'யுத்த காலத்தை விட அதிக பயத்துடன் வட- இலங்கை மக்கள்'

  • 27 ஏப்ரல் 2013
ரணில் குழுவினர் 4 நாள் விஜயமாக வட- இலங்கையில் உள்ளனர்
Image caption ரணில் குழுவினர் 4 நாள் விஜயமாக வட- இலங்கையில் உள்ளனர்

வட-இலங்கை மக்கள் யுத்த காலத்தைவிட தற்போது பயப் பீதியுடன் வாழ்வதாக அங்கு பயணம் செய்துள்ள நாட்டின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் உயர்மட்டக் குழுவினர் பிபிசியிடம் தெரிவித்துள்ளனர்.

மக்களின் உரிமைகளையும் காணிகளையும் அபகரிக்கும் வேலையில் அரசாங்கம் இறங்கியிருப்பதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.

தேசியப் பாதுகாப்பை போலவே நாட்டு மக்களின் வாழ்க்கையையும் பாதுகாக்க வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பு என்று வவுனியாவில் ரணில் விக்ரமசிங்க கூறியுள்ளார்.

வடமாகாண சபைக்கான தேர்தல் நடத்தப்படுமா இல்லையா என்பது கடவுளுக்குத்தான் தெரியும் என்றும் ரணில் தெரிவித்தார்.

இதேவேளை 'பொதுமக்களின் காணிகள் அபகரிக்கப்படுகின்ற வலிகாமம் பகுதிக்கு நாங்கள் சென்ற போது, எங்களை இராணுவத்தினர் தடுத்து நிறுத்தி, பாதுகாப்பு அமைச்சின் அனுமதியின்றி உள்ளே செல்ல அனுமதிக்க அவர்கள் மறுத்துவிட்டார்கள். ஆனால் எங்களுடன் வந்த உல்லாசப் பயணிகள், எந்தவிதமான தடைகளுமின்றி அந்தப் பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றிற்குச் சென்று அறையெடுத்துத் தங்கினார்கள். அவர்களை எவரும் தடுக்கவுமில்லை. இவ்வாறு அங்குள்ளவர்கள் கோமாளித்தனமாக நடந்து கொள்கின்றார்கள்' என்று பிபிசியிடம் பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.

வெறும் 250 ஏக்கர் பரப்புக் காணியைக் கொண்டிருந்த காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலைக்காக, எந்தவிதக் காரணமும் இல்லாமல் 3500 ஏக்கர் காணி அரசாங்கத்தால் எடுக்கப்பட்டிருப்பதாக கருணாநாயக்க கூறினார்.

அதேபோல, எவ்விதக் காரணமும் இல்லாமல் வலிகாமம் பிரதேசத்தில் 6400 ஏக்கர் பரப்புள்ள மக்கள் காணிகளையும் அரசாங்கம் அபகரித்துள்ளதாகவும் ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.

ரணில் விக்ரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி குழுவினர் நான்கு நாள் பயணமாக வட-இலங்கை சென்றுள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் இரண்டு நாள் பயணத்தை முடித்துக்கொண்டு கிளிநொச்சி சென்ற ரணில் குழுவினர் இன்று சனிக்கிழமை பிற்பகல் வவுனியா சென்று கட்சி உறுப்பினர்களை சந்தித்துப் பேசியுள்ளனர்.