'ரணிலுடனான சந்திப்பில் எந்தப் பிரயோசனமும் கிடையாது'

  • 29 ஏப்ரல் 2013

இலங்கையின் எதிர்க்கட்சி தலைவருடனான சந்திப்பு மன்னார் மக்களுக்கு எந்தவிதமான பிரயோசனமும் இல்லாத ஒரு சந்திப்பாக அமைந்ததாக மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவரான அருட்தந்தை ஈ. செபமாலை அவர்கள் தெரிவித்துள்ளார்.

மன்னார் ஆயரின் முன்பாக மன்னார் பிரஜைகள் குழுவைச் சேர்ந்தவர்கள் ஞாயிற்றுக்கிழமை மன்னாருக்கு விஜயம் செய்த எதிர்க்கட்சிதலைவர் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து அவரிடம் மன்னார் மாவட்ட மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து முறையிட்டிருக்கிறார்கள்.

பிரஜைகள் குழுவின் ஏற்பாட்டின் பேரில் மன்னாரில் காணாமல் போனர்களின் உறவினர்களும் தமது குறைகளை அங்கு முன்வைத்திருக்கிறார்கள்.

அது குறித்து பிரஜைகள் குழுவின் தலைவரான அருட்தந்தை இ . செபமாலை அவர்களிடம் கேட்டபோது, தாம் காணிகள் பிரச்சினைகள் தொடர்பில் எதிர்க்கட்சி தலைவரிடம் முறையிட்டதாகவும், காணாமல் போனவர்களின் குடும்பத்தினர், மன்னாரில் காணாமல் போன 472 பேரின் பட்டியலை அவரிடம் கொடுத்து அவை குறித்து நாடாளுமன்றத்தில் பேசுமாறு எதிர்க்கட்சி தலைவரைக் கோரியதாகவும் கூறினார்.

ஆனால், எதிர்க்கட்சி தலைவரோ அவை குறித்து எந்த விதமான பதில் கருத்தும் கூறவில்லை என்றும் மாகாணசபைத் தேர்தல் போன்ற விடயங்கள் குறித்தே பேசியதாகவும் அவர் கூறினார்.

இதனால் தமது மாவட்ட மக்களுக்கு அவருடனான அந்தச் சந்திப்பினால் எந்தவிதமான பலனும் கிடையாது என்றே தான் நம்புவதாகவும் அவர் கூறினார்.

.