மாகாண சபைகளுக்கான தேர்தல் தேதி அறிவிப்பு

படத்தின் காப்புரிமை BBC World Service
Image caption இலங்கை வரைபடம்

இலங்கையின் கிழக்கு மாகாணம் உட்பட மூன்று மாகாண சபைகளுக்கான தேர்தல் எதிர்வரும் செப்டம்பர் மாதம் எட்டாம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையாம் இன்று அறிவித்துள்ளது.

அன்று கிழக்கு, சபரகமுவ மற்றும் வட மத்திய மாகாண சபைகளுக்கான தேர்தல் இடம்பெறும் என்று தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய கூறியுள்ளார்.

கிழக்கு மாகாண சபைக்கான தேர்தலில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள் உட்பட 16 அரசியல் கட்சிகள் மற்றும் 56 சுயேச்சைக் குழுக்கள் சார்பில் 1470 வேட்பாளர்காளாக போட்டியிடுகிறார்கள்.

இம்மாணத்தில் மட்டக்களப்பில் 11 , திருகோணமலையில் 10, அம்பாறையில் 14 என மொத்தம் 35 பேர் இத்தேர்தல் மூலம் தேர்வு செய்யப்படும் அதே வேளை கூடுதல் இடங்களைப் பெறும் கட்சி அல்லது குழுவிற்கு 2 போனஸ் இடங்கள் மேலதிகமாக வழங்கப்படும்

இத்தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் கடந்த 12 முதல் இன்று(19.7.12) வரை ஏற்றுக் கொள்ளப்டப்ட போதிலும் அநேகமான அரசியல் கட்சிகளும் சுயேட்சைக் குழுக்களும் இன்றைய தினமே வேட்பு மனுக்களை தாக்கல் செய்தன.

தேர்தல் களம்

Image caption தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள்

கடந்த முறை நடைபெற்ற கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள், தேசிய காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் ஆகியன ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னனியாகப் போட்டியிட்டு ஆட்சியைக் கைப்பற்றியிருந்தது.

இதே கூட்டணி இதேமுறையும் போட்டியிடுகின்றன.

அத்தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி வேட்பாளர் பட்டியலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இனைந்து போட்டியிட்டது. இம்முறை அக்கட்சிகள் தனித் தனியாக போட்டியிடுகின்றன.

கடந்த முறை இத்தேர்தலை புரக்கணித்த இலங்கை தமிழரசு கட்சி இம்முறை போட்டியிடுகின்றது.

அக்கட்சியின் வேட்பாளர் பட்டியலில் ஈ.பி.ஆர்.எல்.எப், டெலோ, புளொட் மற்றும் தமிழர் விடுதலைக் கூட்டணிக்கும் இடமளிக்கப்பட்டுள்ளது.

முக்கிய வேட்பாளர்கள்

Image caption வேட்பு மனு தாக்கல் செய்ய வந்த முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன்

கிழக்கு மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னனியின் தலைமை வேட்பாளராக மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடுகின்றார். முன்னாள் மாகாண அமைச்சரான எம்.சுபைர் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் அவரது பட்டியலில் இடம் பெற்றுள்ளார்

மட்டக்களப்பு மாவட்டத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான கே.துரைராஜசிங்கம் , ஞா.கிருஷ்ணபிள்ளை, கே.கருணாகரன் ஆகியோர் இலங்கை தமிழரசு கட்சி வேட்பாளர் பட்டியலிலும், அமீர் அலி மற்றும் அலி சாகீர் மௌலானா ஆகியோர் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னனி வேட்பாளர் பட்டியலிலும் இடம் பெற்றுள்ள அதே வேளை மற்றுமொரு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான் தங்கேஸ்வரி கதிர்காமர் சுயேச்சைக் குழுவொன்றின் தலைமை வேட்பாளராகப் போட்டியிடுகின்றார்.

Image caption முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்களுடன் அதன் தலைவர் ஹக்கீம்

அம்பாறை மாவட்டத்தில் முன்னாள் மகாண அமைச்சரான எம்.எஸ்.உதுமாலெப்பை தேசிய காங்கிரஸ் சார்பில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னனி வேட்பாளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளார்

இதே பட்டியலில் மற்றுமொரு முன்னாள் மாகாண அமைச்சரான விமலவீர திசாநாயக்காவும் இடம் பெற்றுள்ள அதே வேளை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.நிஜாமுதீன் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக இடம் பெற்றுள்ளார்.

இலங்கை தமிழரசு கட்சியின் வேட்பாளர் பட்டியலில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரநேரு சந்திரகாந்தன் இடம் பெறலாம் என எதிர்ப்பார்க்கப்பட்ட போதிலும் இறுதியில் இடம் பெறவில்லை.மற்றுமொரு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சங்கர் குணசேகரம் போட்டியிடுகின்றார்.