ஆற்றுப்படுத்தலுக்கு உதவும் கலாச்சார நிகழ்வுகள்

போரினால் பாதிக்கப்பட்ட மக்கள்
படக்குறிப்பு,

போரினால் பாதிக்கப்பட்ட மக்கள்

இலங்கையில் யுத்தம் காரணமாக உளநலம் பாதிக்கப்பட்ட மக்களின் உள ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்காக மருத்துவத்துடன், சமய கலை, கலாசார நிகழ்வுகளும் ஓர் ஊடகமாகப் பயன்படுத்தப்படுகின்றது.

உளரீதியாகப் பாதிக்கப்பட்டவர்கள் தமது உள்ளக்கிடக்கைகளையும் எதிர்பார்ப்புகளையும் வெளிப்படுத்துவது முக்கியமாகக் கருதப்படுகின்றது. அதற்கு இந்த மத, கலை, கலாச்சார நிகழ்வுகள் உதவுகின்றன.

அதனால், ஒரு வகையில் அந்தச் செயற்பாடுகள் சிகிச்சை முறையாகவும் பயன்படுத்தப்படுவதாகவும் வன்னிப்பிராந்திய மனநல மருத்துவ நிபுணர் டாக்டர் சிவசுப்பிரமணியம் சிவதாஸ் கூறுகின்றார்.

படக்குறிப்பு,

டாக்டர். சிவதாஸ்

அரசாங்கத்தினாலும், தொண்டு நிறுவனங்களினாலும் பல உதவிகள் செய்யப்பட்டிருந்த போதிலும், எல்லாவற்றிற்கும் அப்பால், நெருக்கடிகளுக்கு தொடர்ச்சியாக முகம்கொடுத்து பதப்படுத்தப்பட்ட மனநிலையில் இருந்த காரணத்தினால், தங்களுடைய தாங்கு திறன் ஊடாக பெரும்பான்மையானவர்கள் மீண்டுள்ளபோதிலும், தங்களது நெருங்கிய உறவினர்களை இழந்தவர்களும், அவயவங்களை இழந்தவர்களும், வேறு வகைகளில் உடல் பாதிப்புகளுக்கு உள்ளாகியவர்களும் பெரும் மனப்பாதிப்புக்கு உள்ளாகியிருக்கின்றார்கள் என குறிப்பிடுகின்றார் அவர்.

வன்னிச் சமூகம் தொடர்ச்சியான ஒரு யுத்தத்திற்கும் தொடர்ச்சியான கஸ்டங்களுக்கும் முகம் கொடுத்ததன் காரணமாக சிதிலமடைந்திருக்கின்றது. இதனைப் போக்குவதற்கு பல மட்டங்களில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டியிருக்கின்றது என்பது அவரது கருத்தாக இருக்கின்றது.

அசாதாரணமான முறையில் பலாத்காரமாக மூடப்பட்ட ஒரு சமூகம் யுத்தம் முடிவடைந்ததும், திடீரென உலகத்திற்குத் திறந்துவிடப்பட்டதனால், பல்வேறு தற்கொலைகள், கலாசாரச் சீரழிவு உட்பட பல்வேறு சமூகப் பிரச்சினைகளுக்கு அந்த மக்கள் முகம்கொடுக்க நேரிட்டிருப்பதையும் அவர் சுட்டிக்காட்டுகின்றார்.