வலிகாமம் காணிப் பிரச்சினை: 5000 வழக்குகள் தாக்கல் செய்யப்படுகின்றன

  • 30 ஏப்ரல் 2013
Image caption வட இலங்கையில் இராணுவத்தினரின் ஆதிக்கம் அதிகம் என்று குற்றச்சாட்டு

வட இலங்கையின் வலிகாமம் பகுதியில் பொது மக்களின் நிலங்களை இராணுவம் கையப்படுத்த எடுத்து வரும் முயற்சிகளுக்கு எதிராக பாதிகப்பட்டுள்ளவர்களின் சார்பில் ஐயாயிரம் வழக்குகள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இராணுவத்தினரின் நடவடிக்கை தொடர்பில், பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்கள் தனித்தனியாக நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யவுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

நாட்டின் உச்சநீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டிருந்ததற்கு மாறாக இராணுவம் வலிகாமம் பகுதியில் ஆறாயிரத்துக்கும் அதிகமான ஏக்கர் நிலங்களை கையகப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவது நீதிமன்ற அவமதிப்புச் செயல் என்றும் தெரிவித்துள்ள கூட்டமைப்பினர், அது தொடர்பிலும் தனியாக ஒரு வழக்கு பதிவு செய்யப்படும் எனவும் கூறியுள்ளனர்.

பொதுமக்களின் சார்பில் வலிகாமம் பகுதியில் காணிகளைக் கையகப்படுத்துவதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கை தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் மாவை சேனாதிராஜா தாக்கல் செய்த வழக்கில் அங்கிருந்து இடம்பெயர்ந்த மக்களை அங்கேயே குடியேற்ற வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் ஏற்ககெனவெ உத்தாவிட்டிருந்தது என்று கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.

Image caption நிலங்கள் கையகப்படுத்தலுக்கு பல்கட்சியினர் எதிர்ப்பு

குறிப்பிட்ட பகுதிகளில் பொது மக்களின் காணிகளை கையகப்படுத்த இராணுவம் அறிவித்தல்களை ஒட்டியதை அடுத்து பொதுமக்கள் இதற்கு எதிரான போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

இதற்காக வலிகாமம் வடக்கு மற்றும் வலிகாமம் கிழக்கு பிரதேசங்களைச் சேர்ந்த காணி உரிமையாளர்களின் காணி உரிமைப் பத்திரங்கள் மற்றும் சம்பந்தப்பட்ட ஆவணங்களைப் பரிசீலனை செய்து விபரங்களைத் திரட்டும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டிருப்பதாகவும் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் கூறினார்.

இதற்கிடையில் வவுனியா செட்டிகுளம் பிரதேசத்தில் வீரபுரம் பகுதியில் தமிழ்க் குடும்பங்களுக்கு 18 ஆண்டுகளுக்கு முன்னர் வழங்கப்பட்டிருந்த 400 ஏக்கர் விவசாய காணிகளில் சிங்களக் குடும்பங்களைக் குடியேற்றுவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் குற்றம் சுமத்தியிருக்கின்றார்.