மிதிவெடிகள் அபாயம் நீங்க இன்னும் காலம் எடுக்கும்

2020 ஆம் ஆண்டே கண்ணிவெடி அபாயமற்ற நாடாக இலங்கை மாறும்
Image caption 2020 ஆம் ஆண்டே கண்ணிவெடி அபாயமற்ற நாடாக இலங்கை மாறும்

இலங்கையில் நிலக் கண்ணிவெடிகள் அகற்றும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ள போதிலும், கண்ணிவெடி அபாயம் முழுமையாக நீங்குவதற்கு நீண்டகாலம் செல்லும் என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.

மிதிவெடிகள் பற்றிய விழிப்புணர்வுக்கான சர்வதேச தினத்தையொட்டி வவுனியாவில் நடைபெற்ற வைபவத்தில், 2020 ஆம் ஆண்டில் இலங்கையை கண்ணிவெடி அபாயமற்ற நாடாக மாற்றுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டது.

வடக்கு கிழக்குப் பிரதேசங்களில் கண்ணிவெடிகள் புதைக்கப்பட்டிருந்த பகுதிகளில் 90 வீதமான இடங்கள் துப்பரவு செய்யப்பட்டு, இடம்பெயர்ந்திருந்த 3 லட்சம் மக்கள் மீள்குடியேற்றம் செய்யப்பட்டிருப்பதாகப் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் தேசிய மிதிவெடிச் செயற்பாட்டு நிலையப் பணிப்பாளர் மொன்டி ரனதுங்க கூறினார்.

வடக்கு கிழக்குப் பிரதேசங்களில் 1.5 மில்லியன் வெடி பொருட்கள் புதைக்கப்பட்டிருக்கலாம் என்று கடந்த 2002 ஆம் ஆண்டு மதிப்பிடப்பட்டிருந்தது.

எனினும் விடுதலைப்புலிகளினால் எத்தனை மிதிவெடிகள், கண்ணிவெடிகள் புதைக்கப்பட்டன என்பது பற்றிய விபரங்கள் தெரியாத காரணத்தினால் இந்தப் பிரதேசங்களில் உள்ள வெடிப்பொருட்களின் சரியான எண்ணிக்கையை அறிய முடியாதிருக்கின்றது.

இதனால் கண்ணிவெடி அகற்றும் பணி கடினமாகியிருக்கின்றது என்றும் மொன்டி ரனதுங்க குறிப்பிட்டிருக்கின்றார்.

கடந்த 2010 ஆம் ஆண்டு மிதிவெடிகளினால் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை கணிசமான அளவில் குறைந்திருக்கின்றது.

கண்ணிவெடிகள் மிதிவெடிகளினால் ஏற்படும் அபாயம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக மிதி வெடி அபாயக் கல்வித் திட்டம் செயற்படுத்தப்பட்டு வருகின்றது.

எனினும் சந்தையில் பழைய இரும்புக்கு நல்ல விலை கிடைப்பதால் மிதிவெடி அபாயத்தையும் பொருட்படுத்தாமல் பலர் கண்ணிவெடிகள் நிறைந்த பிரதேசங்களில் இரும்பு சேகரிக்கும் முயற்சியில் ஈடுபடுவதாக அதிகாரிகள் கவலை வெளியிடுகின்றனர்.