சம்பூர் மின் திட்டம்: இந்தியா இலங்கை இடையில் ஒப்பந்தம்

  • 6 செப்டம்பர் 2011
கையெழுத்தான ஒப்பந்தம் பரிமாறிக்கொள்ளப்படுகிறது
Image caption கையெழுத்தான ஒப்பந்தம் பரிமாறிக்கொள்ளப்படுகிறது.

இலங்கையின் கிழக்கே திருகோணமலை மாவட்டத்தின் சம்பூர் பகுதியில் புதிய அனல் மின்நிலையம் அமைக்க வழி செய்யும் ஒரு ஒப்பந்தம் இந்திய இலங்கை அரசுகளிடையே கையெழுத்தாகியுள்ளது.

இந்தப் புதிய அனல் மின்நிலையம் 500 மெகா வாட் மின் உற்பத்தி செய்யும் திறன் கொண்டதாக இருக்கும்.

நிலக்கரியை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் இந்த மின்நிலையத்தை சம்பூர் பகுதியில் ஏற்படுத்த இந்தியாவின் மிகப் பெரிய மின் உற்பத்தி நிறுவனமான தேசிய அனல் மின்நிலைய நிறுவனமும், இலங்கை மின்சார சபையும் உடன்பட்டுள்ளன.

'மைல்கல்'

இந்தத் திட்டம் இந்திய இலங்கை அரசுகளுக்கு இடையேயான இருதரப்பு பொருளாதார உடன்பாடுகளில் ஒரு மைல்கல் என்று கொழும்பிலுள்ள இந்திய தூதர் அஷோக் காந்தா தெரிவித்துள்ளார்.

இலங்கையின் அதிகரித்து வரும் மின் தேவைகளை சமாளிக்கும் வகையில், 2016 ஆம் மின் உற்பத்தியை தொடங்கவுள்ள இந்த ஆலை பெரிதும் உதவும் எனவும் இந்தியத் தரப்பு கூறுகிறது.

சம்பூர் மின்நிலையத்துக்கு தேவையான நிலக்கரியை இலங்கை நிலக்கரி நிறுவனம் இறக்குமதி செய்து கொடுக்கும்.

இந்திய இலங்கை அரசுகள் இணைந்து முன்னெடுக்கும் கூட்டு பொருளாதார நடவடிக்கையில் இந்த சம்பூர் அனல் மின்நிலையம்தான் மிகப் பெரியது என்று கொழும்புக்கான இந்தியத் தூதர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த உடன்படிக்கையின் மூலம் இருநாட்டு ஒத்துழைப்புகள் இதுவரை இல்லாத ஒரு உச்சத்தை எட்டியுள்ளது என்று இந்தியா கூறுகிறது.

மக்கள் இடம்பெயர்ந்துவிட்ட இடம் சம்பூர்

இலங்கை அரசுக்கும் விடுதலைப் புலிகள் அமைப்புக்கும் இடையே பல ஆண்டுகளாக நடந்த போரின்போது, கிழக்கு மாகாணத்தில் விடுதலைப் புலிகளிடமிருந்து அரசு கைப்பற்றிய முதல் இடம் சம்பூர் பகுதிதான் என்பது குறிப்பிடத்தக்கது.

2006 ஆம் ஆண்டு அந்தப் பகுதியை இலங்கை அரசு கைப்பற்றிய பிறகு, அது உயர்பாதுகாப்பு வலயமாக அறிவிக்கப்பட்டது.

போரின் காரணமாக அந்தப் பகுதியிலிருந்து வெளியேறிய ஆயிரக்கணக்கான மக்கள் இன்னமும் மீள்குடியேற்றம் செய்யப்படாமல், கிளிவெட்டி, பட்டித்திடல் போன்ற முகாம்களில் வசித்து வருகிறார்கள்.

சம்பூரில் இந்த அணல் மின்நிலையம் அமைக்கப்படுவது ஆரம்பத்திலிருந்தே சர்ச்சையான ஒரு விடயமாகவே இருந்துள்ளது.

அந்தப் பகுதியிலிருந்து போரின் காரணமாக இடம்பெயர்ந்த மக்கள் தங்களது இடங்களில் இந்த மின்நிலையம் வருவதை எதிர்த்து வந்துள்ளனர்.

தற்போது உடன்படிக்கையும் கையெழுத்தாகியுள்ள நிலையில் இதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப் போவதாகவும் உள்ளூர் வாசிகள் தெரிவித்துள்ளனர்.