நியூசிலாந்தில் கொல்லப்பட்ட இலங்கையருக்கு மூளைச்சலவையா? தாயார் பிபிசி தமிழுக்கு பேட்டி

  • யூ.எல். மப்றூக்
  • பிபிசி தமிழுக்காக
முகம்மது சம்சுதீன் அஹமட் ஆதில்
படக்குறிப்பு,

முகம்மது சம்சுதீன் அஹமட் ஆதில்

நியூசிலாந்தில் 6 பேர் மீது கத்திக் குத்துத் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படும் ஆதில், இலங்கையின் கிழக்கு மாகாணத்திலுள்ள காத்தான்குடியை சொந்த இடமாகக் கொண்டவர் முகம்மது சம்சுதீன் ஆஹமட் ஆதில். தாக்குதல் நடந்த பின்னர், நியூசிலாந்து காவல்துறையினரால் ஆதில் சுட்டுக் கொல்லப்பட்டதாக அந்த நாட்டு பிரதமர் ஜெசிண்டா ஆர்டெர்ன் அறிவித்திருந்தார்.

2016 முதல் அவரது கொள்கைகள் காரணமாக, நியூசிலாந்து காவல்துறையின் தொடர் கண்காணிப்பில் இருந்தவர் முகம்மது சம்சுதீன் அஹமட் ஆதில். கொல்லப்படும்போது நியூசிலாந்தில் சட்டப்பூர்வமான அகதியாக வாழ்ந்த அவர் 2011இல் மாணவர் விசா மூலம் நியூசிலாந்து சென்றார்.

தீவிரவாத நடவடிக்கைகளுக்கான கண்காணிப்பில் இவர் இருந்ததால், நியூசிலாந்து பாதுகாப்பு முகமைகளுக்கு இவர் ஏற்கனவே அறியபட்டவராக இருந்தார். 24 மணி நேரமும் இவர் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டார்.

ஐ.எஸ் தீவிரவாத அமைப்புக்காக பிரசாரம் செய்ததாக ஓராண்டு கண்காணிப்பில் அவர் வைக்கப்பட்டார் என்று நியூசிலாந்து ஊடகங்கள் கூறுகின்றன.

ஆக்லாந்து மாவட்டத்தில் உள்ள கவுண்ட்டவுன் சூப்பர் மார்கெட்டில் தாக்குதல் சம்பவம் கடந்த 03ஆம் தேதி நடந்தது. மறுநாள் 04ஆம் தேதி ஊடகளுக்கு இலங்கை போலிஸ் தலையகம் வெளியிட்ட அறிக்கையொன்றில், 2011ஆம் ஆண்டு மாணவர் வீசா மூலம் ஆதில் - நியூசிலாந்து சென்றதாக தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், காத்தான்குடியிலுள்ள ஆதிலின் தாயார் எம்.ஐ. பரீதா என்பவரிடம் இலங்கை புலனாய்வு பிரிவினர் விசாரணை நடத்தத் தொடங்கியுள்ளனர்.

காத்தான்குடியில் அமைந்துள்ள தமது பூர்வீக வீட்டில் தனியாக வசித்து வருகின்றார் ஆதிலின் தாயார். அவரை நாம் சந்திக்கச் சென்றபோது, அங்கு அவரிடம் விசாரணைகளை மேற்கொள்வதற்காக புலனாய்வு பிரிவினர் சிலரும் வந்திருந்தனர்.

ஆதிலின் தாயாரிடமிருந்து ஆரம்பத்தில் எந்தத் தகவலையும் பெற்றுக் கொள்ள முடியவில்லை. ஊடகங்களிடம் இப்போதைக்குப் பேசுவதில்லை என்கிற முடிவுடன் அவர் இருந்தார். ஆயினும் பெரும் போராட்டத்தின் பின்னர், பிபிசி தமிழுடன் பேசுவதற்கு அவரை இணங்கச் செய்தோம்.

ஆனாலும் கேமிரா முன் தோன்றுவதற்கு மறுத்த அவர், தன்னப் படம் எடுக்க வேண்டாமெனவும் கேட்டுக் கொண்டார்.

ஆண்கள் மூவரும், பெண் ஒருவருமாக தனக்கு நான்கு பிள்ளைகள் என்கிறார் பரீதா. அவர்களில் ஆதில் கடைசிப் பிள்ளை.

ஆதில் காத்தான்குடியில் பிறந்தாலும், அந்த ஊருக்கும் அவருக்குமான உறவு மிகவும் குறைவாகும்.

படக்குறிப்பு,

காத்தான்குடியில் தமது பூர்வீக வீட்டில் தனியாக வசித்து வருகின்றார் ஆதிலின் தாயார் எம்.ஐ. பரீதா

"முதலாம் வகுப்பு தொடங்கி 4ஆம் வகுப்பு வரை மட்டக்களப்பு புனித மெதடிஸ்த மத்திய கல்லூரியில் ஆதில் படித்தார். பின்னர் நாங்கள் அடுலுகம சென்றோம். அங்குதான் 5ஆம் வகுப்பு படித்தார். பிறகு கொழும்பு இந்துக் கல்லூரியில் 6ஆம் வகுப்பு தொடக்கம் 12ஆம் வகுப்பு (பிளஸ் 2) வரை படித்தார்," என்கிறார் ஆதிலின் தாயார்.

தனது மகன் ஊரில் இருந்தபோது கடும்போக்காளராக இருக்கவில்லை என்கிறார் பரீதா.

"ஆதில் கேளிக்கைகளில் ஈடுபாடு கொண்டவர். நடிகர் சிம்புவின் தீவிர ரசிகராக இருந்தார். சிம்பு நடித்த திரைப்பட பாடல்களைத்தான் அநேகமாகக் கேட்டுக் கொண்டிருப்பார், எப்போதும் படங்கள் பார்ப்பார்," என்றார் பரீதா.

நியூசிலாந்திலுள்ள பல்கலைக்கழகம் ஒன்றில் கற்பதற்காக 2011ஆம் ஆண்டு இலங்கையிலிருந்து சென்ற தனது மகனிடம், 2016ஆம் ஆண்டளவில் மாறுதல்கள் ஏற்பட்டதாக பரீதா கூறுகிறார்.

"என்ன மாற்றம்" என நாம் கேட்டோம்.

"2016ஆம் ஆண்டு நியூசிலாந்தில் வீடொன்றின் நான்காவது மாடியிலிருந்து விழுந்து - ஆதில் விபத்துக்குள்ளானார். சிகிச்சையின் பின்னர் அவருக்கு கட்டிலில் இருந்தவாறே ஓய்வெடுக்க வேண்டியேற்பட்டது. அந்தக் காலப் பகுதியில் ஆதிலை அவரின் வெளிநாட்டு நண்பர்கள்தான் பார்த்துக் கொண்டனர். அப்போது, அவர்கள் ஆதிலை மூளைச் சலவை செய்திருக்கக் கூடும்" என்கிறார் தாயார் பரீதா.

நியூசிலாந்தில் ஆதில் இருந்த காலப்பகுதியில் அவர் சில குற்றச் செயல்களில் ஈடுபட்டுள்ளார். அதன் பொருட்டு அவர் சிறைவாசமும் அனுபவித்துள்ளார். அவர் சிறையிலிருந்து கடந்த ஜுலை மாதம் 23ஆம் தேதி விடுவிக்கப்பட்டதாக அவரின் தயார் நம்மிடம் கூறினார்.

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு,

தாக்குதலில் ஈடுபட்ட 60 நொடிக்குள் ஆதில் சுட்டுக் கொல்லப்பட்டதாக நியூசிலாந்து காவல்துறை கூறுகிறது.

ஆதில் தொலைபேசி வழியாக அவரின் தாயாருடன் அடிக்கடி பேசி வந்துள்ளார். "ஒரு தடவை, கார் ஒன்று வாங்குவோம் என்று ஆதிலிடம் சொன்னேன். அப்போது அவர் கோபப்பட்டார். உங்களுக்கு கார் தேவைப்படுகிறதா? சிரியா, இராக், பாலத்தீனம் போன்ற இடங்களில் மக்கள் சாப்பாடில்லாமல், போர்த்துவதற்கு ஒரு கம்பளி கூட இல்லாமல் எவ்வளவு கஷ்டப்படுகிறார்கள் என்று தெரியுமா என்று கேட்டார்" என்கிறார் அவரின் தாயார்.

கேள்வி: இறுதியாக ஆதிலிடம் எப்போது பேசினீர்கள்?

பதில்: "இரண்டாம் தேதி (சம்வம் நடப்பதற்கு முன்தினம்) பேசினேன்.

கேள்வி: அன்று ஆதிலிடம் ஏதாவது மாற்றங்கள் இருந்ததா?

பதில்: "இல்லை, அவரிடம் எந்த மாற்றங்களும் தெரியவில்லை. சாப்பாடு வாங்குவதற்காகவே அவர் வெளியே சென்றுள்ளார். அதற்கு முன்னர் கனடாவிலுள்ள அவரின் சகோதரிக்கு ஒரு 'மெசேஜ்' வைத்திருக்கிறார். வெளியே போகிறேன். அரை மணித்தியாலத்துக்குள் வந்து 'கோல்' (தொலைபேசி அழைப்பு) எடுக்கிறேன் என்று, அந்த 'மெசேஜி'ல் குறிப்பிட்டிருக்கிறார்.

தனது மகன் இவ்வாறான ஒரு செயலைச் செய்யும் எந்தவித திட்டமிடல்களுடனும் - சம்பவ தினம் வெளியே செல்லவில்லை என்கிறார் பரீதா.

ஆதீலின் குணம் எப்படி? என்று கேட்டோம். அவர் சிறிய விடயத்துக்கும் கடுமையாகக் கோபப்படுவார் என்றார் ஆதிலின் தயார்.

காணொளிக் குறிப்பு,

நியூசிலாந்து தாக்குதல்தாரியை மூளைச்சலவை செய்தார்களா - தாயார் பிபிசி தமிழுக்கு பேட்டி

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :