திருமதி இலங்கை அழகு ராணி கிரீடத்தைப் பறித்த கரோலின் ஜுரி கைது

பட மூலாதாரம், AFP
"திருமதி இலங்கை" அழகு ராணி போட்டியின் போது வெற்றி பெற்ற புஷ்பிகா டி செல்வாவிடம் இருந்து மேடையிலேயே கிரீடத்தைப் பறித்த திருமதி உலகராணி கரோலின் ஜுரி கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.
திருமதி உலக அழகு ராணியான கரோலின் ஜுரி இன்று பிற்பகல் கறுவாத்தோட்டம் போலீஸாரினால் கைது செய்யப்பட்டதாகவும், சிறு காயங்களை உண்டாக்குதல், வன்முறை ஆகிய குற்றச்சாட்டுகள் அவர் மீது சுமத்தப்பட்டிருப்பதாக காவல்துறை டிஐஜி அஜித் ரோஹனா கூறினார்.
மேலும், பிரபல அழகு கலை நிபுணரான சூலா பத்மேந்திரவும் கைது செய்யப்பட்டுள்ளார்.
வரும் 19-ஆம் தேதி இருவரும் நீதிமன்றத்தில் ஆஜராக அறிவுறுத்தப்பட்டு, பிணையில் விடுவிக்கப்பட்டிருப்பதாக அஜித் ரோஹனா கூறியுள்ளார்.
திருமதி இலங்கை அழகியை தெரிவு செய்வதற்கான போட்டி, கொழும்பு தாமரை தடாகம் அரங்கில் கடந்த 4ஆம் தேதி இரவு நடைபெற்றது.
இந்த போட்டியில் திருமதி இலங்கை அழகிக்கான கிரீடத்தை, புஷ்பிகா டி சில்வா தன்வசப்படுத்தினார்.
எனினும், புஷ்பிகா டி சில்வா, கிரீடத்தை தனதாக்கிய ஒரு சில நொடிகளிலேயே, அந்த கிரீடத்தை, அதே மேடையில் இழந்தார்.
பட மூலாதாரம், Pushpika De silva
புஷ்பிகா டி சில்வா
திருமதி உலக அழகி போட்டியில் 2020ம் ஆண்டு கிரீடத்தை பெற்ற கரோலின் ஜுரி, புஷ்பிகா டி சில்வாவின் கிரீடத்தை அதே மேடையில் வைத்து மீளப் பெற்றுக்கொண்டிருந்தார்.
புஷ்பிகா டி சில்வா, திருமணமாகி, விவாகரத்து பெற்றமையினால், அந்த கிரீடத்தை அவருக்கு வழங்க முடியாது என கரோலின் ஜுரி மேடையில் அறிவித்திருந்ததுடன், புஷ்பிகா டி சில்வாவிற்கு அணிவிக்கப்பட்ட கிரீடத்தை மீளப் பெற்று, இரண்டாவது வெற்றியாளருக்கு அணிவித்திருந்தார்.
இந்த சம்பவம் உள்நாட்டில் மாத்திரமன்றி, சர்வதேச ரீதியிலும் பல சர்ச்சைகளை தோற்றுவித்திருந்தது.
இந்தநிலையில், தான் தனது கணவருடன் பிரிந்து வாழ்வதாகவும், தான் இதுவரை விவாகரத்து பெறவில்லை எனவும் தெரிவித்து, கறுவாத்தோட்டம் போலீஸ் நிலையத்தில் முறைபாடொன்றை புஷ்பிகா டி சில்வா பதிவு செய்திருந்தார்.
இதையடுத்து, 6ம் தேதி கரோலின் ஜுரி உள்ளிட்ட பலரிடம் இந்த சம்பவம் தொடர்பில் கறுவாத்தோட்டம் போலீஸார் விசாரணைகளை ஆரம்பித்திருந்தனர்.
அதேபோன்று, தான் விவாகரத்து பெறவில்லை என்பதை உறுதிப்படுத்திய நிலையில், புஷ்பிகா டி சில்வாவிற்கு மீள கிரீடத்தை வழங்க ஏற்பாட்டு குழு நடவடிக்கை எடுத்திருந்தது.
எவ்வாறாயினும், இந்த சம்பவம் தொடர்பில் புஷ்பிகா டி சில்வா முன்வைத்த முறைபாட்டை அடிப்படையாகக் கொண்டு, கரோலின் ஜுரி மற்றும் சூலா பத்மேந்திர ஆகியோர் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளனர்.
பிற செய்திகள்:
- கொரோனா அச்சத்துடன் நாளை தொடங்குகிறது ஐபிஎல்: சி.எஸ்.கே. வெற்றி வாய்ப்பு எப்படி?
- திருவிழாக்களுக்கு தடை: பேருந்துகள், ஆட்டோக்களுக்கு நிபந்தனை - தமிழகத்தில் மீண்டும் கொரனோ கட்டுப்பாடுகள்
- பிரிட்டனில் உள்ள மியான்மர் தூதரகத்தில் இருந்து அந்நாட்டுத் தூதர் வெளியேற்றம்: யார் காரணம்?
- காசோலை மோசடி வழக்கில் ராதிகா, சரத்குமாருக்கு ஓராண்டு சிறை தண்டனை
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: