பொத்துவில் பிரதேசத்தில் ஊரடங்கு உத்தரவு

பிபிசி தமிழ் படத்தின் காப்புரிமை BBC World Service
Image caption பிபிசி தமிழ்

அம்பாறை மாவட்டத்தில் பொத்துவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதேசத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பொத்துவில் மற்றும் திருக்கோவில் பிரதேசங்களில் இன்று வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் இளைஞர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் பொதுமக்கள் பலர் காயமடைந்துள்ளனர்.

இந்தப் பிரதேசத்தில் பாதுகாப்பு பிரிவினருக்கும் பொதுமக்களுக்கும் இடையே ஏற்பட்ட முறுகல் நிலை கடும் பதற்றத்தையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

படையினரே குறித்த இளைஞனை சுட்டுக்கொன்றதாக பொத்துவில் உள்ளூராட்சி சபை உறுப்பினர் பிபிசியிடம் கூறினார்.

ஆனால் பொலிசாரை நோக்கி கற்களை வீசி எதிர்ப்பை நடத்தியவர்கள் மீது கண்ணீர்ப் புகை பிரயோகம் மேற்கொண்டதாக படைத்தரப்பு கூறுகிறது.

'கிரீஸ் பூதங்கள்': அச்சத்தில் உறைந்து போயுள்ள மக்கள்

நேற்று இரவு கிரீஸ் பூதங்கள் என்ற அச்சத்தில் சிலரைத் தாக்கிய பொத்துவில் பிரதேசவாசிகளை பாதுகாப்பு படையினர் தாக்கியதை கண்டித்தே தாம் போராட்டம் நடத்தியதாக ஹர்த்தாலில் ஈடுபட்டவர்கள் கூறுகின்றனர்.

ஆனால், யானை கணக்கெடுப்புக்குச் சென்ற இராணுவத்தினரை தாக்கிய பிரதேசவாசிகளை கைது செய்த பொலிசாருக்கு எதிராகவே போராட்டம் நடத்தப்பட்டதாக பொலிஸ் தரப்பு பிபிசியிடம் கூறியது.

இதேவேளை, திருக்கோவில் பிரதேசத்திலும் கிரீஸ் பூதங்கள் என்ற குற்றச்சாட்டில் மக்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டவர்களை பொலிஸார் அழைத்துச் சென்றதைக் கண்டித்து மக்கள் எதிர்ப்பில் ஈடுபட்ட வேளையிலும் பொலிசார் ஆகாயத்தை நோக்கி துப்பாக்கி பிரயோகம் மற்றும் கண்ணீர்ப் புகைப் பிரயோகம் மேற்கொண்டதாக கூறுகின்றனர்.

சம்மாந்துறையிலும் நேற்று இரவு இவ்வாறான சம்பவமொன்று நடந்துள்ளது.

நாட்டின் பல பகுதிகளிலும் பெண்களை குறிவைக்கும் கிரீஸ் பூதங்கள் என்ற மர்ம மனிதர்களின் தொல்லையால் மக்கள் உறைந்து போயிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

கிரீஸ் பூதங்கள் என்பது வெறும் வதந்தியே என்று பொலிஸ் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.