நியாயம் கிடைக்குமா?: சந்தியா ஏக்னலிகொட கேள்வி

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 19 ஜனவரி, 2013 - 11:24 ஜிஎம்டி
சந்தியா ஏக்னலிகொட

2010 ஜனவரியில் இருந்து காணாமல் போயுள்ள தனது கணவருக்காக சந்தியா தொடர்ந்து குரல்கொடுத்து வருகிறார்.

இலங்கையின் புதிய தலைமை நீதிபதியாக மொஹான் பீரிஸ் நியமிக்கப்பட்டுள்ள சூழ்நிலையில், பலவந்தமாக கொண்டுசெல்லப்பட்டு காணாமல்போன செய்தியாளர் ஏக்னலிகொட சம்பந்தமான வழக்கு விசாரணைகளில் நியாயம் கிடைக்குமா என்ற சந்தேகம் தனக்கு ஏற்பட்டுள்ளதாக ஏக்னலிகொடவின் மனைவி சந்தியா தெரிவித்துள்ளார்.

கொழும்பில் செய்தியாளர் கூட்டம் ஒன்றில் சந்தியா ஏக்னலிகொட கருத்து வெளியிட்டார்.

காணாமல்போன தன் கணவர், வெளிநாடொன்றில் அரசியல் தஞ்சம் பெற்று வாழ்ந்துவருவதாக 2011ல் ஐநா மன்றத்தின் மனித உரிமை கவுன்சிலில் மொஹான் பீரிஸ் கூறியிருந்ததை சந்தியா சுட்டிக்காட்டினார்.

ஆனால் 2012ஆம் ஆண்டு ஏக்னலிகொட சம்பந்தமான வழக்கில் நீதிபதி ஒருவர் முன்பு சாட்சியமளிக்கையில், ஏக்னலிகொட இருக்கும் இடம் கடவுளுக்கு மட்டுமே தெரியும் என்று மொஹான் பீரிஸ் கூறியிருந்ததையும் சந்தியா நினைவுகூர்ந்தார்.

இவ்வாறாக தனது கணவன் விஷயத்தில் முன்னுக்குப் பின் முரணாகப் பேசிய ஒருவர் நாட்டின் தலைமை நீதிபதியாகியிருக்கும் சூழலில், நியாயம் கிடைக்குமா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக அவர் கவலை தெரிவித்தார்.

மொஹான் பீரிஸ் தலைமை நீதிபதியாக இருக்கும் பட்சத்தில் வடக்கு கிழக்கு மக்களுக்கு நியாயம் கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளதாக காணாமல்போனோவர் சம்பந்தமாக குரல்கொடுத்துவரும் அமைப்பின் செயலாளர் சுந்தரம் மகேந்திரன் இந்த செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.

வடக்கு கிழக்கு தமிழ் மக்களுடைய நிலங்கள் அபகரிக்கப்படுவதற்கு எதிராக நீதிமன்றம் சென்று நியாயம் பெறுவதற்கான கதவும் மொஹான் பீரிஸ் தலைமை நீதிபதியாகியுள்ள நிலையில் அடைபட்டுவிடும் என்று தான் கருவதாக மகேந்திரன் கூறினார்.

காணாமல்போனவர்கள், அரசியல் கைதிகள் ஆகியோர் தொடர்பாகவும் நியாயம் கிடைக்காமல் போகும் வாய்ப்புள்ளது என்றும சுந்தரம் மகேந்திரன் குறிப்பிட்டார்.

மொஹான் பீரிஸ் சட்ட மா அதிபராக இருந்த காலகட்டத்தில் இவ்வாறான வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன என்று அவர் குற்றம்சாட்டினார்.

செய்தியோடு தொடர்புடைய இணைப்புகள்

தொடர்புடைய விடயங்கள்

BBC © 2014 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.