத்தனம்'' என்பது போல இது உருவாக்கப் பட்டுள்ளது என்று மனித உரிமை அமைப்பின் அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

வடக்கு மற்றும் தெற்கு ஹம்ஜியோங் மாகாணங்களில் பெரிய நிலக்கரி, மாக்னசைட், துத்தநாகம் மற்றும் கந்தக சுரங்கங்களுக்கு தென் கொரியர்கள் கொண்டு செல்லப்பட்டனர் என்று மனித உரிமைகள் அமைப்பின் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

சுரங்கத்திற்கு கொண்டு செல்லப்படும் எல்லோருமே போர்க் கைதிகளாக இல்லை.

கிம் ஹியே-சூக்கின் தாத்தா கொரிய போரின் போது தென் கொரியாவுக்கு சென்றுவிட்டதால், அவரை சுரங்கத்தில் வேலை பார்க்க அரசு அனுப்பிவிட்டதாக, காவலர்கள் அவரிடம் தெரிவித்துள்ளனர். டீன் ஏஜ் வயதிலேயே அவர் சுரங்கத்திற்கு அனுப்பப் பட்டார்.

பட மூலாதாரம், KIM HYE-SOOK

அரசுக்கு எந்த அளவுக்கு விசுவாசமாக இருக்கிறார்கள், கொரிய தொழிலாளர் கட்சியில் அந்தக் குடும்பத்தில் எத்தனை பேர் உறுப்பினர்களாக இருக்கிறார்கள் என்பதன் அடிப்படையிலான தீர்ப்பு தான் அவரது தலைவிதியை நிர்ணயித்தது. அதன் அடிப்படையில் தான் கைதிக்கான வகுப்பு முடிவு செய்யப்படுகிறது.

தென் கொரியாவுடன் தொடர்பு இருக்கும் கைதியாக இருந்தால் மிகக் குறைவான வகுப்புக்கு உரிய மரியாதை தான் தரப்படும்.

சுரங்கத்தில் வேலை பார்க்கத் தொடங்கியபோது கிம் என்ற பெண்மணிக்கு வயது 16. தங்களுக்கு ஏழு வயதாக இருந்தபோதே, சுரங்கத்தில் பகுதி நேரமாக வேலை பார்த்ததாக, உயிர் தப்பி வந்தவர்கள் கூறியதாக மனித உரிமை அமைப்பின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

``எனக்கு முதலில் வேலை தரப்பட்ட இடத்தில் என் யூனிட்டில் 23 பேர் இருந்தனர்'' என்று அவர் நினைவுகூர்ந்தார். ``ஆனால் சுரங்கம் சரியும் போது மற்றும் நிலக்கரி டிராலியை இழுத்துச் செல்லும் கம்பி அறுந்துவிடும் போது, பின்னால் இருப்பவர்கள் சரிவில் சிக்கி மரணம் அடைவார்கள்'' என்று அவர் கூறினார்.

``சுரங்கம் தோண்டும் போது வெடி வைக்கும் சமயங்களில் சிலர் அதில் சிக்கி இறந்து போவார்கள். சுரங்கங்களில் பல அடுக்குகள் இருக்கும். ஆனால் சில நேரம் தண்ணீர் அடுக்கு அழுத்தம் காரணமாக சுரங்கத்தில் உடைத்துக் கொண்டு நுழைந்தால், வெள்ளத்தில் மூழ்கி பலர் சாவார்கள். எனவே, 23 பேரில் கடைசியில் 6 பேர் தான் மிஞ்சினோம்'' என்று அவர் கூறினார்.

`சாவு ஒரு நல்ல முடிவாக இருக்கும்'

நீதிமன்றத்தின் முடிவு, ஒருவரது விதியை சுரங்கங்களுக்கு அனுப்புவதாக மட்டுமின்றி, நீங்கள் வாழ வேண்டுமா அல்லது சாக வேண்டுமா என்பதையும் முடிவு செய்கிறது என்று மனித உரிமை அமைப்பின் அறிக்கையை மேற்கோள் காட்டி அரசுப் பாதுகாப்பு அமைச்சக முன்னாள் அதிகாரி ஒருவர் கூறினார்.

``விசுவாசம் உள்ள குடும்பத்தினரை வாழ விடுவார்கள். குறைவான நிலை வகுப்பில் உள்ளவர்களைக் கொல்வதற்கு முயற்சிப்பார்கள்'' என்றார் அவர்.

ஆனால் மரண தண்டனைகள், பெரும்பாலும் ``தென் கொரிய உளவாளிகளுக்கு'' நிறைவேற்றப்படும் போது ``வட கொரிய சட்டங்களின்படி'' நிறைவேற்றப்பட்டன என்று அவர் தெரிவித்தார்.

பட மூலாதாரம், KIM HYE-SOOK

``இவரைக் கொல்வதற்கு சரியான காரணத்தைக் கூறும் தகவல் தொகுப்புகள் வேண்டும். ஒரே மாதிரியான குற்றங்களைச் செய்தவர்களாக இருந்தாலும், உங்களுக்கு நல்ல வகுப்புக்கான தகுத கிடைத்தால் உங்களை வாழ விடுவார்கள். அரசியல் கைதி முகாமுக்கு அனுப்ப மாட்டார்கள். சாதாரண சிறை அல்லது சீர்திருத்த தொழில் முகாமுக்கு அனுப்புவார்கள்'' என்று அவர் கூறினார்.

``அவர்களைக் கொல்ல மாட்டார்கள். ஏனெனில் சாவு நல்ல முடிவாக இருக்கும். நீங்கள் சாகவும் முடியாது. சாகும் வரை உத்தரவுகளுக்கு கீழ்ப்படிந்து வேலை பார்த்தாக வேண்டும்'' என்று அவர் தெரிவித்தார்.

அரசுப் பாதுகாப்பு அமைச்சகத்தின் விசாரணை அறைக்குப் பின்புறத்தில் ``துப்பாக்கியால் சுடும் கேலரி'' இருந்ததையும், சில கைதிகள் அங்கே கொல்லப்பட்டதையும் நேர்காணல் அளித்தவர் விவரித்தார். சிலர் மற்றவர்கள் முன்னிலையில் கொல்லப்பட்டனர், சிலர் ரகசியமாகக் கொல்லப்பட்டனர்.

இந்தத் தகவல்களை தனிப்பட்ட முறையில் பிபிசியால் தொடர்புபடுத்திப் பார்க்க முடியவில்லை. ஆனால், தன் தந்தை மற்றும் சகோதரருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதை நினைவு வைத்திருக்கும் லீ என்ற பெண்மணி கூறியதை நாங்கள் கேட்டோம்.

``என் தந்தையை அவர்கள் மரத்தில் கட்டி வைத்தனர். தேச துரோகி, உளவாளி மற்றும் எதிர்வினை ஆற்றுபவர் என்று அவரை கூறினர்'' என்று பிபிசி கொரியா பிரிவுக்கு என் சக செய்தியாளருக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியுள்ளார்.

லீயின் தந்தை முன்னாள் தென் கொரிய போர்க் கைதி. அதனால் லீயும் சுரங்கங்களில் கட்டாய வேலைக்கு அனுப்பப்பட்டார். தென் கொரியாவில் தனது போஹாங் நகரைப் பற்றி லீ யின் தந்தை பெருமையாகப் பேசுவார், லீயின் சகோதரர் அதை மற்ற தொழிலாளிகளிடம் பகிர்ந்து கொள்வார். அதற்காக, 3 பேர் கொண்ட குழுவினர், இருவரையும் சுட்டுக் கொன்றனர் என்று லீ தெரிவித்தார்.

`நாங்கள் எப்போதும் பசியுடன் இருந்தோம்'

பட மூலாதாரம், KIM

சுரங்க முகாம்களுக்கு உள்பட்ட பகுதியில் இயல்பான வாழ்வில் ஓரளவுக்கு அனுபவிக்க வட கொரிய அதிகாரிகள் அனுமதித்ததாகத் தெரிகிறது. சுரங்கத் தொழிலாளிகளுக்கு 1956-ல் அவர்கள் குடியுரிமை அளித்தனர். தங்கள் தாயகத்துக்குத் திரும்ப முடியாது என்பதை அப்போது தான் அந்தத் தொழிலாளர்கள் உணர்ந்து கொண்டனர்.

நாங்கள் பேட்டி எடுத்த எல்லோருமே, திருமணம் செய்து குழந்தைகள் பெற்றுக் கொள்ள அனுமதிக்கப்பட்டதாகக் கூறினர். ஆனால், அதற்கும் ஒரு காரணம் இருந்தது என்று கிம் தெரிவித்தார்.

``நிறைய குழந்தைகள் பெற்றுக் கொள்ளுமாறு அவர்கள் கூறுவார்கள். சுரங்கங்களைத் தொடர்ந்து பராமரிக்க வேண்டும். ஆனால் தினமும் பலர் சாகின்றனர். தினமும் விபத்துகள் நடக்கும். எனவே எங்களை நிறைய குழந்தைகள் பெற்றுக் கொள்ளுமாறு கூறுவார்கள். ஆனால் போதிய உணவு, டயாபர் போன்றவற்றைத் தர மாட்டார்கள். எனவே, நீங்கள் குழந்தை பெற்றுக் கொண்டாலும், நல்லபடியாக வளர்ப்பது கஷ்டமான காரியம்'' என்று அவர் விவரித்தார்.

நாடு தழுவிய அளவில் பொது மன்னிப்பு வழங்கிய போது 2001 ஆம் ஆண்டில் கிம் விடுவிக்கப்பட்டார். பிறகு சீன எல்லையில் உள்ள ஒரு ஆற்றைக் கடந்து தப்பி வந்துவிட்டார்.

சுரங்கத்தில் தாம் வாழ்ந்த 28 ஆண்டு கால வாழ்க்கையை வரைபடங்களாக வரைய அவர் முடிவு செய்தார். தனது துன்பகரமான நினைவுகளில் இருந்து மீள்வதற்கு அது உதவியதாகவும், தாம் அனுபவித்த கொடுமைகளை மற்றவர்களுக்குக் காட்டுவதாக அவை உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

நாங்கள் பேட்டி எடுத்த எல்லோருக்குமே தொடர்ச்சியாக இருந்தது - பசி என்ற பிரச்சினைதான். அதை மனித உரிமை அமைப்பின் அறிக்கையும் பதிவு செய்துள்ளது. ``பசி இல்லாமல் ஒரு நாள் கூட கடந்தது கிடையாது. நாங்கள் எப்போதுமே பசியுடன் தான் இருப்போம். ஒரு நாளில் ஒரு வேளைக்கு தான் சாப்பாடு தருவார்கள். மற்ற மக்கள் ஒரு நாளுக்கு மூன்று வேளைகள் சாப்பிடுவார்கள் என்பதே எங்களுக்குத் தெரியாது. பெரிய அரிசியை எங்களுக்குத் தருவார்கள். நீரில் ஊறவைத்தால் இன்னும் பெரிதாகும்'' என்று கிம் எங்களிடம் தெரிவித்தார்.

நோயுற்றிருந்தாலும், வேலைக்குப் போயாக வேண்டும் என்று கட்டாயப் படுத்தியதாக, முன்னாள் போர்க் கைதி ஒருவர் தெரிவித்தார்.

``ஒரு நாள் வேலைக்குப் போகாவிட்டால், உங்களுக்கான சாப்பாடு டோக்கன் தர மாட்டார்கள்'' என்றார் அவர்.

குறிப்பிட்ட அளவு வேலையை முடிக்க வேண்டும் என்று தொழிலாளர்களுக்கு தெரிவிக்கப்படும். ஒரு நாளுக்கு 3 டன் அளவுக்கு ஆந்த்ராசைட் என்ற கடின ரக நிலக்கரியை வெட்டி எடுக்க வேண்டியிருக்கும். அந்த வேலையை முழுமையாக முடிக்காவிட்டால் சாப்பாடு டோக்கன் கிடைக்காது, பசியுடன் தான் இருக்க வேண்டும்.

`அடிமைகள் மூலமான' வருமானத்தில் ஆயுதங்கள் தயாரிப்புத் திட்டம்

பட மூலாதாரம், KIM HYE-SOOK

அணு ஆயுதம் மற்றும் ஏவுகணை தயாரிப்புத் திட்டங்களுக்கு நிதி கிடைப்பதைத் தடுக்கும் வகையில் வட கொரியாவில் இருந்து நிலக்கரி ஏற்றுமதி செய்ய ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சில் தடை விதித்துள்ளது.

ஆனால் ``கடல் மார்க்கமாக பொருட்களை, குறிப்பாக நிலக்கரி மற்றும் மணலை சட்டவிரோதமாக ஏற்றுமதி செய்து'' பல நூறு மில்லியன் டாலர் அளவுக்கு வட கொரியா வருமானம் ஈட்டியுள்ளது என்று இரண்டு ஆண்டுகள் கழித்து, தடை அமல் குறித்த தனிப்பட்ட கண்காணிப்பு அமைப்புகள் தெரிவித்தன.

கடந்த டிசம்பர் மாதம் அமெரிக்காவும் வடகொரியாவும் ``பேரழிவு ஏற்படுத்தும் ஆயுதங்களைத் தயாரிப்பதற்கான நிதியை அளிக்கும் நிலக்கரி ஏற்றுமதிக்கான ஐ.நா. தடையை மாற்று வழிகள் மூலமாக தொடர்ந்து மீறின.'' சுரங்கங்கள் விரிவடைந்து கொண்டிருக்கின்றன என்று மனித உரிமைகள் அமைப்பின் அறிக்கை தெரிவிக்கிறது.

அடிமைகள் மற்றும் கட்டாய வேலையை வடகொரியா எந்த அளவுக்கு சார்ந்துள்ளது என்பதை ஐ.நா. முழுமையாக விசாரித்தறிய வேண்டும் என்று துணை இயக்குநர் ஜோயன்னா ஹோசனியாக் கோரிக்கை விடுத்துள்ளார். ``நிலக்கரி வெட்டி எடுத்தல் மற்றும் நிலக்கரி உள்ளிட்ட பொருட்கள் சட்ட விரோதமாக ஏற்றுமதி செய்யப்படுதல், இந்த ஏற்றுமதிகளில் தொடர்புடைய சர்வதேசத் தொடர்புகளையும்'' இதில் விசாரிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

தென் கொரியாவில், அரசாங்கம் அமைதியான பொருளாதார அம்சங்கள் குறித்து வட கொரியாவுடன் பேச்சு நடத்துவதில் கவனம் செலுத்தி வருகிறது. மனித உரிமை மீறல் பிரச்சினையை தீவிரமாக எழுப்பினால், பேச்சுவார்த்தையில் இருந்து வட கொரியா விலகிவிடும் ஆபத்து உள்ளது, இதனால் பிரச்சினைகள் அதிகரிக்கும் என்று தென் கொரியா கூறுகிறது.

ஆனால், ``மனித உரிமைகள் அம்சத்தை அமைதி மற்றும் அணு ஆயுதத்தைக் கைவிடுதல் குறித்த பேச்சுவார்த்தைகளுடன் இணைப்பதற்கு சரியான தருணம் இது'' என்று சியோலில் உள்ள ஐ.நா. மனித உரிமைகள் அமைப்பின் தூதர் கூறியுள்ளார். வட கொரியாவில் இருந்து தப்பி வந்தவர்களிடமும் இதுகுறித்து தகவல்களைப் பெற வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

பலர் இன்னும் துன்புறுகிறார்கள்

இருந்தபோதிலும் சுரங்கங்களில் கட்டாயமாக வேலை வாங்கப்பட்ட இரண்டு முன்னாள் போர்க் கைதிகளுக்கு கொஞ்சம் நம்பிக்கை கிடைத்தது. இருவரையும் அவர்கள் விருப்பத்திற்கு எதிராக பிடித்து வைத்து, கட்டாயப்படுத்தி வேலை வாங்கியதற்காக அவர்களுக்கு 17 ஆயிரத்து 600 டாலர்கள் நஷ்டஈடு தர வேண்டும் என வடகொரியாவுக்கும், அதன் அதிபர் கிம் ஜோங்-உன் -க்கும் சியோல் மத்திய மாவட்ட நீதிமன்றம் வரலாற்று முக்கியத்துவமான தீர்ப்பை அளித்தது.

வடகொரியாவில் பிடித்து வைக்கப்பட்டுள்ள போர்க் கைதிகளின் துன்பங்களை தென் கொரியா முதன்முறையாக ஒப்புக் கொண்டிருப்பதை இது காட்டுகிறது.

அவர்களில் ஒருவர் சோய்.

``நான் இறப்பதற்கு முன்பு நஷ்டஈடு வருமா என்று தெரியவில்லை. ஆனால், பணத்தைவிட, வழக்கில் வெற்றி பெற்றது தான் முக்கியம்'' என்று சியோலில் தனது அடுக்குமாடி வீட்டில் என்னிடம் அவர் தெரிவித்தார்.

எனக்கு ஒரு தட்டு நிறைய பழங்கள் தந்த போது, சுரங்கங்களில் துன்புற்ற நினைவுகள் அவருக்கு வந்து போகின்றன. இதெல்லாம் ஒரு காலத்தில் அவருக்கு ஆடம்பரமான விஷயங்களாக இருந்துள்ளன. வட கொரியாவில் உள்ள தன் குடும்பத்தினருக்கு சிறிது பணம் அனுப்ப முயற்சிப்பதாக அவர் என்னிடம் கூறினார். ``நான் இப்போது இங்கிருக்கும் நிலையில், அவர்கள் அங்கே என்ன துன்பங்களை சந்திக்கிறார்களோ என்ற கவலை எனக்கு உள்ளது'' என்று அவர் கவலைப்பட்டார்.

வரைபடங்கள்: கிம் ஹியே-சூக்

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: