நியூசிலாந்து சூப்பர் மார்க்கெட்டில் 6 பேரை குத்திய இலங்கையர் காத்தான்குடியை சேர்ந்தவர்

  • யூ.எல். மப்றூக்
  • பிபிசி தமிழுக்காக
கத்தியால் கொலை செய்தவர் - கோப்புப் படம்

பட மூலாதாரம், Getty Images

நியூசிலாந்து ஒக்லான்ட் நகரிலுள்ள சூப்பர் மார்க்கட் ஒன்றில் பொதுமக்கள் ஆறு பேரை கத்தியால் குத்திய பின்னர் அந்த நாட்டு போலிசாரால் சுட்டுக் கொல்லப்பட்டதாக கூறப்பட்ட இலங்கையர், காத்தான்குடியைச் சேர்ந்தவர் எனத் தெரியவந்துள்ளது.

இலங்கை ஈஸ்டர் தொடர் குண்டுவெடிப்பின் மூளையாக செயல்பட்ட சஹரான் சொந்த ஊர் இது என்பது குறிப்பிடத்தக்கது.

நியூசிலாந்து கத்திக்குத்து சம்பவத்தில் குற்றம்சாட்டப்படும் இந்த நபர், 2011ஆம் ஆண்டு இலங்கையிலிருந்து நியூசிலாந்துக்கு மாணவர் விசா மூலம் சென்றவர் என இலங்கை போலீஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.

முகம்மது சம்சுதீன் அஹமட் ஆதில் என்பது அவர் பெயர் என்பதும் தெரியவந்துள்ளது. இவர் 1989ஆம் ஆண்டு பிறந்தவர் என, அவரது தயார் எம்.ஐ. பரீதா பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

நியூசிலாந்தில் சுட்டுக் கொல்லப்பட்ட மேற்படி நபர், மட்டக்களப்பு புனித மெதடிஸ்த மத்திய கல்லூரி, அட்டுலுகம பிரதேசத்திலுள்ள பாடசாலை மற்றும், கொழும்பு இந்துக் கல்லூரி ஆகியவற்றில் கல்வி கற்றவர்.

இவருடைய தந்தை முகம்மட் சம்சுதீன் அரச பாடசாலைகளில் அதிபராகக் கடமையாற்றி ஓய்று பெற்ற பின்னர், தற்போது தனது மகளுடன் கனடாவில் வசித்து வருகிறார்.

படக்குறிப்பு,

முகம்மது சம்சுதீன் அஹமட் ஆதில்

2016 முதல் அவரது கொள்கைகள் காரணமாக, நியூசிலாந்து காவல்துறையின் தொடர் கண்காணிப்பில் இருந்தவர் முகம்மது சம்சுதீன் அஹமட் ஆதில். கொல்லப்படும்போது நியூசிலாந்தில் சட்டப்பூர்வமான அகதியாக வாழ்ந்த அவர் 2011இல் மாணவர் விசா மூலம் நியூசிலாந்து சென்றார்.

தீவிரவாத நடவடிக்கைகளுக்கான கண்காணிப்பில் இவர் இருந்ததால், நியூசிலாந்து பாதுகாப்பு முகமைகளுக்கு இவர் ஏற்கனவே அறியபட்டவராக இருந்தார். 24 மணி நேரமும் இவர் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டார்.

ஐ.எஸ் தீவிரவாத அமைப்புக்காக பிரசாரம் செய்ததாக ஓராண்டு கண்காணிப்பில் அவர் வைக்கப்பட்டார் என்று நியூசிலாந்து ஊடகங்கள் கூறுகின்றன.

ஆக்லாந்து மாவட்டத்தில் உள்ள கவுண்ட்டவுன் சூப்பர்மார்கெட்டில் தாக்குதல் சம்பவம் கடந்த 03ஆம் தேதி நடந்தது. மறுநாள் 04ஆம் தேதி ஊடகளுக்கு இலங்கை போலிஸ் தலையகம் வெளியிட்ட அறிக்கையொன்றில், 2011ஆம் ஆண்டு மாணவர் வீசா மூலம் ஆதில் - நியூசிலாந்து சென்றதாக தெரிவிக்கப்பட்டது.

ஆதிலுக்கு ஒரு சகோதரியும் இரண்டு சகோதரர்களும் உள்ளனர். இவர்கள் அனைவரும் வெளிநாடுகளில் வசித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. ஆதில் குடும்பத்தில் கடைசிப் பிள்ளையாவார்.

ஆதிலின் தாய் மட்டுமே தற்போது அவர் பிறந்த ஊரான காத்தான்குடியில் உள்ளார். இலங்கை போலீசார், குற்றப் புலனாய்வு பிரிவினர் உள்ளிட்ட பாதுகாப்பு தரப்பினர் ஆதிலின் தாயை தொடர்ச்சியாக விசாரித்து வருகின்றனர்.

இதேவேளை கனடாவிலுள்ள தனது மகளிடமும் அந்த நாட்டுப் போலீசார், ஆதில் தொடர்பில் விசாரணை நடத்தியதாகவும் அவரது தாய் பிபிசி தமிழிடம் மேலும் தெரிவித்தார்.

ஆதில் தொடர்பாக அவரது தாய் பிபிசி தமிழுக்கு வழங்கிய பிரத்யேக நேர்க்காணல் ஒன்று விரைவில் வெளியாகும்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :