சண்டே லீடர்: பாதை மாறும் பயணம்?

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 27 டிசம்பர், 2012 - 16:57 ஜிஎம்டி
கொல்லப்பட்ட லசந்த

கொல்லப்பட்ட லசந்த

சண்டே லீடர் பத்திரிக்கையின் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க நான்கு ஆண்டுகளுக்க முன்பு கொல்லப்பட்ட பிறகு, அரசாங்கத்துக்கு எதிராக கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வந்த அந்த பத்திரிக்கை அவர் வகுத்த பாதையில் இருந்து விலகுவதாக விமர்சகர்கள் குறை கூறுகின்றனர்.

சண்டே லீடரின் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்கே கடந்த 2009 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8 ஆம் தேதி முகமூடி அணிந்து மோட்டார் சைக்கிளில் வந்தவர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். அந்த சம்பவம் உலகெங்கும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இலங்கையில் ஊடகச் சுதந்திரம் மோசமான நிலையில் இருப்பதை இது வெளிக்காட்டியது. ஆனால் நான்கு ஆண்டுகள் ஆன பிறகும் அக்கொலை வழக்கு முற்றுப் பெறாமல் இருக்கிறது.

லசந்தாவின் கொலைக்குப் பிறகு – அரசுக்கு எதிரான செய்திகளை வெளியிடும் வழக்கத்தைக் கொண்ட சண்டே லீடர்- அதிகாரவர்கத்தை மீறி தனது பயணத்தை தொடர்ந்தது. கிட்டத்தட்ட திவாலாகும் நிலையில் இருந்த சண்டே லீடர் ஜீலை மாதத்தில் உயர் இடத்தில் தொடர்புகளைக் கொண்ட ஒரு வர்த்தகரால் வாங்கப்பட்டது.

புதிய முதலாளி; புதிய பாதை?

புதிய முதலாளியின் அரசியல் போக்கை அனுசரித்துப் போக மறுத்ததால் தனது பதவி பறிக்கப்பட்டதாக இப்பத்திரிகையின் அப்போதைய ஆசிரியர் பிரட்ரிகா ஜான்ஸ் செப்டம்பர் மாதம் புகார் தெரிவித்தார். தனது உயிருக்கு விடுக்கப்பட்ட அச்சுருத்தல்கள் காரணமாக அவர் நாட்டை விட்டு வெளியேறினார்.

தற்போது புதிய ஆசிரியர் நியமிக்கப்பட்டுள்ளார். முன்பு வெளியிடப்பட்ட சில செய்திகள் திரும்பப் பெறப்பட்டுள்ளன. வெளிப்படையான பத்தி எழுத்தாளர்கள் சிலரும் பத்திரிக்கையில் இருந்து விலகிச் சென்றுவிட்டனர். எனவே சண்டே லீடர் தனது தனித்துவத்தை இழந்துவிட்டாதா என்ற கேள்வி வெகுவாக எழுந்துள்ளது.

லசந்தாவால் 1994 ஆம் ஆண்டு துவக்கப்பட்ட சண்டே லீடர் கொழும்பின் புறநகர் பகுதியான ரத்மலானவில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. அலுவலகத்தின் லிப்டுக்கு மேலே லசந்தாவின் சிறிய புகைப் படம் வைக்கப்பட்டிருக்கிறது. அதற்கு மாலை சார்த்தப்பட்டுள்ளது. அலுவலகத்தின் உள்ளே அவரின் பெரிய படம் வைக்கப்பட்டுள்ளது. இப்பத்திரிகை பல முறை தாக்குதலுக்குள்ளானதை நினைவுபடுத்தும் செய்திகள் – பிரேம் போட்டு மாட்டப்பட்டுள்ளன. 1995 மற்றும் 1998, 2005, 2007 ஆகிய ஆண்டுகளில் லசந்த உடல்ரீதியாக தாக்கப்பட்டார்.

1998 ஆம் ஆண்டில் சிஐடி போலீசாரால் லசந்தா விசாரிக்கப்பட்டார். 2003 ஆம் ஆண்டிலும் 2006 ஆம் ஆண்டிலும் அரசியல் செல்வாக்கு மிக்கவர்களால் அவருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. அவர் பலமுறை தாக்கப்பட்டும் தாக்குதலில் சம்மந்தப்பட்ட யாருமே இதுவரை தண்டிக்கப்படவில்லை.

சர்ச்சைக்குரிய மன்னிப்புகள்

இந்நிலையில் இப்பத்திரிகையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு அது மீண்டும் வெளியிடப்பட்டது. அதாவது பத்திரிகை பார்ப்பதற்கு கவர்ச்சிகரமாக இருக்கும் என்கிறார் புதிய ஆசிரியர் சகுந்தலா பெரிரா. அரசாங்கத்தை தொடர்ந்து தாம் விமர்சிப்போம் என்றும், கொள்கைகள் மாறியதாகவோ ஆசிரியர்பீட நிலைப்பாடு மாறியதாகவோ பொருள்கொள்ளத் தேவையில்லை என்றும் அவர் கூறுகிறார்.

சிறைக்கலவரம் குறித்து அரசை சண்டே லீடர் விமர்சித்திருந்தது

சிறைக்கலவரம் குறித்து அரசை சண்டே லீடர் விமர்சித்திருந்தது

தேசிய ரக்பி யூனியனுக்குத் தலைவராக இருக்கும் அசங்க சேனவிரட்னே தற்போது இந்த பத்திரிக்கையின் 72சத பங்குகளை வைத்துள்ளார். ஜனாதிபதியின் மகனை தேசிய ரக்பி அணியின் தலைவராக இவர் நியமித்துள்ளார். சண்டே லீடரின் மீதமுள்ள 28 சதவீத பங்குகள் லசந்தாவின் சகோதரர் லால் வசமுள்ளது.

செனிவிரட்னே செய்தித் தெரிவில் தலையிடுவதில்லை என்றும் நிர்வாக மாற்றத்தினால் பத்திரிகையின் கடும்போக்கு நிலைக்கு பங்கம் வரவில்லை என்றும் சகுந்தலா பெரிரா தெரிவிக்கிறார். தலைமை நீதிபதிக்கு எதிரான கண்டனத் தீர்மானத்தில் அரசின் நகர்வுகளை தாம் விமர்சித்ததையும், கொழும்பு சிறைச்சாலை கலவரத்தில் 27 பேர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக தாம் எடுத்த நிலையையும் சுட்டிக் காட்டும் சகுந்தலா பெரிரா – பாதிக்கப்பட்ட மக்களின் குரலாக தொடர்ந்து ஒலிப்போம் என்கிறார்.

சிறை வன்முறையை அடுத்து நடந்த தேடல் வேட்டையின் போது சிலர் பிடித்து வைத்து சுட்டுக் கொல்லப்பட்டதாக உறவினர்களை மேற்கொள்காட்டி சண்டே லீடர் செய்தி வெளியிட்டிருந்தது. யாழில் நிலவும் நிலை குறித்து பிற ஊடகங்கள் பெரிதாக அலட்டிக் கொள்ளாத நிலையில் சண்டே லீடர் இது குறித்து விரிவாக செய்தி வெளியிட்டிருந்தது.

ஆளும் வர்க்க எதிர்ப்பு போய் ஆள்போர் ஆதரவு நிலையா?

அதே நேரம் பல விடயங்கள் தொடர்பாக பாதுகாப்பு செயலர் கோத்தாபய ராஜபக்ஷ உட்பட பலரிடம் சண்டே லீடர் மன்னிப்பும் கோரியுள்ளது. இது விமர்சகர்கள் மத்தியில் சந்தேகத்தை எழுப்பியுள்ளது. கடந்த ஜூலை மாதம் பிரட்ரிகா ஜான்ஸ், அரச விமான சேவை பாதுகாப்பு செயலருக்கு தனிப்பட்ட உதவியை செய்ததாக ஒரு செய்தி வெளியிட்டார். இது தொடர்பாக அவர் பாதுகாப்பு செயலருடன் பேசிய போது, கோத்தாபய ராஜபக்ஷ அசிங்கமான வார்த்தைகளை உபயோகப்படுத்தியதோடு – மக்கள் உன்னைக் கொன்று விடுவார்கள் என்று எச்சரித்த்தாகவும் சண்டே லீடர் செய்தி வெளியிட்டிருந்தது. இக் கட்டுரை தற்போது திரும்பப் பெறப்பட்டுள்ளது. இப்படி செய்வது மிகவும் அவமானம் என்று குமுறும் பிரட்ரிகா ஜான்ஸ் – அரசியல் அதிகாரத்தில் இருப்போரை சமாதானப்படுத்த ஊடக விதிகள் மீறப்பட்டு “ஊடக விபச்சாரம்” செய்யப்படுவதாக கூறுகிறார். ஆள்போரின் காலில் விழுந்து கிடப்பதாகவும் அவர் சாடுகிறார்.

லசந்தா உருவாக்கியது அழிக்கப்பட்டு புதைக்கப்படுவதாகவும், புதிய நிர்வாகத்தால் பதவி நீக்கம் செய்யப்பட்ட பிரேட்டிகா ஜான்ஸ் கூறுகிறார்.

லசந்தாவின் மனைவி சோனாலி சமரசிங்கே தற்போது அமெரிக்காவில் வாழ்கிறார். சண்டே லீடர் திரும்பப் பெற்றுள்ள கட்டுரைகளில், ரிசர்வ் வங்கி ஆளுநரைத் தொடர்பு படுத்தி இவர் எழுதிய ஒரு கட்டுரையும் அடங்கும். உண்மையான விபரங்கள் அடிப்படையில் அக்கட்டுரை எழுதப்பட்டதாகக் கூறும் சோனாலி அக்கட்டுரை திரும்பப் பெறப்பட்டது முன்னேற்றத்தைக் காட்டவில்ல என்கிறார். கடந்த காலங்களில் சட்டரீதியான எதிர் நடவடிக்கைகளுக்குப் பயந்து எவ்வித விடயங்களையும் விட்டு அது ஒதுங்கவில்லை என்றும் சோனாலி கூறுகிறார். கோத்தாபய ராஜபக்சேவிடம் மன்னிப்பு கோரும் முடிவை தான் எடுக்கவில்லை என்று கூறும் பத்திகையின் புதிய ஆசிரியர் பிறவிடயங்கள் குறித்து கருத்துக் கூற மருத்து விட்டார்.

விமர்சன கட்டுரையாளர்கள் விசனம்

அதே நேரம் விமர்சனக்கட்டுரைகள் எழுதுவோர் மத்தியலும் அதிருப்தி எழுந்துள்ளது. ராஜபக்ஷக்கள் தொடர்பான தனது கட்டுரை தணிக்கை செய்யப்பட்ட்தால் கோபமடைந்த திஸ்ரானி குணசேகரா, கடந்த மாதம் முதல் திடீரென கட்டுரைகள் எழுதுவதை நிறுத்திவிட்டார். எமது ராஜ குடும்பம் குறித்து மோசமான கருத்துக்களை கூற இனியும் அனுமதி கிடைக்கும் என்று எதிர்பார்க்க முடியாது என்கிறார் திஸ்ரானி.

லசந்த கொலைக்கு நியாயம் கேட்கும் ஊடகவியலாளர்கள்

லசந்த கொலைக்கு நியாயம் கேட்கும் ஊடகவியலாளர்கள்

இந்த விடயம் குறித்து வருத்தம் வெளியிடும் சாகுந்தலா பெரிரா மீண்டும் திஸ்ரானி குணசேகர பங்களிப்பை வழங்கவேண்டும் என்கிறார். ஆனால் பத்திரிகையின் அதிபரான அசங்க செனிவிரட்னே, நமக்குப் பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும் ஜானாதிபதி என்பவர் ஜனாதிபதி. அவர் நமக்கு நமது நாட்டை மீளக் கொடுத்தவர். யார் என்ன சொன்னாலும் நான் வாழ்நாள் முழுவதும் அவரை அதற்காகவே மதிப்பேன் என்று ஒரு சஞ்சிகையில் எழுதியுள்ளார். பிரட்ரிகா ஜான்ஸை விலகிச் செல்லுமாறு தான் சொல்லவில்லை என்று கூறும் அவர், அதே நேரம் அவரின் நடவடிக்கைகளை நம்புவது தனக்கு கடினமாக இருந்ததால் – பத்திரிகையில் என்ன நடக்கிறது என்பதை தான் பார்க்கவேண்டியிருந்தது என்கிறார்.

பொருளாதார ரீதியாக சண்டே லீடர் மோசமான நிலையில் இருக்கிறது. அதற்கு விளம்பரங்களைக் கொடுக்கக் கூடாது என்று அரசு அழுத்தம் கொடுக்கிறது. இப்பத்திரக்கைக்கு எதிராக தொடுக்கப்பட்டிருந்த ஒரு வழக்கில் பாதுகாப்புச் செயலர் வெற்றிபெற்றுள்ளார். அவர் தொடுத்துள்ள மேலும் இரு வழக்குகள் நிலுவையில் உள்ளன. ஒட்டு மொத்தமாக 15 வழக்குகள் சண்டே லீடருக்கு எதிராகப் போடப்பட்டுள்ளன.

இது மற்ற பத்திரிக்கைகளைப் போன்றதொரு பத்திரிகை அல்ல என்று மக்கள் நம்புகின்றனர் அந்த நம்பிக்கையை நாம் தொடர்ந்து கொண்டு செல்ல வேண்டும் என்கிறார் சகுந்தலா பெரைரா. ஆனால் புதிய நிர்வாகம் புதியபாதையில் செல்லும் என்றே சோனாலி சமரசிங்கே கணிக்கிறார். பெருமளவிலான சுய தணிக்கை இடம்பெறும் இலங்கை ஊடக சூழலில் ஆள்போரிடம் உண்மையைக் கூறுவதை தமது கடமை என்றே தானும் தனது கணவர் லசந்தாவும் கருதியதாக அவர் கூறுகிறார். இந்த மரபு தொடருமா என்ற கேள்விதான் தற்போது முன்நிற்கிறது.

BBC © 2014 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.