வாச்சாத்தி சம்பவம் குறித்த ஆவணப் படம்

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 30 செப்டம்பர், 2012 - 16:35 ஜிஎம்டி
பாலியல் வன்கொடுமைக்குள்ளான பெண்கள்

வாச்சாத்தியில் பாலியல் வன்கொடுமைக்குள்ளான பெண்கள்

தமிழகத்தில் 1992 ஆம் ஆண்டு ஜூன் 20 ஆம் நாளன்று வாச்சாத்தியில் நடந்த வனத்துறை மற்றும் காவல்துறை அத்துமீறல்கள் குறித்த ஆவணப் படம் வெளியிடப்பட்டுள்ளது.

அக்கொடுஞ்சம்பவம் குறித்து பிரபல ஆவணப்பட இயக்குநர் பாரதி கிருஷ்ணகுமார் உருவாக்கியிருக்கும் உண்மையின் போர்க்குரல் எனும் ஆவணப்படத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய செயலர் பிரகாஷ் காரத் இன்று ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டார். அக்கட்சியின் ஆதரவில் இயங்கும் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம்தான் வாச்சாத்தி போராட்டத்தை முன் நின்று நடத்தியது.

இருபது ஆண்டுகளுக்கு முன்பு வாச்சாத்தி என்ற கிராமத்தில் அதிரடி சோதனை நடத்திய காவல் துறை மற்றும் வனத் துறையினர் அக் கிராமத்தைச் சேர்ந்த சேர்ந்த 133 பேரை கைதுசெய்தனர். அவர்களில் 90 பெண்கள், 28 குழந்தைகள், 15 ஆண்கள். அதில் 18 பெண்களை தாம் பாலியல் பலாத்காரம் செய்தப்பட்டதாக புகார் தெரிவித்தனர். மேலும் கிராம மக்கள் அனைவரும் அடித்து துன்புறுத்தப்பட்டதாகவும், அவர்களின் குடிசைகள் தகர்க்கப்பட்டு, வீட்டிலிருந்த பொருட்கள் நாசப்படுத்தப்பட்டதாகவும் அக் கிராம மக்கள் குற்றம் சாட்டினர்.

குற்றவாளிகள்

இச்சம்பவம் மாநிலத்தை அதிர்ச்சியில் உறையவைத்தது. தவறு எதுவும் நடக்கவில்லை என முதலில் அன்றைய அ இஅதிமுக அரசு சாதித்தது. ஆனால் தொடர் போராட்டத்தின் விளைவாய் வழக்குக்கள் பதிவு செய்யப்பட்டு கடந்த் ஆண்டு செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி தீர்ப்பு வெளியானது. குற்றஞ்சாட்டப்பட்ட 269 பேரில் இடையில் இறந்தவர் போக எஞ்சிய 215 பேரும் குற்றவாளிகள் என தர்மபுரி மாவட்ட அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

மலைவாழ்மக்கள் சங்கத் தலைவர் பி ஷண்முகம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நஷ்ட ஈடு கூட இன்னமும் முழுமையாக வழங்கப்படவில்லை என்றார். பாதிக்கப்பட்ட மக்கள் தங்கள் சுய மரியாதையை மீட்டெடுத்துவிட்டனர் என்பது உண்மைதான் என்றாலும் அவர்கள் வாழ்நிலையினை மேம்படுத்த எவ்வரசும் முன்வரவில்லை என்றார் அவர்.

தொடர்புடைய விடயங்கள்

BBC © 2014 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.