வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் தொகை குறைகிறது : நுவரெலியாவில் கூடுகிறது

கடந்த வருடம் புதுப்பிக்கப்பட்ட வாக்காளர் பதிவுகளின்படி, வன்னி தேர்தல் மாவட்டத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொகை ஆறிலிருந்து ஐந்தாகக் குறைக்கப்பட்டிருப்பதாக வவுனியா உதவித் தேர்தல் ஆணையாளர் கே.எஸ்.கருணாநிதி தெரிவித்துள்ளார்.

2001 ஆம் ஆண்டு இருந்த வாக்காளர்களிலும் பார்க்க 2012 ஆம் ஆண்டு இந்தத் தேர்தல் மாவட்டத்தின் வாக்காளர் தொகை 2213 வாக்காளர்களினால் குறைவடைந்திருப்பதையடுத்தே இந்த நிலைமை ஏற்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வவுனியா, மன்னார், முல்லைத்தீவு ஆகிய மூன்று மாவட்டங்களையும் உள்ளடக்கிய வன்னி தேர்தல் மாவட்டத்தில் 2011 ஆம் ஆண்டு பதிவின்படி, 2 லட்சத்து, 21 ஆயிரத்து, 409 வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டிருந்தது. 2012 ஆம் ஆண்டு பதிவுகளின்போது, இது 2 லட்சத்து, 19 ஆயிரத்து, 196 ஆகக் குறைந்துள்ளது. இதனால் இந்த மாவட்டத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை ஆறில் இருந்து ஐந்தாகக் குறைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, நுவரெலியா மாவட்டத்தில் 2012 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி, முந்திய வருடத்திலும் பார்க்க வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதனால் அந்தத் தேர்தல் மாவட்டத்தின் நாடாளுமன்ற உறுப்பினர் எண்ணிக்கையில் ஒன்று அதிகமாகியிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்திருககின்றனர்.

வன்னி தேர்தல் மாவட்டத்தில் வவுனியாவில் கடந்த வருடம் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்போது வாக்காளர்களின் எண்ணிககை குறைவடைந்துள்ள அதேநேரம், மன்னார் மாவட்டத்தில் சிறு அளவில் அதிகரித்திருப்பதாகக் கணிக்கப்பட்டுள்ளது.

வவுனியாவில் குடியிருந்த பலர், வேறு மாவட்டங்களுக்கு இடம்பெயர்ந்து சென்ற காரணத்தினால் இவ்வாறாக வாக்காளர் எண்ணிக்கை குறைவடைந்திருக்கலாம் என்று நம்பப்படுகின்றது.