யாழ் சென்ற மக்கள் போராட்ட இயக்க ஏற்பாட்டாளரை காணவில்லை

பிபிசி தமிழோசை படத்தின் காப்புரிமை BBC World Service
Image caption பிபிசி தமிழோசை

ஜேவிபி கட்சியைச் சேர்ந்த அதி்ருப்தியாளர்கள் குழுவின் மக்கள் போராட்ட இயக்கத்தின் ஏற்பாட்டாளர்களில் ஒருவரும் இன்னொருவரும் காணாமல் போயுள்ளதாக அந்த இயக்கத்தின் தேசிய அமைப்பாளர் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் குமார பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.

தமது ஏற்பாட்டளாரான லலித்குமார வீரராஜ் என்பவர் வவுனியாவில் இருந்து சென்று யாழ்ப்பாணம் ஆவரங்கால் என்ற இடத்திற்கு சென்றுவிட்டு குகன் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் சென்றபோது நேற்று வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்குப் பின்னர் அவர்கள் தொடர்பான விபரங்கள் எதுவும் தெரியவரவில்லையென்று நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் குமார பொலிசிலும் பாதுகாப்பு தரப்பிடமும் முறைப்பாடு செய்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை ஒழுங்கு செய்வதற்காக வீரராஜ் சென்றிருந்தாக கூறப்படுகின்றது.

2010ம் ஆண்டளவில் மக்கள் போராட்டம் ஒன்றில் ஈடுபட்டிருந்தபோது யாழ்ப்பாணத்தில் வைத்து வீரராஜ் தாக்கப்பட்டதாகவும் படையினரால் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டதாகவும் அஜித் குமார கூறுகிறார்.

மக்களின் அரசியல் நடவடிக்கைகளை தடுக்கும் முகமாக தமது ஏற்பாட்டாளர்களை அச்சுறுத்தும் வேலையாகவே இதனைப் பார்ப்பதாக அவர் பிபிசியிடம் கூறினார்.

இதேவேளை, இந்த காணாமல் போதல் சம்பவம் தொடர்பில் தமக்கு முறைப்பாடு கிடைத்துள்ளதாகவும் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாகவும் இலங்கை பொலிஸ் தரப்பு கூறுகிறது.