விசாரணையிலிருந்து ஷிராணி வெளிநடப்பு

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 6 டிசம்பர், 2012 - 15:02 ஜிஎம்டி

இலங்கை தலைமை நீதிபதி ஷிராணி பண்டாரநாயக்கவை குற்றம்சாட்டி பதவி நீக்கம் செய்வதற்கான விசாரணையை மேற்கொண்டிருக்கும் நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் விசாரணைகளிலிருந்து ஷிராணி வியாழனன்று வெளிநடப்பு செய்திருக்கிறார்.

இன்றைய விசாரணையின்போது பலபக்க ஆவணங்களை ஷிராணி பண்டாரநாயக்கவிடம் கொடுத்த நாடாளுமன்றத் தெரிவுக்குழு, அந்த ஆவணங்கள் அனைத்தையும் நாளை வெள்ளிக்கிழமைக்குள் படித்து விட்டு அவை தொடர்பான கேள்விகளுக்கு நாளையே (வெள்ளிக்கிழமையே) பதிலளிக்கவேண்டும் என்று வலியுறுத்தியதாகவும், அந்த ஆவணங்களை படித்துப்பார்க்க மேலதிக அவகாசம் கொடுக்க தெரிவுக்குழு மறுத்துவிட்டதாகவும் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார் ஷிராணி பண்டாரநாயக்கவின் சார்பில் அஜராகும் சட்ட நிறுவனத்தின் தலைவர் கந்தையா நீலகண்டன்.

மேலும், இந்த விசாரணைகளின்போது, தெரிவுக்குழு உறுப்பினர்கள் சிலர் இந்த விசாரணைகள் தொடர்பில் முன்கூட்டிய தீர்மானங்களை எடுத்துவிட்டதாக தாங்கள் உணர்ந்ததாகவும், இவர்களின் விசாரணையில் தங்களுக்கு நியாயம் கிடைக்காது என்பதால் இன்றைய விசாரணைகளில் இருந்து தாங்கள் வெளிநடப்பு செய்ததாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

நாடாளுமன்ற தெரிவுக்குழு உறுப்பினர்கள் சிலர் இது குறித்த முன் முடிவுகளுக்கு வந்திருப்பதாக எந்த அடிப்படையில் நீங்கள் முடிவு செய்தீர்கள் என்று கேட்டபோது, தெரிவுக்குழுவின் நடவடிக்கைகளை தாங்கள் வெளியில் சொல்லக்கூடாது என்பதால் தங்களால் இது குறித்து விவரமாக இப்போதைக்கு வெளியில் கூறமுடியாது என்று பதிலளித்தார் கந்தையா நீலகண்டன்.

இன்று அளிக்கப்பட்ட ஆவணங்களை படித்துப் பார்த்து பதிலளிப்பதற்கு மேலதிக அவகாசம் அளிக்கப்பட்டால் நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் விசாரணைகளில் ஷிராணி பண்டாரநாயக்க மீண்டும் பங்கேற்பாரா என்று கேட்டபோது, அது குறித்து இப்போதைக்கு பதிலளிக்க முடியாது என்றார் அவர்.

ஆளும் உறுப்பினர்கள் வசைமொழிகளை பயன்படுத்தினர்

இதேவேளை, நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் இன்றைய நிகழ்வுகள் குறித்து பிபிசியிடம் கருத்து தெரிவித்த, தெரிவுக்குழுவில் இடம்பெற்றுள்ள ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மண் கிரியல்ல, இந்த தெரிவுக்குழு செயற்படத்துவங்கிய நாள் (நவம்பர் 14 ஆம் தேதி) முதல் இன்றுவரை எதிர்தரப்புக்கு (ஷிராணி தரப்புக்கு) எந்த ஆவணங்களும் அளிக்கப்படவில்லை என்று கூறினார்.

முதல்முறையாக இன்று அவர்களுக்கு சுமார் ஐம்பது ஆவணங்கள் அளிக்கப்பட்டதாகவும், அவற்றுக்கான பதில்களை ஷிராணி தரப்பு வழக்கறிஞர்கள் நாளை வெள்ளிக்கிழமை மதியம் அளிக்கவேண்டும் என்று கூறப்பட்டதாகவும் லக்ஷ்மண் கிரியல்ல தெரிவித்தார்.

இந்த ஆவணங்களை படித்துப்பார்க்கவும், இதில் கூறப்பட்டுள்ள சாட்சியங்கள் குறித்து ஆராயவும் தமக்கு மேலதிக அவகாசம் தேவை என்று ஷிராணி தரப்பு வழக்கறிஞர்கள் கோரிக்கை விடுத்ததாக தெரிவித்த லக்ஷ்மண் கிரியல்ல, அவர்களின் இந்த கோரிக்கை ஏற்கப்படாமல் நிராகரிக்கப்பட்டதாகவும் கூறினார்.

இந்த கோரிக்கைகளை நிராகரிக்கும்போது ஆளும் அரசு தரப்பு உறுப்பினர்கள் மோசமான வார்த்தைகளை பயன்படுத்தியதாகவும் கிரியல்ல தெரிவித்தார்.

இந்த விசாரணை நடைமுறைகள் நீதியாகவும் நேர்மையாகவும் இருக்காது என்று தாங்கள் நினைப்பதாக தெரிவித்த தலைமை நீதிபதியும் அவரது வழக்கறிஞர்களும் வெளிநடப்பு செய்ததாகவும் கிரியல்ல பிபிசியிடம் கூறினார்.

BBC © 2014 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.