கிழக்கில் 8 உள்ளூராட்சி சபைகளின் பதவிக்காலம் நீடிப்பு

மட்டக்களப்பு மாநகரசபை
படக்குறிப்பு,

மட்டக்களப்பு மாநகரசபை

இலங்கையில் கிழக்கு மாகாணத்தில் எதிர்வரும் மார்ச் மாதம் 18ஆம் திகதியுடன் 4 வருட பதவிக் காலம் முடிவடையவிருந்த 8 உள்ளுராட்சி சபைகளின் பதவிக் காலம் மேலும் ஒரு வருடம் நீடிக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள மாநகர சபை மற்றும் 7 பிரதேச சபைகளின் பதவிக் காலம் எதிர் வரும் 2013 மார்ச் மாதம் 18 ம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சின் செயலாளர் டாக்டர் நிஹால் ஜயசிங்க இது தொடர்பாக தெரிவிக்கின்றார். உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் உள்ளுராட்சி சபைத் தேர்தல் சட்டத்தில் தனக்குரிய அதிகாரங்களைப் பயன்படுத்தியே இந்த நீடிப்பை செய்துள்ளதாகவும் அவர் மேலும் கூறுகின்றார். குறித்த உள்ளுராட்சி சபைகளின் நிர்வாகப் பிரிவுகள் தமிழர்கள் கூடுதலாக வாழும் பிரதேசங்களாகும்.

2006 ம் ஆண்டு கிழக்கு மாகாணம் அரசாங்க படையினரால்; முழுமையாக கைப்பற்றப்பட்ட பின்னர் உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல்கள் இறுதியாக 2007 ம் ஆண்டு மார்ச் மாதம் நடை பெற்றது. அந்த தேர்தல்களில் கூட்டாகப் போட்டியிட்ட ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னனி மட்டக்களப்பு மாநகர சபையின் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றிய அதேவேளை அதன் பங்காளிக் கட்சியான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் ஏனைய 7 பிரதேச சபைகளையும் கைப்பற்றியிருந்தனர் குறித்த உள்ளுராட்சி சபைகளுக்கான அடுத்த தேர்தலுக்கு அரசியல் கட்சிகள் தயாராகி வந்த நிiலயில்இ அவற்றின் பதவிக் காலம் மேலும் ஒரு வருடம் நீடிக்கப்பட்டிருப்பது குறிப்பாக அதிகாரத்திலுள்ள தரப்பினர் தொடர்பாக பல்வேறு விமர்சனங்களை அரசியல் வட்டாரங்களில் தோற்றுவித்துள்ளது.