'இரத்தினபுரி மாவட்டத்தில் இனவாதத் தாக்குதல்கள்'

சபரகமுவை மாகாணசபைத் தேர்தல் முதற்தடவையாக சிறுபான்மைத் தமிழ்க்கட்சிகள் இரண்டு ஆசனங்களை வென்றன.
Image caption கடந்த சபரகமுவை மாகாணசபைத் தேர்தலில் முதற்தடவையாக சிறுபான்மைத் தமிழ்க்கட்சிகள் இரண்டு ஆசனங்களை வென்றன.

இலங்கையில் இரத்தினபுரி மாவட்டத்தில் உள்ள தமிழ்த் தோட்டக் குடியிருப்புகள் மீது அண்மைக் காலமாக இனவாதத் தாக்குதல்கள் அதிகளவில் நடந்துவருவதாக ஆளுங் கூட்டணி அரசாங்கத்தின் பங்காளிக் கட்சியான இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் சபரகமுவ மாகாணசபை உறுப்பினர் கூறுகிறார்.

வேவல்வத்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அலுபொல என்ற தோட்டத்திற்குள் நுழைந்த கோஷ்டி ஒன்று இன்று புதன்கிழமை அதிகாலை தாக்குதல் நடத்தியுள்ளது.

இந்த சம்பவத்தில் இருதரப்பினருக்கும் இடையில் ஏற்பட்ட மோதலில் காயப்பட்ட மூன்றுபேர் பலாங்கொடை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் சபரகமுவை மாகாணசபை உறுப்பினர் கணபதிப்பிள்ளை ராமச்சந்திரன் பிபிசி தமிழோசையிடம் கூறினார்.

அண்மைக் காலங்களில் இவ்வாறான பல தாக்குதல் சம்பவங்கள் இப்பகுதியில் நடந்துள்ளதாகவும் அதுபற்றி தமது கட்சித் தலைமை அரசாங்கத்தின் உயர்மட்டத்துக்கு அறிவித்துள்ளதாகவும் ராமச்சந்திரன் கூறினார்.

இனவாத அரசியல்வாதிகளே இந்தத் தாக்குதல்களின் பின்னணியில் இருப்பதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.

அலுப்பொல தோட்டத்தில் நடந்த தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து, அப்பகுதியில் பொலிஸ் காவலும் சிறப்பு பொலிஸ் ரோந்து நடவடிக்கையும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் சபரகமுவ மாகாணசபை உறுப்பினர் மேலும் குறிப்பிட்டார்.

1998-ம் ஆண்டில் வேவல்வத்தையில் இனவாதிகளின் வன்முறையில் தோட்டக் குடியிருப்புகள் எரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

சபரகமுவை தேர்தல்

இதேவேளை, இதேபகுதியில் கலபொட என்ற தோட்டத்திலும் நிவித்திகல என்ற இடத்தில் தொலஸ்வல என்ற தோட்டத்திலும் பெல்மதுல்ல பகுதியில் கோணகும்புற, லெல்லுபிட்டிய ஆகிய தோட்டங்களிலும் தமிழர்கள் மீது அண்மைய நாட்களில் இனவாதத் தாக்குதல்கள் நடந்துள்ளதாக மனோ கணேசன் தலைமையிலான ஜனநாயக மக்கள் முன்னணி தெரிவித்துள்ளது.

கேகாலை, இரத்தினபுரி ஆகிய இரண்டு மாவட்டங்களை உள்ளடக்கிய சபரகமுவ மாகாணசபைக்கான தேர்தலில் மலையகத்தின் அனைத்துக் கட்சிகளும் இணைந்து இரண்டு உறுப்பினர்களை வென்றெடுத்த நிலையில், அப்பகுதி தமிழர்களை பாதுகாக்க அரசாங்கத்துடன் கூட்டுச்சேர்ந்துள்ள இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தலைமை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஜனநாயக மக்கள் முன்னணி விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் செய்தி குறித்து மேலும்