ஃபொன்சேகாவுக்கு மூன்றாண்டுகள் சிறைத் தண்டனை

சரத் ஃபொன்சேகா படத்தின் காப்புரிமை BBC World Service
Image caption தீர்ப்பு வழங்கப்பட்டதன் பின்னர் நீதிமன்றத்திலிருந்து ஃபொன்சேகாவை பொலிசார் அழைத்துச் சென்றனர்

இலங்கை அரசாங்கத்தை போர்க் குற்றங்களுடன் தொடர்புபடுத்தி கருத்து வெளியிட்டருந்ததாக குற்றஞ்சாட்டப்பட்டிருந்த முன்னாள் இராணுவத் தளபதி சரத் ஃபொன்சேகாவுக்கு அந்நாட்டு நீதிமன்றமொன்று மூன்றாண்டு கால சிறைத்தண்டனை அளித்து தீர்ப்பளித்துள்ளது.

2009ம் ஆண்டு மே மாதத்தில் போர் முடிவுக்கு வந்தபோது, சரணடைந்த விடுதலைப் புலிகளின் தலைவர்களை கொன்றுவிடுமாறு பாதுகாப்புச் செயலர் கோட்டாபய ராஜபக்ஷ உத்தரவிட்டிருந்ததாக, சரத் ஃபொன்சேகா உள்ளூர் பத்திரிகையொன்றுக்கு செவ்வி அளித்ததாக சுட்டிக்காட்டி, அரசாங்கம் அவர் மீது குற்றஞ்சாட்டியிருந்தது.

இந்த வழக்கு விசாரணையின் தீர்ப்பை தன்னால் ஏற்கமுடியாது என முன்னாள் இராணுவத் தளபதி சரத் ஃபொன்சேகா கருத்து வெளியிட்டுள்ளார். தன்னை அரசியலிலிருந்து விலக்கி வைத்திருக்கவே இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

அவர் ஏற்கனவே ஆயுதக் கொள்வனவின்போது ஊழல் புரிந்தார் என்ற குற்றஞ்சாட்டில் இராணுவ நீதிமன்றம் விதித்த இரண்டரை ஆண்டு கால சிறைத் தண்டனையை அனுபவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

2009 இல் முடிவுக்கு வந்த விடுதலைப் புலிகளுக்கு எதிரான போருக்கு தலைமை தாங்கியவர் சரத் ஃபொன்சேகா.

Image caption சரத் பொன்சேகா மற்றும் மகிந்த ராஜபக்ஷ (கோப்புபடம்)

அதன்பின்னர், ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தரப்பினருடன் முறுகல் ஏற்பட்ட பின்னணியில் அவரை தேர்தலிலும் எதிர்த்துநின்று தோல்வியைத் தழுவிய ஃபொன்சேகா பல குற்றச்சாட்டுக்களின் கீழ் கைது செய்யப்பட்டார்.

சரணடையும் விடுதலைப் புலி உறுப்பினர்களை சுட்டுக்கொன்றுவிடுமாறு பாதுகாப்புச் செயலர் கோட்டாபய ராஜபக்ஷ, களத்திலிருந்த இராணுவ அதிகாரிக்கு உத்தரவிட்டிருந்ததாக எழுந்த குற்றச்சாட்டுக்களை ஆதரித்து ஃபொன்சேகா பத்திரிகைக்கு பேட்டியளித்தமையை கொழும்பு மேல் நீதிமன்றம் குற்றமென உறுதிப்படுத்தியுள்ளது.

தீர்ப்பு வழங்கிய பென்ச் இலிருந்த நீதிபதிகள் மூவரில் ஒருவர் சரத் ஃபொன்சேகா குற்றமற்றவர் என்று தீர்ப்பளித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இதேவேளை கொழும்பு மேல் நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை எதிர்த்து மேன்முறையீடு செய்யவுள்ளதாக ஃபொன்சேகா தரப்பு சட்டத்தரணிகள் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.