வடக்கில் தேர்தலுக்கு முன்னர் சிவிலியன் ஆளுநர் தேவை: ரனில்

  • 25 ஏப்ரல் 2013
Image caption ரணில் விக்ரமசிங்க

இலங்கையின் வட மாகாண சபைக்கான தேர்தலுக்கு முன்னர் அங்குள்ள இராணுவத்தைச் சேர்ந்த ஆளுநர் மாற்றப்பட்டு இராணுவத்தினர் அல்லாத ஒருவர் ஆளுநராக நியமிக்கப்பட வேண்டும் என்று எதிர்கட்சித் தலைவர் ரனில் விக்ரமசிங்க கோரியுள்ளார்.

அப்படி நியமிக்கப்படுபவர் வட மாகாண மக்களால் மட்டுமல்ல இலங்கையிலுள்ள அனைவராலும் அங்கீகரிக்கப்படக் கூடிய ஒருவராக இருக்க வேண்டும். அது மிகவும் அவசியம் எனவும் ரனில் தெரிவித்துள்ளார்.

வட மாகாண தேர்தல் 2009 ஆம் ஆண்டு மற்ற மாகாண சபைகளுக்கு தேர்தல் நடைபெற்ற போதே நடைபெற்றிருக்க வேண்டும் ஆனால் அரசு எவ்வித காரணமும் இல்லாமல் தேர்தலை ஒத்திப் போட்டுக் கொண்டே வந்தது என்று கூறும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர், அங்கு தேர்தல் சுதந்திரமாகவும் நியாயமான வகையிலும் நடைபெறும் சூழல் இல்லை என்றும் இன்று யாழ்ப்பாணத்தில் செய்தியாளர்களை சந்தித்த போது கூறியுள்ளார்.

"சர்வதேச பார்வையாளர்கள் தேவை"

Image caption வட பகுதியின் நிலை குறித்து பல்கட்சித் தலைவர்கள் கவலை

வட மாகாண சபைக்கான தேர்தலை மேற்பார்வை செய்ய சர்வதேச பார்வையாளர்கள் அவசியம் தேவை எனவும் ரனில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

அந்த சர்வதேச பார்வையாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்யப்படுவது தொடங்கி, வாக்குகள் எண்ணி முடிக்கப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் வரை இருக்க வேண்டும் எனவும் அவர் கோரியுள்ளார்.

இலங்கையில் இந்த ஆண்டு நவம்பர் மாதம் காமன்வெல்த் நாடுகளின் உயர்மட்ட மாநாடு நடத்தப்பட்ட வுள்ள நிலையில், அந்த அமைப்பின் நாடுகளிலிருந்தும் பார்வையாளர்கள் வர வேண்டும் என்றும் அவர் மேலும் வலியிறுத்தினார்.

அவ்வகையில் இலங்கை அரசு நேர்மையாக தேர்தலை நடத்தினால் சர்வதேச சமூகம் இலங்கையை நம்ப ஆரம்பிக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.

நிபந்தனைகள்

எனினும் தேர்தல் நடைபெறுவதற்கு முன்னர் சுயாதீனமாகச் செயல்படக் கூடிய போலீஸ் ஆணையம், பொது சேவைகள் ஆணையம், தேர்தல் ஆணையம் மற்றும் நீதித்துறை ஆணையங்கள் அமைக்கப்பட வேண்டும் என்று கோரியுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர், அவை அமைக்கப்படுவதற்கு தமது கட்சி ஆதரவு அளிக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

வட மாகாண சபை தேர்தல் முறையாக நடைபெற்றாலே, அரசு உறுதியளித்த ஒரு விஷயத்தை செய்துள்ளது என்கிற எண்ணம் ஏற்படும் என்றும், அதன் பிறகு தேர்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் இதர பிரச்சினைகளை தீர்ப்பது தொடர்பிலான பணிகளை முன்னெடுத்துச் செல்வார்கள் என்றும் கூறும் ரனில் அவர்கள், தமது கட்சி அந்தத் தேர்தலில் போட்டியிடும் எனவும் யாழ்ப்பாணத்தில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.