புதுச்சேரியில் யாருக்கு வெற்றி வாய்ப்பு? லயோலா கல்லூரி முன்னாள் மாணவர்கள் கருத்துக் கணிப்பு முடிவுகள்

புதுச்சேரி சர்வே

(இந்தியா, இலங்கை மற்றும் உலக அளவிலான முக்கியச் செய்திகளைத் தெரிந்துகொள்ள இந்தப் பக்கத்தில் இணைந்திருங்கள்.)

புதுச்சேரியில் 2021 சட்டமன்றத் தேர்தலில், யாருக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் எனத் தேர்தலுக்கு முந்தைய கள ஆய்வு முடிவுகளை லயோலா கல்லூரி முன்னாள் மாணவர்கள் வெளியிட்டுள்ளனர். இதில் பாரதீய ஜனதா கட்சி, என்.ஆர்.காங்கிரஸ், அதிமுக உள்ளிட்ட கட்சிகள் உள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் இருப்பதாக கருத்துக் கணிப்பு முடிவுகள் தெரிவிப்பதாக ஆய்வை மேற்கொண்டவர்கள் கூறுகின்றனர்.

அரசியல் கட்சிகளைச் சாராத 30 கல்லூரி மாணவர்களைக் கொண்டு கடந்த மார்ச் 13ஆம் தேதியிலிருந்து 19ஆம் தேதி வரை இந்த கள ஆய்வு நடத்தப்பட்டது. இதில் புதுச்சேரியில் உள்ள 30 தொகுதிகளில் மாஹே மற்றும் ஏனாம் பிராந்தியத்தைத் தவிர்த்து மீதமுள்ள 28 தொகுதிகளில் கருத்துக் கேட்கப்பட்டது. ஒவ்வொரு தொகுதியிலும் 100 பேர் விதம் 28 தொகுதிகளுக்கு 2800 நபர்களிடம் இந்த கருத்துக் கணிப்பு சேகரிக்கப்பட்டது.

இதுகுறித்து லயோலா கல்லூரி முன்னாள் மாணவரும், கள ஒருங்கிணைப்பாளருமான ஜான் விக்டர்‌ சேவியர் கூறுகையில், "தற்போதுள்ள அரசியல் சூழலில் வாக்களிப்பதாக இருந்தால் எந்த கூட்டணி அல்லது கட்சிக்கு வாக்களிப்பீர்கள் என்று கருத்துக் கேட்பின் போது மக்களிடம் தன கேள்வி எழுப்பப்பட்டது. அதில், பாஜக, என்.ஆர்.காங்கிரஸ், அதிமுக உள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணியை 49 சதவீதம் மக்கள் தேர்வு செய்துள்ளனர். இதையடுத்து திமுக, காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட் கட்சி உள்ள மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி 34 சதவீதத்துடன் இரண்டாவதாக உள்ளது‌. மூன்றாவதாக 12 சதவீதம் பேர் பிற கட்சிகள் வாக்களிக்க இருப்பதாகத் தெரிவித்திருப்பதாகக் கூறுகின்றனர். இதில் 3 சதவீதம் மக்கள் எந்த கட்சிக்கு வாக்களிக்க இருக்கின்றனர் என்பதைத் தீர்மானிக்கவில்லை எனக் குறிப்பிட்டிருக்கின்றனர்.

அடுத்ததாக புதுச்சேரி மக்கள் விரும்பும் அரசியல் தலைவர் யார் என்ற கேள்விக்கு நமச்சிவாயத்தை அதிக பேர் விரும்புவதாக தெரிவித்துள்ளனர். நமச்சிவாயத்தை 40 சதவீதத்தினரும், ரங்கசாமியை 31.1 சதவீதத்தினரும், நாராயணசாமியை 11.9 சதவீத மக்களும், பிற தலைவர்களை 10 சதவீத மக்களும் ஆதரிக்கின்றனர்," என்கிறார் ஜான்.

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு கொரோனா

பட மூலாதாரம், Reuters

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. அவர் வீட்டில் தாம்மைத் தாமே தனிமைப்படுத்திகொடுள்ளதாக பாகிஸ்தான் அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் சுகாதார அமைச்சர் ஃபைசல் சுல்தான் இதை ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

கடந்த வியாழன்றுதான் 68 வயதாகும் இம்ரான் கானுக்கு கொரோனா வைரஸ் தடுப்பூசியின் முதல் டோஸ் வழங்கப்பட்டது. சீனாவின் சீனோஃபார்ம் நிறுவனத்தின் தடுப்பூசி அவருக்கு வழங்கப்பட்டது.

கோவிட்-19 தொற்றின் காரணமாக இதுவரை பாகிஸ்தானில் 6.2 லட்சத்துக்கும் மேலானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 13,800 பேர் இறந்துள்ளனர்.

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை பாகிஸ்தானில் மீண்டும் அதிகரித்து வருவதால் அங்கு ஊரடங்கு கட்டுப்பாடுகள் மீண்டும் விதிக்கப்பட்டு வருகின்றன.

இலங்கை பஸ் விபத்து: பள்ளத்தில் விழுந்து 14 பேர் மரணம்

இலங்கையில் இன்று காலை ஏற்பட்ட பஸ் விபத்தில் 14 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்து இன்று அதிகாலை 7 மணியளவில் நடந்ததாக போலீஸார் தெரிவிக்கின்றனர்.

இலங்கையின் ஊவா மாகாணத்தின் பதுளை மாவட்டத்திலேயே இந்த விபத்து நேர்ந்துள்ளது.

லுணுகல பகுதியிலிருந்து தலைநகர் கொழும்பை நோக்கி பயணித்த தனியார் பஸ் ஒன்று, பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானது.

மொனராகலை - பதுளை பிரதான வீதியின் பசறை - 13ம் கட்டை பகுதியிலேயே பஸ் விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்து நடந்தபோது பஸ்ஸில் சுமார் 50 பேருக்கும் அதிகமானோர் பயணித்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

13ம் கட்டை பகுதியில் ஏற்கனவே மண்சரிவு ஏற்பட்ட நிலையில், விபத்து ஏற்பட்ட பிரதான வீதியில் பாரிய கற்கள் வீழ்ந்துள்ளன.

இந்த நிலையில், குறித்த பகுதியில் ஒரு வாகனம் மாத்திரமே பயணிக்கக்கூடிய நிலையில், லாரி ஒன்றுக்கு இடமளிக்க முயற்சித்த போது பஸ் சுமார் 200 அடி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்து நடந்த உடனே 7 பேர் உயிரிழந்திருந்தனர்.

விபத்தில் காயமடைந்தவர்கள் பசறை மற்றும் பதுளை மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட நிலையில், மேலும் சிலர் உயிரிழந்துள்ளதாக போலீஸார் கூறுகின்றனர்.

இந்தநிலையில், விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ளதுடன், 35க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர்.

விபத்தில் காயமடைந்தோரில் சிலரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதென மருத்துவமனை பேச்சாளர் ஒருவர் தெரிவிக்கிறார்.

பதுளை மாவட்டத்தின் பண்டாரவளை - பூனாகலை பகுதியில் 2013ம் ஆண்டு நவம்பர் மாதம் 4ம் தேதி நடந்த மற்றொரு பஸ் விபத்தில் 10 பேர் இறந்தனர், 18 பேர் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அப்போது பூனாகலை நோக்கி பயணித்த பஸ் சுமார் 350 அடி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: