சல்மான் ருஷ்டி காணொளி ரத்து

சல்மான் ருஷ்டி
படக்குறிப்பு,

சல்மான் ருஷ்டி

சர்ச்சைக்குரிய எழுத்தாளர் சல்மான் ருஷ்டி, ஜெய்பூர் இலக்கிய விழாவில் நேரில் பங்கேற்க முடியாத அளவுக்கு எதிர்ப்பு இருந்ததால், கடைசி நாளான இன்று செவ்வாய்கிழமை காணொளிக் காட்சி மூலம் பார்வையாளர்களிடம் உரையாற்றுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதுவும் ரத்து செய்யப்பட்டது.

முஸ்லிம் அமைப்புக்கள், காணொளிக் காட்சி மூலம் ருஷ்டி உரையாற்றுவதற்கும் எதிர்ப்புத் தெரிவித்ததால், கடைசி நேரத்தில் அந்தத் திட்டம் கைவிடப்பட்டது.

இன்று செவ்வாய்கிழமை, இலக்கிய விழா ஏற்பாட்டாளர்களுக்கும், முஸ்லிம் அமைப்பின் தலைவர்களுக்கும் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையை அடுத்து, ருஷ்டியின் காணொளிக் காட்சி உரை ரத்து செய்யப்பட்டது. ருஷ்டியின் முகத்தை திரையில் பார்ப்பதே சகிக்கி முடியாத காரியம் என்று எதிர்ப்பாளர்கள் உறுதியாகக் கூறியதே அதற்குக் காரணம்.

முன்னதாக, இன்று செவ்வாய்கிழமை காலையில் இருந்தே, ருஷ்டி காணொளிக் காட்சி மூலம் உரையாற்றுவார் என்ற தகவலை அடுத்து, ஏராளமானவர்கள் இலக்கிய விழா நடைபெறும் இடத்தில் குவிந்து வந்தார்கள். அதே நேரத்தில் எதிர்ப்பாளர்களும் ஆங்காங்கு கூடி வந்தனர். ஆனால், திட்டமிட்டபடி ருஷ்டி உரையாற்றுவார் என்றும், அதற்கென அரசிடமிருந்து தனியாக அனுமதி பெற வேண்டிய அவசியமில்லை என்றும் விழா ஏற்பாட்டாளர்கள் கூறி வந்தனர். ஆனால், நேரம் செல்லச் செல்ல நிலைமை மாறியது.

காணொளிக் காட்சி மூலம் உரையாற்றும் திட்டத்தை ரத்து செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது குறித்து, விழா ஏற்பாட்டாளர்களில் ஒருவரான சஞ்சய் ராய் கூறும்போது, "இது மிகவும் வேதனையான நேரம். மூன்று வாரங்களுக்குப் பிறகு, இப்படியொரு நிலை, முட்டாள்தனமான நிலை ஏற்பட்டிருக்கிறது. சுதந்திரமான கருத்துக்களைத் தெரிவிக்கும் போராட்டத்தில், சுதந்திரமாக எழுதுவதற்கான போராட்டத்தில், சுதந்திரமாக கதைகளைச் சொல்லக்கூடிய நிலைக்கான போராட்டத்தில் நாம் பின்னடைவைக் கண்டிருக்கிறோம். இந்த முடிவை நாங்கள் ஆதரிக்கவில்லை. அந்த மாதிரியான கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டிருக்கிறோம். மக்களையும், நமது குழந்தைகளையும், இங்குள்ள ரசிகர்களையும் காப்பாற்றுவதற்கு நமக்கு இதைத்தவிர வேறு வழியில்லை’’, என்றார்.

முன்னதாக, துணை போலீஸ் கமிஷனர் விரேந்திர ஜலாலா பேசும்போது, எதிர்விளைவுகள் ஏற்படலாம் என்று கருதி, காணொளிக் காட்சி மூலம் ருஷ்டி உரையாற்றுவதை தாங்கள் அனுமதிக்கப் போவதில்லை என விழா நடைபெறும் இடத்தின் உரிமையாளர்கள் தெரிவித்திருப்பதாகத் தெரிவித்தார்.

அதே நேரத்தில், நிலைமையை உன்னிப்பாகக் கவனித்து வரும் ராஜஸ்தான் காவல் துறையின் ஆலோசனையை ஏற்று, இந்த முடிவை எடுத்ததாக, உரிமையாளர் ராம் பிரதாப் சிங் தெரிவித்தார்.

இந்த விழாவின் துவக்க நாளன்று நேரில் பங்கேற்பதாக இருந்த ருஷ்டி, போலீசாரின் உளவுத்துறைத் தகவல்களின்படி, தன்னைக் கொல்ல திட்டமிட்டிருப்பதாக எச்சரிக்கப்பட்டதால், தனது பயணத்தை ரத்து செய்வதாக அறிவித்தார்.

"கருத்துரிமையா சமூக நல்லிணக்கமா"

இதற்கிடையே, சல்மான் ருஷ்டியின் வருகை குறித்து இந்திய அரசு கருத்துரிமையைப் பாதுக்காக்கும் வண்ணம் நிலைப்பாட்டை எடுக்காதது குறித்து பலர் இந்திய அரசை விமர்சிக்கிறார்கள். இந்த விமர்சனம் சரியானதுதானா என்று கேட்டபோது, எழுத்தாளரும், ‘உயிர்மை’ இதழின் ஆசிரியருமான, மனுஷ்யபுத்திரன் கருத்துரிமையைத் தாண்டி இந்தியாவில் முக்கியமான பிரச்சினைகள் இருக்கின்றன என்றார்.

எல்லா சமூகங்களுமே தங்களது அரசியல் அடையாளங்களுக்காகப் போராடிக்கொண்டிருக்கின்ற ஒரு காலகட்டத்தில், கலைஞர்களும் , எழுத்தாளர்களும் இன்னும் பொறுப்பாக நடந்துகொள்ள வேண்டும் என்று நினைப்பதாகக்கூறினார்.

படக்குறிப்பு,

மனுஷ்யபுத்திரன்

எம்.எப்.ஹுசேனின் ஓவியங்கள் சமூகத்தின் நல்லிணக்கத்தைக் குலைக்குமெனில், சில அரசியல் இயக்கங்கள் அதை முழுக்க பயன்படுத்திக்கொள்ளுமெனில், ஹுசேனின் ஓவியங்களைத் தூக்கிப்பிடிக்க வேண்டிய அவசியமில்லை என்றார் மனுஷ்யபுத்திரன்.

மொத்த சமூகமுமே மதவாத சிந்தனைக்கு ஆட்படும் இந்தக் காலகட்டத்தில், இது போன்ற விஷயங்களில் எழுத்து சுதந்திரம்,கருத்து சுதந்திரத்தைவிட சமூக நல்லிணக்கம் முக்கியம் என்றார். ஒரு கருத்து ஒரு சமூகத்தின் பெரும்பாலானவர்களின் உணர்வுகளை பாதிக்கிறது என்றால், அது சமூக இணக்கத்தை பாதிக்கிறது என்றால், அதற்காக அந்தக் கருத்தை விலக்கிக்கொள்ளலாம் என்றார்.

இது குறித்த மேலதிக தகவல்களை இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.