'தேர்தலில் போட்டியிட விருப்பம்' - தயா மாஸ்டர்

  • 25 ஏப்ரல் 2013

விடுதலைப்புலிகளின் முன்னாள் ஊடகத்துறை பேச்சாளராகிய தயா மாஸ்டர் (வேலாயுதம் தயாநிதி) வடமாகாண சபைக்கான தேர்தலில் போட்டியிடவுள்ளதாகத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாகத் தம்முடன் இரண்டு தரப்பனர் தொடர்பு கொண்டு கேட்டுள்ளதாகவும், தேர்தலில் போட்டியிடுவதற்குத் தான் விருப்பம் தெரிவித்திருப்பதாகவும் கூறிய அவர், அவர்களின் தீர்மானம் என்ன என்பது தெரியும் வரையில் இதனை உறுதிப்படுத்த முடியாதிருப்பதாகவும் தெரிவித்தார். இறுதிச் சண்டைகள் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, 2009 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் தயா மாஸ்டரும், விடுதலைப்புலிகளின் அரசியல்துறை பொறுப்பாளர் தமிழ்ச்செல்வனின் மொழிபெயர்ப்பாளராகிய ஜோர்ஜ் மாஸ்டரும் இராணுவத்தினரிடம் சரணடைந்து புலனாய்வு விசாரணைகளையடுத்து, நீதிமன்ற விசாரணைகளின் போது பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டிருந்தனர். அதன் பின்னர், யாழ்ப்பாணத்தில் இருந்து செயற்படுகின்ற தனியார் தொலைக்காட்சி நிறுவனத்தில் அவர் பணியாற்றி வருகின்றார். கடந்த வாரம் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்திருந்த பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச அவர்கள் தயா மாஸ்டரைச் சந்தித்துப் பேசியிருந்ததாகவும், வடமாகாண சபைத் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாகவே முக்கியமாகப் பேசப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தன. இந்தத் தகவல்களை தயா மாஸ்டர் மறுக்கவுமில்லை. உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தவுமில்லை என்பது குறிப்பிடத்தக்கது.