"இலங்கை மனித உரிமை ஆர்வலர்களுக்கு அச்சுறுத்தல்"

படத்தின் காப்புரிமை geopolitical monitor
Image caption இலங்கையில் மனித உரிமை ஆர்வலர்கலுக்கு அச்சுறுத்தல்?

இலங்கையில் மனித உரிமை மீறல்கள் குறித்த தீர்மானம் ஐ.நா மன்ற மனித உரிமை கவுன்சிலில் வாக்கெடுப்புக்கு வரவுள்ள நிலையில், உள்நாட்டில் இந்த விஷயங்களில் குரல் கொடுத்துக்கொண்டிருக்கும் மனித உரிமை ஆர்வலர்கள் மீது கடுமையான துவேஷப் பிரச்சாரம் ஒன்று அரச ஊடங்களால் தீவிரமாக கட்டவிழ்த்துவிடப்படுவதாக , இலங்கையின் பல சமூகப் பிரமுகர்கள் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, மனித உரிமை ஆர்வலர்கள், பாக்கியசோதி சரவணமுத்து, நிமல்கா பெர்னாண்டோ, சுனிலா அபயசேகர, சுன்ந்த தேஷப்பிரிய, மற்றும் ஜே..சி.வெலியமுன ஆகியோர் இலக்குவைக்கப்படுவதாகவும், அவர்களை, அரச ஊடகங்கள், துரோகிகள் என்று வர்ணித்து, அதன் விளைவாக, தீவிரவாத சக்திகளை அவர்களைத் தாக்கத் தூண்டுவதாகவும், அவர்கள் குற்றஞ்சாட்டியிருக்கின்றனர்.

இதற்கும் மேலாக ஒரு படி சென்று, அரச ஊடகங்கள், பத்திரிகை சுதந்திரத்துக்கு ஆதரவாகக் குரல் கொடுக்கும், ரொஹித பாஷன அபயகுணவர்த்தன , சனத் பாலசூர்யா, பொத்தல ஜயந்த ஆகியோரது புகைப்படங்களை தொலைக்காட்சிகளில் காட்டி வருவதாகவும் அந்த அறிக்கை கூறுகிறது.

இந்த மனித உரிமையாளர்கள், விடுதலைப்புலி ஆதரவாளர்கள் என்றும், புலம்பெயர் தமிழ் அமைப்புகளிடமிருந்து பணம் பெறுபவர்கள் என்றும், நாட்டின் நலன்களை வெளிநாட்டுப் பணத்துக்காக காட்டிக்கொடுப்பவர்கள் என்றும் இந்த பிரச்சாரத்தாக்குதலில் குற்றஞ்சாட்டப்படுகிறார்கள் என்று இந்த அறிக்கை கூறுகிறது.

ஏற்கனவே, சுதந்திர ஊடக இயக்கத்தின் மீதும், ஊடக சுதந்திர ஆர்வலர்கள் மற்றும் மன்னார் ஆயர் மீதும் அரச அமைச்சர்களும் அரச ஊடங்கங்களும், இது போன்ற தாக்குதலை நடந்தன என்பதையும் இந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

இந்த மனித உரிமை ஆர்வலர்கள் யார் மீதும் இலங்கை அரசு எந்த விதமான சட்டபூர்வமான குற்றச்சாட்டுகளையும் சுமத்தவில்லை என்று கூறும் இந்த அறிக்கை, ஆனால் ஒரு இலங்கை அமைச்சர்,இவர்களை தேசம் மன்னிக்காது என்று கூறியிருப்பது, இவர்களுக்கு ஏதோ ஒரு வகையில் சட்டத்துக்கு அப்பாற்பட்ட ஒரு நீதி அல்லது தண்டனை காத்திருக்கிறது என்று மறைமுகமாக கூறுவது போல இருக்கிறது என்று கூறுகிறது.

இந்த தாக்குதல்கள் ஆட்சியாளர்களால், அரசின் மனித உரிமை செயல்பாடுகள் தேசிய அளவிலும், சர்வதேச மட்ட்த்திலும் கேள்விக்குள்ளாக்கப்படும் நிலையில், அதிலிருந்து கவனத்தை திருப்ப, கவனமாக நடத்தப்படுவதாக இந்த அறிக்கை கூறுகிறது.

ஜனாதிபதியும், அரசும், இந்த தாக்குதல்களை தடுத்து நிறுத்தவும், மனித உரிமை செயல்பாட்டாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் உடனடி நடவடிக்கைகளை எடுக்குமாறும் இந்த அறிக்கை கூறுகிறது.

பிஷப் குமார இலங்கசிங்க, சரத் இத்தமல்கொட, சிலோன் ஆசிரியர்கள் ஒன்றியத்தைச் சேர்ந்த ஜோசப் ஸ்டாலின், ஜனநாயகத்துக்கான வழக்கறிஞர்கள் அமைப்பைச் சேர்ந்த சந்திர குமாரக மற்றும் லால் விஜெநாயக, ஊடக சுதந்திர அமைப்பைச் சேர்ந்த சுனில் ஜெயசேகர, கிழக்குப் பல்கலைக்கழகத்தை சேர்ந்த டி.ஜெயசிங்கம், பேராசிரியர் குமார் டேவிட், விழுது அமைப்பைச் சேர்ந்த சாந்தி சச்சிதான்ந்தன், பத்திரிகையாளர் குசால் பெரேரா , போன்றோர் உள்பட 79 பேர் இந்த அறிக்கையில் கையெழுத்திட்டுள்ளனர்.