ஐ நா கூட்டம்:இலங்கை மீது அழுத்தம் அதிகரிக்கிறது

  • 21 மார்ச் 2012
படத்தின் காப்புரிமை Reuters
Image caption ஐ நாவின் மனித உரிமைகள் குழுவின் கூட்டம்

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் குழுவின் கூட்டத்தில், இலங்கைக்கு எதிராக அமெரிக்கா முன்மொழிந்துள்ள தீர்மானத்தின் மீதான விவாதாமும் வாக்கெடுப்பும் 22/3/12 அன்றோ அல்லது 23/3/12 அன்றோ நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், இலங்கை மீதான அழுத்தங்கள் அதிகரித்து வருகின்றன.

இலங்கையின் இறுதிகட்ட போரின் போது இருதரப்பிலும் இடம்பெற்றதாகக் குற்றஞ்சாட்டப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரிக்க வேண்டும் என்று ஆஸ்திரேலியா தொடர்ந்து கூறிவரும் நிலையில், ஆஸ்திரேலிய செனெட்டில் இது தொடர்பிலான ஒரு தீர்மானம் இன்று நிறைவேறியுள்ளது.

இலங்கையில் போருக்கு பின்னர் ஜனாதிபதியால் அமைக்கப்பட்ட நல்லிணக்க ஆணைக்குழு மனித உரிமை மீறல்கள் விஷயம் குறித்து முழுமையாக கவனிக்கத் தவறியது என்றும், எனவே ஜெனீவாவில் அமெரிக்கா கொண்டுவந்துள்ள தீர்மானத்தையாவது ஆஸ்திரேலியா குறைந்தபட்சம் ஆதரிக்க வேண்டும் என்று செனட் கோருகிறது என்று, அங்குள்ள பசுமைக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லீ ரியனன் கொண்டு வந்த ஒரு தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியுள்ளது.

நல்லிணக்க ஆணைக்குழு பல ஆக்கபூர்வமான பிரேரணைகளை முன்வைத்திருந்தாலும், அது போதுமானதாக இல்லை எனவும் ஆஸ்திரேலியா கூறுகிறது.

"பொருளாதாரத் தடைகள் இல்லை"

படத்தின் காப்புரிமை gosl

இதனிடையே பிரிட்டனின் அழுத்தமும் அதிகரித்து வருகிறது. பிரிட்டனின் மூன்று முன்னாள் வெளியுறவு அமைச்சர்களான டேவிட் மிலிபாண்ட், ஜாக் ஸ்ட்ரா, மார்கிரெட் பெக்கட் ஆகியோரும், தற்போதைய நிழல் வெளியுறவு அமைச்சருமான டக்ளஸ் அலெக்சாண்டர் ஆகியோர், கார்டியன் பத்திரிகையில் எழுதியுள்ள ஒரு கட்டுரையில், இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவந்துள்ள தீர்மானத்தை, ஐ நா வின் மனித உரிமைகள் குழு நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.

இதே போன்று இலங்கைக்கு பொறுப்பான அமெரிக்காவின் துணை வெளியுறவுச் செயலர் ராபர்ட் பிளேக் இலங்கையின் மீது அமெரிகாவுக்கு பொருளாதாரத் தடைகள் விதிக்கும் நோக்கம் இல்லை என்று ஊடங்கங்களுக்கு தெரிவித்துள்ளார்.

எனினும் இலங்கை ஒரு சுயாதீனமான நம்பகத்தன்மையுடன் கூடிய ஒரு விசாரணையை நடத்த முன்வர வேண்டும் எனவும் பிளேக் கூறியுள்ளார்.

ஆனால் இலங்கை அரச தரப்போ, போருக்கு பின்னர் நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் நோக்கில் பல முன்னெடுப்புகள் செய்யப்பட்டு வருகின்றன என்றும், அப்படி இருக்கும் போது மேற்குலகம் இப்படியான ஒரு தீர்மானத்தை கொண்டுவரத் தேவையில்லை என்றும் கூறுகிறது.

தாங்கள் முன்னெடுத்து வரும் நடவடிக்கைகளை மேற்குலகம் கவனத்தில் எடுக்கவில்லை என்று அரசின் தேசிய பாதுகாப்புக்கன ஊடக மையத்தின் இயக்குநர் லக்ஷமண் ஹுலுகல்ல பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.

இலங்கையும் ஆதரவு திரட்டுகிறது

Image caption இலங்கையில் அமெரிக்காவுக்கு எதிராக தொடரும் போராட்டங்கள்

இலங்கை அரசும் தமது தரப்பிலான வாதங்களை முன்வைத்து ஆதரவைத் தேடும் முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளது. ஜெனீவாவில் ராஜதந்திரிகளுக்கு அரசு சார்பில் ஒரு கடிதமும் எழுதப்பட்டுள்ளது.

அதில், அமெரிக்க முன்மொழுந்துள்ள தீர்மானத்தை முன்னெடுப்பதன் மூலம், தனது வரம்புகளை ஐ நாவின் மனித உரிமைகள் கவுன்சில் மீறுகிறது என்று இலங்கை சுட்டிக்காட்டியுள்ளது.

இறையாண்மையுள்ள நாடுகளின் உள்விவகாரங்களில் தலையிடும் வகையில் ஐ நா வின் மனித உரிமைகள் குழு செயல்படக் கூடாது எனவும் கூறியுள்ள இலங்கை அரசு, ஐ நாவில் கடைபிடிக்கப்பட்டு வரும் மரபுகள் மீறப்படக் கூடாது எனவும் தெரிவித்துள்ளது.

கடந்த காலங்களில் நடைபெற்ற நிகழ்வுகளை மீண்டும் கையில் எடுப்பது தேவையில்லாத ஒன்று என்றும் மறைமுக காரணங்களுக்காக வளர்ந்து வரும் நாடுகள் குறிவைக்கப்படுகின்றன எனவும் இலங்கை தரப்பு எழுதியுள்ளது.

அனைத்து மக்களும் இணக்கப்பாட்டுடன் சமத்துவத்துடன் கூடிய கௌரவமான வாழ்க்கைகை முன்னெடுத்து பல்லின சமூகத்தில் வாழ எடுக்கப்பட்டு வரும் முயற்சிகளுக்கு இப்படியான தீர்மானம் குந்தகம் ஏற்படுத்தக் கூடும் எனவும் இலங்கை கருத்து வெளியிட்டுள்ளது.