'அவசரகாலச் சட்டம் அவசியமில்லை'

மஹிந்த ராஜபக்ஷ படத்தின் காப்புரிமை elvis
Image caption இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ

இலங்கையில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக அமலில் இருக்கும் அவசர காலச் சட்டத்தை நீடிப்பதற்கு எந்தவித அவசியமும் இருப்பதாகத் தான் கருதவில்லை என்று இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷே நாடாளுமன்றத்தில் பரிந்துரைத்துள்ளார்.

அவசரகால சட்டமானது 1983 ஆம் ஆண்டு முதன்முதலில் அமல் செய்யப்பட்டது. அதன் பிறகு சில முறை இடையிடையே நீக்கப்பட்டு மீள அமல்படுத்தப்பட்டது.

போர் முடிந்த இரண்டு ஆண்டுகளான பிறகு தற்போது இச்சட்டம்ினிமேல் அவசியமில்லை என்று ஜனாதிபதி அறிவித்துள்ளார்.விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்ட பிறகு நாட்டில் பயங்கரவாதத் தாக்குதல்கள் ஏதும் நடைபெறாத நிலையில், அவசரகாலச் சட்டம் தேவையில்லை என்று தான் நம்புவதாக ஐனாதிபதி நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போது தெரிவித்துள்ளார்.

அவசரகாலச் சட்டத்தின் சில கடுமையான பிரிவுகள் ஓராண்டுக்கு முன்னர் தளர்த்தப்பட்டன.

அரசின் இந்த அறிவிப்பை மனித உரிமை ஆர்வலர்கள் வரவேற்பார்கள் என கொழும்பிலிருக்கும் பிபிசி செய்தியாளர் கூறுகிறார்.

இந்த சட்டத்தின்படி பாதுகாப்புப் படையினருக்கு பல மேலதிக அதிகாரங்கள் வழங்கப்பட்டிருந்தன.

ரணில் வரவேற்பு

ஜனாதிபதியின் இந்த அறிவிப்பை, எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க வரவேற்றுள்ளார். போர் முடிந்த பின்னர் அவசரகாலச் சட்டம் தேவையில்லை என்று கூறியுள்ள ரணில் விக்கிரமசிங்க, தாமதமாகவெனிலும், இந்த அறிவிப்பு வந்ததை தான் வரவேற்பதாக அறிவித்துள்ளார். அதேவேளை, இதனை ஒரு ஆரம்பமாகக் கொண்டு, இலங்கை இனப்பிரச்சினைக்கு ஒரு அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.