ஓட்டமாவடியில் பொலிஸ் - மக்கள் மோதல்

  • 10 ஆகஸ்ட் 2011
பிபிசி தமிழ் படத்தின் காப்புரிமை BBC World Service
Image caption பிபிசி தமிழ்

மட்டக்களப்பு மாவட்டம், ஓட்டமாவடியில் பொலிசாருக்கும் பொது மக்களுக்கும் இடையே ஏற்பட்ட முறுகல்நிலை மோதலாக மாறியதை அடுத்து அங்கு இன்று புதன்கிழமை பெரும் பதற்றநிலை ஏற்பட்டது.

ஓட்டமாவடி (நாவலடி) கிராமத்தில் பெண்ணொருவருடன் தகாத முறையில் நடந்துகொள்ள முயற்சித்ததாகக் கூறி மக்களால் மடக்கி பிடிக்கப்பட்டு பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்த சந்தேகநபரை தம்மிடம் மீண்டும் ஒப்படைக்குமாறு கோரியே மக்களில் சிலர் பொலிசாருடன் கைகலப்பில் ஈடுபட்டுள்ளனர்.

குறித்த சந்தேக நபரை பொலிசார் விடுவித்துவிட்டதாக பரவிய வதந்தியை அடுத்து, அங்கு கூடிய பொதுமக்கள் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு பொலிசாரையும் கற்களால் தாக்கியுள்ளனர்.

இதன்போது, ஏற்பட்ட கைகலப்பு மற்றும் நிலைமையை கட்டுப்படுத்த பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்து பொதுமக்கள் தரப்பில் இருவரும் பொலிஸ் தரப்பில் ஒருவரும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பொலிஸாரின் தடுப்பில் இருந்த சந்தேகநபரும் இந்த சம்பவத்தில் தாக்கி காயப்படுத்தப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக உள்ளூர் செய்தியாளர் ஒருவர் தெரிவித்தார்.

இந்த சம்பவத்தில் பொலிஸ் வாகனங்களையும் மக்கள் தாக்கி சேதப்படுத்தியுள்ளனர்.

இன்று நண்பகல் வேளையில் வீதிகளில் டயர்கள் எரிக்கப்பட்டு, கடைத் தெருக்கள் மூடப்பட்டு, வாகன போக்குவரத்துமின்றி பிரதேசத்தின் நிலமை பெரும் பதற்றமாக இருந்ததாக தமிழேசையிடம் கூறிய கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எச்.எஸ். இஸ்மாயில், பொலிசாரின் தடுப்பில் உள்ள சந்தேகநபரை தம்மிடம் ஒப்படைக்குமாறு மக்கள் எதிர்ப்பில் ஈடுபட்டமை சட்டவிரோதமான நடவடிக்கை என்று சுட்டிக்காட்டினார்.

இதனையடுத்து பிரதேசத்தில் இராணுவத்தினர் குவிக்கப்பட்டு மாலை அளவில் நிலமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டிருந்ததாக வாழைச்சேனை பொலிசார் தெரிவித்தனர்.

மர்ம மனிதர்கள்

உடம்பில் க்ரீஸ் களிம்பு பூசிய மர்ம மனிதர்கள் பெண்களை குறிவைத்து ஆங்காங்கே நடமாடுவதாக கிழக்கு மாகாணம் மலையகம் மற்றும் நாட்டின் தெற்கு பகுதிகளில் வதந்திகள் பரவிவரும் நிலையிலேயே, ஓட்டமாவடியில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

சில இடங்களில், பெண்களிடம் சேட்டையில் ஈடுபட்டுவிட்டு தப்பிச்செல்ல முயன்ற சந்தேக நபர்கள் சிலர் பிரதேச மக்களால் மடக்கிப் பிடித்து, தாக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டும் உள்ளனர்.

இவ்வாறான வதந்திகளின் பின்னணியில், குற்றச்செயல்களில் ஈடுபட்டுவந்த சந்தேக நபர்கள் பலர் நாட்டின் பல பகுதிகளில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.