மன்னார் மீனவர்கள் அமைதி ஊர்வலம்

மன்னார் மீனவர் அமைதி ஊர்வலம்
Image caption மன்னார் மீனவர் அமைதி ஊர்வலம்

மன்னார் மாவட்ட மீனவர்கள் பாஸ் நடைமுறைகள் காரணமாகப் பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்கி வருவதாக மீனவர் சங்கப் பிரதிநிதிகள் கூறுகின்றனர்.

''இந்தக் கெடுபிடிகள் நீக்கப்பட வேண்டும், சங்கு குளிப்பதற்கு அனுமதியளிக்க வேண்டும். இந்திய மீனவர்களின் வருகை நிறுத்தப்பட வேண்டும்'' எனக்கோரி அந்த மீனவர்கள் அமைதிப் பேரணியொன்றை நடத்தியிருந்தனர்.

மன்னார் நகர வீதிகள் ஊடாகச் சென்ற இந்தப் பேரணி, மன்னார் அரச செயலகத்தில் சென்று முடிவடைந்தது. மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சரஸ்வதி மோகநாதனிடம் ஜனாதிபதிக்கு எழுதப்பட்ட தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜர் ஒன்றை மீனவர்கள் கையளித்தனர்.

பத்து விதமான பாஸ்களை தாம் பெற வேண்டியிருப்பதுடன், வெளிமாவட்ட மீனவர்கள் சிலிண்டர்களைப் பயன்படுத்தி சங்கு குளிப்பதுடன், அட்டைகள் பிடிப்பதனால், தமது கடல் வளம் அழிந்து செல்வதாகவும், எனினும் உள்ளுர் மீனவர்கள் சங்கு குளிப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டிருப்பதாகவும் மீனவர்கள் கூறுகின்றனர்.

ஆயினும் சங்கு குளிப்பது தடைசெய்யப்பட்ட தொழில் அல்லவென்றும் அதற்கு அமைச்சு அனுமதி வழங்கியிருப்பதாகவும், கடற்படையினரே அதற்கு அனுமதியளிக்கவில்லை என்றும் அதிகாரிகளும் மீனவர்களும் கூறுகின்றனர்.

மீனவர்களின் பிரச்சிகைள் குறித்து மன்னார் செயலகத்தில் வர்த்தகக் கைத்தொழில் அமைச்சர் ரிசாட் பதியுதீன் தலைமையில் கடற்படை மற்றும் இராணுவ உயரதிகாரிகள் கலந்து கொண்ட உயர் மட்டக் கூட்டத்தில் ஆராயப்பட்டது.

இதில் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், வடமாகாண ஆளுனர் ஜி ஏ சந்திரசிறி, மன்னார் அரச அதிபர் ஜே.ஏ.சரத் ரவீந்திர மீனவர் சங்கப் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Image caption மன்னார் மீனவர் அமைதி ஊர்வலம்

மீன்பிடிப்பது மற்றும் சங்கு குளிப்பது ஆகியவற்றிற்கு ஒரே பாஸ் வழங்கப்படும் என்று படைத்தரப்பில் இந்தக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

அத்துடன் ஆழ் கடலில் செய்யப்படுகின்ற சங்கு குளிக்கும் தொழிலை ஆழமற்ற மன்னார் கடலில் தடைசெய்ய வேண்டும் என இந்தக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டு அதனை நடைமுறைப்படுத்துவதற்காகக் கடற்தொழில் அமைச்சின் கவனத்திற்குக் கொண்டு வருவது என்றும் இந்தக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டிருக்கின்றது.