இலங்கை பொருளாதார நெருக்கடி எப்படி முடிவுக்கு வரும்? - 5 வாய்ப்புகள்

  • ரஞ்சன் அருண்பிரசாத்
  • பிபிசி தமிழுக்காக
போராட்டம்

பட மூலாதாரம், Getty Images

பொருளாதார வீழ்ச்சியால் கடும் நெருக்கடிக்கு உள்ளாகி இருக்கிறது இலங்கை. விலைவாசி உயர்ந்திருக்கிறது. நாணயத்தின் மதிப்பு சரிந்திருக்கிறது. அமெரிக்க டாலர்களில் நடக்கும் இறக்குமதிகள் முடங்கியிருக்கின்றன. இறக்குமதியை நம்பியிருக்கும் தொழில்துறைகள் திணறிக் கொண்டிருக்கின்றன. மக்களும் எதிர்க்கட்சிகளும் அரசுக்கு எதிராகப் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

இலங்கையில் அடுத்து நடக்கப் போவது என்ன? அத்தியாவசியப் பொருள்களின் விலை உயர்வு எப்போது முடிவுக்கு வரும், அரசியலில் நடந்துள்ள மாற்றங்களின் அடிப்படையில் அடுத்த நடக்க வாய்ப்புள்ள நிகழ்வுகள் குறித்து நிபுணர்கள் தங்களது கணிப்புகளைக் கூறி வருகின்றனர்.

பொருளாதார நிபுணரும் பேராதனை பல்கலைக்கழக பொருளியல் துறை மூத்த விரிவுரையாளருமான பேராசிரியர் எஸ்.விஜேசந்திரன் பிபிசி தமிழுக்கு அளித்த நேர்க்காணல் அடிப்படையில், இலங்கையில் அடுத்து நடக்கப்போகும் 5 சாத்தியங்களை ஆராய்கிறது இந்தக் கட்டுரை.

இலங்கை ரூபாய் செல்லாததாகி விடுமா?

இலங்கையின் நாணயம் மிகப்பெரிய வீழ்ச்சியைச் சந்தித்திருக்கிறது. அதனால் முற்றிலுமாக அதன் மதிப்பை இழந்து வேறொரு நாணயத்தை ஏற்றுக் கொள்ளும் சூழல் ஏற்படுமா என்ற கேள்வி இயற்கையாகவே எழுகிறது.

ஆனால் மற்றுமொரு நாணயத்தை ஏற்றுக்கொள்ளும் சூழ்நிலை இப்போதைக்கு இல்லை என்கிறார் விஜேசந்திரன்.

"இலங்கை பொதுவாக தன்னுடைய ரூபாயின் பெறுமதியை இழந்துக்கொண்டிருக்கின்றது. பாரிய முதலீடுகள், சர்வதேச நாடுகளின் உதவிகள் அல்லது நன்கொடைகள் கிடைப்பதன் ஊடாக, இந்த நிலைமையிலிருந்து மீளலாம். ஆகவே, அதன் அடிப்படையில் இன்னுமொரு நாட்டின் நாணயத்தை ஏற்றுக்கொள்ளும் அளவிற்கான அவசியம் இப்போதைக்கு இல்லை என்று கருத முடிகிறது."

ஒருவேளை இலங்கையின் ரூபாய் முற்றிலும் மதிப்பிழந்தால், "இலங்கைக்கு அருகில் இருக்கக்கூடிய இந்தியா அல்லது சீனாவின் நாணயத்தை இலங்கை பயன்படுத்தலாம். ஆனாலும், தற்போதைய சூழ்நிலையில் அதற்கான சாத்தியம் இல்லை" என்கிறார் விஜேசந்திரன்.

டனை திரும்ப செலுத்த முடியாமல் நாடு திவாலாகுமா?

இலங்கைக்கு சுமார் 51 பில்லியன் டாலர் அளவுக்கு வெளிநாட்டுக் கடன் இருக்கலாம் என மதிப்பிடப்படுகிறது. அதில் சுமார் 7 பில்லியன் டாலர்களை இந்த ஆண்டே செலுத்த வேண்டியிருக்கிறது. ஆனால் இலங்கையின் கையிருப்பில் சுமார் 2 பில்லியன் அமெரிக்க டாலர்களே இருப்பதாக மதிப்பிடப்படுகிறது.

இப்படியொரு சூழலில் தனது கடன்களை உரிய காலத்தில் திருப்பிச் செலுத்த இயலாது என இலங்கை அறிவித்திருக்கிறது.

"கடனை திருப்பிச் செலுத்த முடியாதபோது, இலங்கைக்குள் உதவிகள் வராது. வங்கித் துறை வங்குரோத்து அடையலாம். நாட்டின் பொருளாதாரம் முழுமையாக ஸ்தம்பித்து, நாடு முழு வங்குரோத்து நிலைக்கு அல்லது பொருளாதார மந்த நிலைக்குச் செல்லலாம்." என்கிறார் விஜேசந்திரன்.

ஐஎம்எஃப் கடன் மூலம் நாடு பழைய நிலைக்குத் திரும்பி விடுமா?

ஐஎம்எஃப் என அழைக்கப்படும் சர்வதேச நாணய நிதியத்தை இலங்கை அணுகியிருக்கிறது. அதன் பிரதிநிதிகளை இலங்கை அதிபர் கோட்டாபய ராஜபக்ச சந்தித்துப் பேசியிருக்கிறார். ஆயினும், சர்வதேச நாணய நிதியம் கடன் வழங்கினால்கூட "இலங்கை எதிர்நோக்கியிருக்கின்ற பிரச்னையிலிருந்து ஓரளவு மீள முடியும். அது முழுமையாக மீள முடியாது." என்கிறார் விஜேசந்திரன்.

"கடனை விட நாட்டிற்கு மானிய அடிப்படையில் பாரிய அளவிலான உதவிகள் கிடைக்கும் போதே நாடு மீள முடியும். சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து கடனைப் பெற்றால், அந்த கடனைச் செலுத்த முடியாது, திரும்பத் திரும்ப சிக்கலில் சிக்க வேண்டிய நிலைமை ஏற்படும். ஆகவே மேலை நாடுகளிடமிருந்து நிதி உதவிகள் மூலம் அல்லது மானிய அடிப்படையிலான உதவிகளைப் பெற்றுக் கொள்வதன் மூலம் தான் இந்த பிரச்னையிலிருந்து விடுப்படக் கூடிய வாய்ப்பு இருக்கும்."

ஐ.எம்.எஃப். கடன்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் இருக்கும் என்பதால், வரி உயர்வு உள்ளிட்ட சுமைகளை மக்கள் ஏற்க வேண்டிய கட்டாயம் ஏற்படும். இலவச மற்றும் குறைந்த விலையில் மக்களுக்கு கிடைக்கும் சமூக நலத் திட்டங்களில் சிக்கன நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் நேரிடும்.

பால்மாவுக்கான வரிசை.

இந்தியாவும் சீனாவும் கடன்களை வழங்கி இலங்கையை மீட்குமா?

பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருக்கும் இலங்கைக்கு இந்தியாவும் சீனாவும் கடன்களை வழங்குகின்றன வேறு நிதியுதவிகளை அளிப்பதாகவும் ஒப்புக் கொண்டிருக்கின்றன. ஆயினும் இந்த உதவிகள் பொருளாதாரத்தை பழைய நிலைமைக்கு மீட்பதில் ஓரளவே பயனளிக்கும் என்று விஜேசந்திரன் கூறுகிறார்.

"இந்த இரண்டு நாடுகளும் போட்டி போட்டுக் கொண்டு கடனை வழங்கும் போது, அது பல்வேறு நிபந்தனைகளை விடுத்தே கடனை வழங்கும். சீனாவும் இந்தியாவும் கடன் வழங்கும் போது, இலங்கை மேலும் இக்கட்டான நிலைக்குத்தான் போகும். சீனாவும் இந்தியாவும் முரண்பட்ட துருவங்கள். முரண்பட்ட துருவங்களிடமிருந்து கடனை வாங்கும் போது இந்தியா விதிக்கின்ற நிபந்தனைகளையும் சீனா விதிக்கின்ற நிபந்தனைகளையும் நிறைவேற்றும் போது இலங்கை அரசியல் மற்றும் பொருளாதார குழிக்குத் தள்ளப்படும். மீளவே முடியாத நிலைமை ஏற்படும். இது இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகளுக்கு இடையிலான பனிப் போருக்கான களமாக மாற்றப்படும். 'இலங்கை குரங்கு கையில் அகப்பட்ட அப்பத்தை' போன்று இறுதியில் இருக்கும்."

இலங்கையில் தற்போதைய அரசும் அதிபரும் பதவி விலக நேருமா?

கடந்த சில மாதங்களாகவே அரசுக்கு எதிரான போராட்டங்கள் தீவிரமடைந்து வருகின்றன. இந்த நெருக்கடிக்கு அரசே காரணம் என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. அதிபர் கோட்டாபய ராஜபக்ஷ அழைப்பு விடுத்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முக்கிய எதிர்க்கட்சிகள் பங்கேற்கவில்லை. இப்படியொரு தருணத்தில் அரசுக்கும் அதிபரின் பதவிக்கும் ஆபத்து இருப்பதாகவே அரசியல் நிபுணர்கள் கருதுகிறார்கள்.

ஆனாலும் அதிபர் கோட்டாபய ராஜபக்ஷவோ, பிரதமர் மஹிந்தவோ பதவி விலகப் போவதில்லை என அறிவித்துவிட்டனர்.

தேசிய அரசு ஒன்றை அமைக்கலாம் என்ற கோட்டாபயவின் யோசனையை எதிர்க்கட்சிகள் நிராகரித்து விட்டனர். ஆளுங் கூட்டணியில் இருந்த 40-க்கும் மேற்பட்ட எம்.பி.க்கள் தங்களை சுயேச்சையாக அறிவித்துக் கொண்டதால், ஆளும் அரசு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இழந்தது.

இந்த நிலையில் ராஜபக்ஷ குடும்பத்தினர் இல்லாத புதிய அமைச்சரவை இலங்கையில் பதவியேற்றுள்ளது. ராஜபக்ஷ குடும்பத்திற்கு எதிராக எழுந்துள்ள எதிர்ப்புகளை சமாளிக்கும் வகையிலேயே இந்த அமைச்சர்கள் நியமனம் நடந்திருக்கிறது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: